கொரோனா நிவாரண நிதி திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

கொரோனா நிவாரண நிதி திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

மிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் முதல் தவணையாக 2000 ரூபாயை பயணாளிகளுக்கு வழங்கி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அன்று ரூபாய் 4,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உறுதியளித்திருந்தார்.

இத்தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,66,950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.5.2021 அன்று பதவியேற்றவுடன் கையொப்பமிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.5.2021) தலைமைச் செயலகத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணையான 2000 ரூபாய் தொகையை வழங்கிடும் அடையாளமாக, 7 அரிசி குடும்ப அட்டைதாரர் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.

இத்தொகை நியாயவிலைக் கடைகள் மூலமாக 15.5.2021 அன்று முதல் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை விநியோகிக்கப்படும். இதற்கான முன்னேற்பாடாக 10.5.2021 முதல் 12.5.2021 வரை 3 நாட்கள் நியாயவிலைக் கடை பணியாளர்களால் வீடுதோறும் சென்று விநியோகிக்கப்படும் டோக்கன்களில், குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.