தமிழகமெங்கும் பரவும் ‘சுகர் டாடி-சுகர் பேபி’ கலாச்சாரம்!
தமிழகத்தின் பாரம்பரியக் கலாச்சாரச் சுவர்களுக்குள் சத்தமில்லாமல் ஒரு விபரீத ஊடுருவல் நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் ‘சுகர் டேடி சுகர் பேபி’ (Sugar Daddy Sugar Baby Dating). மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு நவீன வாழ்க்கை முறை போலத் தெரிந்தாலும், இதன் ஆழத்தில் புதைந்திருக்கும் சமூகச் சீரழிவுகளும், சட்டச் சிக்கல்களும் மிகவும் அபாயகரமானவை.
இது காதலல்ல… ஒரு கணக்கு!
இந்த உறவு எப்படிச் செயல்படுகிறது தெரியுமா? இங்கே இதயம் பேசுவதில்லை, பணப்பைதான் பேசுகிறது. இது வழக்கமான காதல் உறவு கிடையாது; ஆரம்பத்திலேயே போடப்படும் ஒரு தெளிவான ‘பிசினஸ் டீல்’. “நீ எனக்குத் துணையாக இருந்தால், நான் உனக்கு இவ்வளவு பணம் தருவேன்” என்பதுதான் இதன் அடிப்படை அஸ்திவாரம்.
-
பரிசு மற்றும் பணம்: வசதி படைத்த அந்த ‘சுகர் டாடி’, இளம் பெண்ணுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை (Allowance) வழங்குகிறார். கிரெடிட் கார்டு பில் கட்டுவது, வீட்டு வாடகை, கார் தவணை முதல் விலை உயர்ந்த ஐபோன் வரை எல்லாமே அந்த ‘டீலில்’ அடக்கம்.
-
பதிலுக்குத் துணை: இதற்குக் கைமாறாக அந்த ‘சுகர் பேபி’, அந்த நபருடன் நேரம் செலவிட வேண்டும். அவர் அழைக்கும் பார்ட்டிகளுக்குச் செல்ல வேண்டும், அவர் விரும்பும் போது அவருக்குத் துணையாக இருக்க வேண்டும்.
ஏன் இந்தப் பேராசை?
பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் காட்டப்படும் போலியான ஆடம்பர வாழ்க்கை மீதான ஈர்ப்புதான் இளைஞர்களை இந்தத் தப்பான பாதைக்குத் தள்ளுகிறது. கஷ்டப்படாமல் குறுகிய காலத்தில் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற பேராசை, மேலைநாட்டுக் கலாச்சாரமான இதை இந்தியப் பெருநகரங்கள் வழியாகத் தமிழகத்தின் தெருக்களுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
மறைந்திருக்கும் சமூக மற்றும் உளவியல் பேராபத்துகள்
-
பாலியல் சுரண்டல்: பல நேரங்களில் இது வெறும் துணையாக இருப்பதோடு நிற்பதில்லை. இறுதியில் பாலியல் உறவை நோக்கியே இது நகர்த்தப்படுகிறது. இது ஒரு மறைமுகமான ‘பாலியல் தொழில்’ (Transactional Intimacy) என்றே சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கப்படுகிறது.
-
அதிகார பலம்: பணம் கொடுப்பவரிடமே முழு அதிகாரமும் இருக்கும் என்பதால், அந்த இளம் பெண் ஒரு கட்டத்தில் அடிமை நிலைக்குத் தள்ளப்படுகிறார். இது கடும் மன அழுத்தத்தையும், சுயமரியாதை இழப்பையும் ஏற்படுத்துகிறது.
-
பாதுகாப்பு கேள்விக்குறி: மொபைல் ஆப் மூலம் நடக்கும் இந்தத் தொடர்புகளில், பின்னால் இருப்பது நல்லவனா அல்லது ஒரு கிரிமினலா என்று தெரியாது. ஏமாற்று வேலைகள், பிளாக்மெயில் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு அதிகம்.
சட்ட ரீதியான சிக்கல்கள் என்ன?
இந்தியச் சட்டப்படி, மேஜர் ஆன இருவர் பரஸ்பரம் சம்மதத்துடன் பழகுவதில் தடையுமில்லை; அது குற்றமுமில்லை. ஆனால், இந்தப் பணப் பரிமாற்றம் கலந்த உறவு பல இடங்களில் ‘விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின்’ (ITP Act) கீழ் வரக்கூடும்.
மேலும், அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து நேரும்போது, இது ஒரு ‘முறைப்படியான உறவு’ இல்லை என்பதால், சட்ட ரீதியான பாதுகாப்பைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, பணத்திற்காக உடல் ரீதியான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது சட்டத்தின் பார்வையில் கடுமையான குற்றமாகவே பார்க்கப்படுகிறது.
ஆந்தை ரிப்போர்ட்டர் பார்வை
உழைக்காமல் கிடைக்கும் பணம் ஒருபோதும் நிலைக்காது. ‘சர்க்கரை’ பூசப்பட்ட இந்த உறவு முறைகள், ஒரு கட்டத்தில் கசப்பாக மாறி வாழ்க்கையையே அழித்துவிடும். சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பக் கட்டமைப்பைச் சிதைக்கும் இதுபோன்ற கலாச்சாரங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் கடமை.
இளைஞர்/இளைஞிகளே… சொகுசு வாழ்க்கைக்காகச் சுயமரியாதையை அடகு வைக்காதீர்கள். நீங்கள் தேடுவது சர்க்கரை அல்ல, உங்கள் எதிர்காலத்தையே அரிக்கும் கரையான்!
நிலவளம் ரெங்கராஜன்



