க்ரைம் திரில்லர் ஜானர் படங்களில் இது ரொம்ப புதுசு – விஜய் ஆண்டனி!

க்ரைம் திரில்லர் ஜானர் படங்களில் இது ரொம்ப புதுசு – விஜய் ஆண்டனி!

‘தமிழரசன்’, ‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ என இந்த ஆண்டு தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்திருக்கும் நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘ரத்தம்’. ஊடகத்துறை மற்றும் அரசியல் துறையை மையப்படுத்திய க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், வழக்கமான க்ரைம் திரில்லர் படம் போல் அல்லாமல் இதுவரை நாம் பார்த்திராத க்ரைம் திரில்லர் படமாக இருக்கும், என்று படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘தமிழ்ப் படம்’ புகழ் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போரா, ஜி.தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு, கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்ய, செந்தில் ராகவன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். வரும் அக்டோபர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ரத்தம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் நாயகன் விஜய் ஆண்டனி ரத்தம் படம் குறித்து “இயக்குநர் சி.எஸ்.அமுதன் என்னிடம் கதை சொன்ன போது ரொம்ப புதியதாக இருந்தது. க்ரைம் திரில்லர் ஜானர் படங்கள் பல வந்திருக்கிறது, நானும் சில படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், அமுதன் சொன்ன விசயம் புதிதாக இருந்ததோடு, தற்போது உலகம் முழுவதும் நடக்க கூடிய ஒன்று தான் என்பதால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். இத்தனைக்கும் நானும், இயக்குனர் சி.எஸ்.அமுதனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நெருங்கிய நண்பர்கள். ‘நான்’ படத்தை முடித்த பிறகு அவரது இயக்கத்தில் நான் நடித்திருக்க வேண்டும். இத்தனை வருடங்களாக அந்த வாய்ப்பு நழுவி, இப்போது ‘ரத்தம்’ என்ற பொலிடிக்கல் திரில்லர் மூலம் இணைந்துள்ளோம். ஏற்றத்தாழ்வு குறித்து உருவான ‘ஒரு நாள்’ பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார். . பத்திரிகை மற்றும் ஊடகப் பின்னணியில் நடக்கும் கதை என்பதால், அதன் உண்மைத்தன்மை மாறாமல் படமாக்கியுள்ளோம். கொலையாளி யார் என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டு, அதன் பின்னணி மற்றும் அது பற்றி விசாரிக்கும்போது நடக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் பற்றி சொல்கிறோம். சமூக வன்மங்களையும், சம்பந்தமே இல்லாதவர்களின் குரூரங்களையும் பற்றி சொல்லும் இப்படத்துக்கு ‘வன்மம்’ என்ற பெயர் பரிசீலனை செய்யப்பட்டு, பிறகு ‘ரத்தம்’ என்று மாற்றப்பட்டது. இதில் நான் பத்திரிகை எடிட்டர் கேரக்டரில் நடித்துள்ளேன். தெலுங்கில் ‘தோஷி’ என்ற பெயரில் இப்படம் டப்பிங் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா என மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால் மூன்று பேருமே எனக்கு ஜோடியில்லை. ஏன் என்று இயக்குநரிடம் கேட்டால், அப்படிப்பட்ட கதை என்று சொல்லிவிட்டார்.” என்றார்.

படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துக்கொண்ட இயக்குநர் சி.எஸ்.அமுதன், “ “ஊடகத் துறை மற்றும் அரசியல் துறையை மையப்படுத்திய க்ரைம், திரில்லர், ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ளது இப்படம். ஆனால், வழக்கமான க்ரைம் திரில்லர் படம் போல் அல்லாமல் இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத க்ரைம், திரில்லர் படமாக இது இருக்கும்…, அவரே சொன்னது போல் நானும் விஜய் ஆண்டனியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், அதனால் அவரை எனக்கு நண்பராக முன்பே தெரியும். நான் தமிழ்ப் படம் படத்தை முடித்த போது, அவர் நான் படத்தில் நடித்திருந்தார். அப்போதே இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று பேசினோம், ஆனால், எங்களால் பண்ண முடியவில்லை. ஒரு நாள் ஏன் எனக்கு படம் பண்ண மாட்டீங்களா என்று விஜய் ஆண்டனியிடம் கேட்ட போது, அவர் கதை கூட சொல்ல வேண்டாம், வாங்க படம் பண்ணலாம் என்று அழைத்தார், அப்படி தான் இந்த படம் தொடங்கியது.

நான் அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு பிடித்திருந்ததால் உடனே படப்பிடிப்பை தொடங்கினோம். படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால், இப்படி ஒரு படம் பண்ணுவதற்கு தைரியம் வேண்டும். காரணம், படத்தின் டிரைலர் உள்ளிட்ட விளம்பரத்திற்காக பயன்படுத்தக் கூடிய விசயங்களில் படத்தின் பேசுப்பொருளை எங்களால் சொல்ல முடியவில்லை, அது தான் படத்தின் சஸ்பென்ஸ் என்பதால் எங்கேயும் அதை எங்களால் சொல்ல முடியாத நிலை. அப்படிப்பட்ட கதையில் நடிக்க வேண்டும் என்றால் ஹீரோவுக்கு தைரியம் வேண்டும். பொதுவாக க்ரைம் திரில்லர் படத்தில் கொலையாளி யார்? என்பது தான் முக்கியமான அம்சமாக இருக்கும். ஆனால், நாங்கள் கொலை செய்வது யார்? என்பதை டிரைலரிலேயே காட்டி விட்டோம். அப்படி இருந்தோம் அதன் பின்னணியில் ஒரு மர்மம் இருக்கிறது, அது என்ன என்பது தான் ரசிகர்களை சஸ்பென்ஸுடன் பயணிக்க வைக்கும். அதேபோல், இந்த படத்தை இந்த வகையிலான படம், அப்படிப்பட்ட படம் என்று ஒரு வட்டத்திற்குள் சுருக்க முடியாது அல்லது இது இப்படிப்பட்ட படம் என்று வகைப்படுத்த முடியாத படம் என்று சொல்வேன்.

நான் இந்த படத்தின் திரைக்கதையை சொன்ன போது விஜய் ஆண்டனி, தன்னிடம் ‘ரத்தம்’ என்ற தலைப்பு இருக்கிறது, உங்கள் கதைக்கு சரியாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். நான் ‘வன்மம்’ என்ற தலைப்பை யோசித்து வைத்திருந்தேன். ஆனால், ரத்தம், வன்மம் இரண்டுக்குமே நெருக்கம் அதிகம் என்பதாலும், வன்மத்தை விட ரத்தம் பொருத்தமாக இருந்ததால் அந்த தலைப்பை படத்திற்கு வைத்தோம். அதே சமயம், வன்மத்தை காட்டி ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சொல்ல வேண்டிய விசயத்திற்கு எந்த அளவுக்கு தேவையோ அதை மட்டுமே காட்சியாக வைத்திருக்கிரோமே தவிர, ரசிகர்களை இழுப்பதற்காக தேவையில்லாத வன்முறை, செக்ஸ் காட்சிகளை வைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு துளி கூட இல்லை, அதை விட சஸ்பென்ஸான மற்றும் சுவாரஸ்யமான விசயங்கள் படத்தில் இருக்கிறது.

கதை முழுவதுமே ஊடகத்துறையை சுற்றி தான் நடக்கும். ஹீரோவே ஒரு பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் என்ன கண்டுபிடிக்கிறார்? என்பதை தான் திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம். ஆனால், இதற்கு மேல் படம் பற்றி எதுவுமே சொல்ல முடியாது. காரணம், திரையரங்கில் பார்க்கும்போது உங்களுக்கு புது அனுபவம் கிடைக்கும், அந்த அனுபவத்தை சிதைத்து விட கூடாது என்பதால் தான் இங்கு எதுவும் சொல்ல முடியவில்லை. அதேபோல் இதற்கு முன் வெளியான க்ரைம் திரில்லர் படத்தின் சாயல் ஒரு சதவீதம் கூட இதில் இருக்காது. க்ரைம் திரில்லர் ஜானர் படங்களில் இப்படி ஒரு படத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று தைரியமாக சொல்ல முடியும்.” என்றார்.

error: Content is protected !!