பிணப்படங்களை விற்று பிழைப்பு? இந்திய ஊடகத்தினரின் அதிர்ச்சிப் போக்கு…! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பிணப்படங்களை விற்று பிழைப்பு? இந்திய ஊடகத்தினரின் அதிர்ச்சிப் போக்கு…! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து தங்களை மதச்சார்பற்ற முற்போக்காளர்களாக அடையாளம் காட்டும் பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவியலர், ஊடகத்தினர், திரைத்துறையினர் தொடர்ச்சியாக இந்தியாவின் இருண்டப் பக்கங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். முதலில் பண மதிப்பிழப்பு, பின்னர் ஜி எஸ் டி, பொருளாதார மந்தநிலை அப்புறம் இன்றையக் கொரோனா ஆகியவை அவர்கள் மோடியைக் குறி வைத்து தாக்குதல் நடத்தும் விஷயங்களாகவுள்ளன. இந்த நிலையில் சில ஊடகத்தினரின் போக்கு அதிர்ச்சிகரமாக இருப்பதாக சில ஏடுகள் தெரிவித்து வருகின்றன. பல மின்னணு ஊடகங்கள் இவ்விஷயத்தில் நடுநிலையோடு இருந்தாலும் சில ஊடகப் பிரபலங்கள் கொரோனா விஷயத்தில் கூட பிரபலமும், அனுதாபமும் கூடவே காசும் சேர்க்க ஆர்வப்படுவது இப்போது சர்ச்சையாக வெளிப்பட்டுள்ளது.

மோடியைக் குறை சொல்பவர்கள் பட்டியல் பெரியது. அதில் பல பிரபலங்கள் உண்டு. அதே போல மோடி ஆதரவு என்பதிலும் கண்மூடித்தனமாக இருந்து நடிகை கொங்கனா ரணாவத் போல சமூக ஊடகத் தடையைப் பெற்றவர்களும் உண்டு. மோடி எதிர்ப்பாளர்களில் ஊடகத்தினர் தனித்துக் காணப்படுகின்றனர். அவர்கள் மோடி நடந்தால் குற்றம், நின்றால் குற்றம், பேசினால் குற்றம், பேசாவிட்டாலும் குற்றம் என்று எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்பவர்கள். இவர்களில் அதிகம் பெயர் பெற்றவர் பர்கா தத். முன்பு நீண்ட காலம் என் டி டி வியில் பணிபுரிந்த அவர் தற்போது தனிப்பட்ட முறையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் களச் செய்தியாளராக பணிபுரிகிறார். முதல் ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் சென்று ஊரடங்கு எவ்வாறு மக்களை பாதித்துள்ளது என்று படம் பிடித்துக்காட்டினார். அதாவது நான்கு நாட்கள் இடைவெளி கொடுத்து மோடி அரசு ஊரடங்கு பிறப்பித்து விட்டதால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது இதன் சாராம்சம். ஆயினும் முதல் ஊரடங்கினால் கொரோனா பேரளவில் கட்டுப்பட்டது என்பதே உண்மை. இப்போது சிதைந்த வடிவ கொரோனாவினால் நாடு முழுதும் இல்லாவிட்டாலும் 10 மாநிலங்களில் நிலைமை மோசமாகி வருகிறது.

முதல் தொற்று காலத்தில் முதல் இடத்தில் இருந்த மும்பை இப்போதும் முதல் இடத்திலுள்ளது. பர்கா தத்தும் மும்பையில்தான் இருக்கிறார். சமீபத்தில் தனது தந்தை இறந்துவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பர்கா கடைசி நேரத்தில் தனது தந்தை தனக்கு மூச்சுத் திணறுகிறது;; சிகிக்சை அளியுங்கள் என்று கேட்டதாகக் கூறியுள்ளார். இதிலுள்ள குற்றச்சாட்டு மோடி அரசு போதுமான அளவு மருத்துவமனைகளை இரண்டாம் தொற்றுக்கு என்று ஏற்படுத்தவில்லை; அத்துடன் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதற்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே.

மராட்டிய மாநிலத்தில் ஓர் அரசு இருப்பதையே பர்கா மறந்துவிட்டார் போல. மாநில சுயாட்சி மாநிலங்களைக் கேட்காமல் ஊரடங்கு அறிவித்து விட்டார் மோடி என்று கூறியவர்கள் இப்போது இரண்டாம் அலையில் மாநிலங்களின் பங்கு பற்றி மறைத்துப் பேசுகிறார்கள். இடைப்பட்டக் காலங்களில் மத்திய அரசு ஏதும் செய்யவில்லை என்றாலும் கொரோனா குறைந்து வந்தக் காலகட்டத்தில் மாநில அரசுகள் இரண்டாம் அலைக்கு ஏன் தயாராகவில்லை என்பதை பர்கா தத் போன்றவர்கள் கூறுவதில்லை. இதில் மற்றொரு விஷயமும் உள்ளது. பர்கா தனது தந்தையை கார்ப்பரேட் மருத்துவமனைக்கே கூட்டிச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் யாரும் சோடைப் போனவர்கள் கிடையாது. அவர்களாலேயே வயதான தந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்ற செய்தியை பர்கா மறைந்து விட்டார். ஆனால் தனது தந்தையின் இறப்பிற்கு மத்திய அரசே காரணம் என்பது போல் பதிவிடுகிறார்.

இதே போல மற்றொரு குழு சென்றாண்டு ஆந்திராவில் விஷவாயு கசிந்து பலபேர் தெருக்களிலேயே இறந்தனர். அப்போது எடுக்கப்பட்டப் படங்களை கொரோனாவினால் இந்தியாவில் மக்கள் செத்து விழுகிறார்கள் என்பது போல சித்தரித்து செய்தி வெளியிடுகிறார்கள். இதை விட இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி பார்ட்டிகள் உண்டு. இவர்கள் சமீபத்தில் டெல்லியிலும், உ.பியிலும் கொரோனாவிலோ அல்லது வேறு வகையிலோ இறந்த மனிதர்களை எரிக்கும் படங்களை இணையதளங்களில் விற்பனை செய்து வருகிறார்களாம். இவை ரூ 23,000 வரையில் விலைக்கு கிடைக்கிறதாம். அதையும் கடந்து சீனப் பத்திரிக்கை ஒன்று இந்தியாவில் சடலங்களை மொத்தமாக எரிப்பதையும் தங்கள் நாட்டின் ராக்கெட் ஏவப்படும் போது வெளிப்படும் நெருப்பையும் ஒப்பிட்டு இந்தியாவை இழிவுபடுத்தியுள்ளது.

கருத்து மாறுபாடுகள் எங்கும் உண்டு. ஆனால் அந்நியர்களிடம் இந்தியாவை காட்டிக்கொடுக்கும்படியாக நடந்து கொள்வது சரியா என வினவினால் பதில்தான் இல்லை. இது தவிர லான்செட் எனும் லண்டன் இதழ் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 10 இலட்சம் பேர் கொரோனாவினால் இறந்து போவார்கள் என்று கணித்து எழுதியுள்ளதாம். இரண்டாம் அலை ஏன் பரவியது என்பதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. தேர்தல், கோயில் திருவிழாக்கள்தான் காரணம் என்றால் இதெல்லாம் நிகழாத மராட்டியம், டெல்லி, சத்திஸ்கர், ம.பி போன்ற மாநிலங்களில் ஏன் இரண்டாம் அலை மிக அதிகமாக இருக்கின்றது? மக்கள் அரசிடம் ஒத்துழைப்பை வழங்கவில்லை. சமீபத்தில் பதவியேற்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். நிலைமை அவ்வளவு சிக்கல்.

இதில் மோடி எங்கிருந்து வந்தார்? தமிழக அரசு கேட்டதை விட அதிக ஆக்சிஜனை வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. முழு ஊரடங்கு வராது என்று நம்புவோம் என்ற ஸ்டாலின் இப்போது மே 24 ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு இருக்காது என்று உறுதியளித்துள்ளதாகத் தகவல். ஆனால் மாற்று வழிகள் எதையும் பரிசீலிக்காமல், டெல்லி அரசு போல செய்யாமல், நேரடியாக முழு ஊரடங்கை ஏன் புதிய அரசு தேர்வு செய்தது என்பது புரியவில்லை. கெட்டப் பெயர் வந்து விடக்கூடாது என்பதாலா? அப்படி கெட்டப் பெயர் வாங்காமல் முதல் அலையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தடுப்பூசியையும் கொண்டு வந்து இரண்டு மாதங்களில் 17 கோடிப் பேருக்கு செலுத்தி, இதில் அதிகம் கொரோனா பரவியுள்ள மாநிலங்களில் அதிகம், தொடர்ச்சியாக நிதியாதாரங்களை முன் கூட்டியே விடுவித்த மத்திய அரசைப் பாராட்டா விட்டாலும் அயல் நாட்டில் கேவலப்படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா?

Related Posts

error: Content is protected !!