ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 : 8-வது முறையாக கோப்பையை வென்றது இந்தியா!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 : 8-வது முறையாக  கோப்பையை வென்றது இந்தியா!

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

அதாவது ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்தது இந்திய அணி. அந்த போட்டியில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்க வந்தநிலையில், மழை பெய்து ஆட்டம் தொடரமுடியாத காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அடுத்து நடைபெற்ற போட்டியில் நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றிபெற்றது. தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், 6 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. எனினும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதை அடுத்துஇன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதை அடுத்து ஆட்டம் ஆரம்பமானது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே பும்ரா அபாரமாக பந்து வீசி குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன் பின்னர் முகமது சிராஜ் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா 4 பேரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மேலும் தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சிராஜ் பவர்பிளே முடிவதற்குள் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதன்பின்னர் சிராஜ் மெண்டிஸின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் இஸான் கிஷன் களமிறங்கினர். இதில் கில் 27 ரன்களையும், கிஷன் 23 ரன்களையும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆசியக்கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

error: Content is protected !!