தமிழக மக்களுக்கு ரஜினி செய்யக்கூடிய ஒரே நன்றிக்கடன் எது தெரியுமா?

தமிழக மக்களுக்கு ரஜினி செய்யக்கூடிய ஒரே நன்றிக்கடன் எது தெரியுமா?

”தமிழ்நாட்டு மக்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்ருக்கார். அந்த கடன தீர்க்க அவர் அரசியலுக்கு வந்தே ஆகணும். சீயெம் பதவி வேணாம்னு ஒதுங்க கூடாது..”னு ஸ்ட்ராங்கா சொல்றார் ப்ரபசர் ஜி.ரமேஷ். – இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட், பெங்களூர்ல சென்டர் ஃபர் பப்ளிக் பாலிசில டீச் பண்றார். உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்றவர். ரஜினிய க்ளோசா வாச் பண்றவர்னு தெரியுது..

தமிழக அரசியல் வெறிச்சோடி கிடக்கிறது. காரணம் ரஜினிகாந்த். அவர் இன்னும் களம் இறங்கவில்லை. அதனால் வரப்போகும் தேர்தல் குறித்து சிந்திக்க முடியாமல் திகைக்கின்றன கட்சிகள்.சில முடிவுகளை தொடர்ந்து தள்ளிப்போட முடியாது. ஆம் அல்லது இல்லை என்று தீர்மானித்தாக வேண்டும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே, அப்படி. பூவா தலையா என்று நாணயத்தை சுண்டி விட்டாலும் சரி. முடிவு தெரிந்தாக வேண்டும். நன்மையா தீமையா, இப்போதா அப்புறமா, வெற்றியா தோல்வியா என்ற விவாதங்களுக்கு இப்போது இடம் இல்லை.

இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதக்கூடிய வல்லமை வாய்ந்த முடிவை எடுப்பதில் இதுவரை ரஜினி காட்டிய தயக்கம் போதும். கொரோனா பரவல் அவருடைய தள்ளிவைப்புக்கு கடைசிக் காரணமாக அமையட்டும். சிலர் சித்தரிப்பது போல ரஜினி ஒன்றும் சூனியத்தில் இருந்து தொடங்கவில்லை. கண்ணுக்கு தெரிந்த மிகப்பெரிய ரசிகர் படையும், வெளியே புலப்படாத இன்னும் பெரிய ஆதரவாளர் கூட்டமும் அவருக்காக காத்திருக்கிறது. கட்சிக்கான நிர்வாக சாசனம் எழுதப்பட்டு விட்டது. கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது முடிவாகி விட்டது. ஒவ்வொரு அடியும் எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதும் தீர்மானிக்கப் பட்டு விட்டது. பிறகு ஏன் ரஜினி அறிவிக்காமல் நிற்கிறார்?

தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். பல துறை வல்லுனர்களும் அதில் அடக்கம். அவர்களில் பலர் ரஜினிக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பல கட்சிகள் பின்னர் பாதையை தொலைத்து பாழாகி போனதை ரஜினி பார்த்திருக்கிறார். அப்படி தன் கட்சிக்கும் ஒரு நிலை வந்து விட்டால்..? என்ற அச்சம் அவரை பிடித்திருக்கிறது என சில ஆலோசகர்கள் நம்புகிறார்கள். அவ்வாறு நடக்காமல் தவிர்க்க இந்த இரண்டு கட்ட செயல் திட்டத்தை ரஜினியின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கிறேன்.

முதல் கட்டம்: கட்சியை நாளை அல்ல, இன்றே தொடங்குங்கள்.

இரண்டாம் கட்டம்: இரண்டு ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்து விட்டு, அதன் பின் தமிழகத்தை ஆன்மிக அரசியலுக்கு திருப்பி விட்டு தேசிய நீரோட்டத்தில் இணையுங்கள். .

விரிவாக சொல்கிறேன். முதல் கட்டத்தை பார்க்கலாம்.

இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள் பெரிய தலைவர்கள். மற்ற மாநில தலைவர்களிடம் இல்லாத தனித்தன்மை அவர்களிடம் இருந்தது. ஜாதி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகளை கடந்து மக்களின் உள்ளத்தை கவர்ந்தார்கள். அத்தகைய தலைவர் இப்போது இல்லை. ஆளுக்கு ஒரு வட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, முழுமையாக நம்பத்தகுந்த தலைவன் கிடைக்க மாட்டானா? என்ற ஏக்கம் எல்லா கட்சிகளின் தொண்டர்களுக்கும் இருக்கிறது.

இதை அரசியல் கொதிநிலை என்கிறோம். மாற்றத்துக்கு முந்தைய சுழற்சி. பார்ப்பதற்கு குழம்பிய குட்டையாக காட்சி தருகிறது. அதில் மீன் பிடிக்க தலைவர்கள் தயாராக இருக்கிறார் கள். உண்மையில் ஒரு அசைவுதான் இந்த கொதிநிலைக்கு தேவை. அதை கொடுக்க வல்லவர் ரஜினி ஒருவரே. ஸ்க்ரிப்ட் ரெடி. பாத்திரங்கள் தயார். லைட்ஸ் ஆன். ஆக்‌ஷன்! என்று ஒரு வார்த்தை இயக்குனர் வாயில் இருந்து வர வேண்டும். அதற்காக காத்திருக்கிறது மாநிலம்.
இவர் ஜாதி மதம் பார்க்க மாட்டார்; பணம் சம்பாதிக்க அலைய மாட்டார் என்று தமிழக மக்கள் யாரையாவது நம்புகிறார்கள் என்றால் அது ரஜினியைத்தான். குறுகிய நோக்கம் கொண்ட மற்றவர்களால் செய்ய முடியாத விஷயங்களை ரஜினி சுலபமாக சாதிக்க முடியும் என்று பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, எல்லா மட்டங்களிலும் ஊடுருவி கிடக்கிற ஊழலை அவரால் மட்டுமே ஒழிக்க முடியும் என நம்புகிறார்கள். எனினும், ஊழலை தாண்டியும் ஆழமான பிரச்னைகள் இருக்கின்றன.

மூன்று விஷயங்கள் அவர் மனதை குடைவதாக எனக்கு தோன்றுகிறது.

முதல்வர் நாற்காலியில் அமர விரும்பவில்லை என அவர் சொன்னது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். ஏன் என்றால், ரஜினியை நம்பும் அளவுக்கு அவரோடு இருப்பவர்கள் அல்லது இருக்கப் போகிறவர்களை எவரும் ந்ம்ப மாட்டார்கள். எனவே ரஜினி இப்படி செய்யலாம்: இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்து, ஆட்சியும் அரசு நிர்வாகமும் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று ஒரு பாதையை வகுக்கலாம். அந்த காலகட்டத்திலேயே, அவருக்கு பின் யார் முதல்வராக வருவது என்பதை எடை போட்டு தீர்மானிக்கலாம். அவருடைய தேர்வு சரியா என்பதை மக்களும் கண்கூடாக பார்க்க முடியும். இதை வெளிப்படையாக அறிவித்து விட்டே ஆட்சி அமைக்கலாம். முறையற்ற ஓர் ஆட்சி அமைய நாம் காரணமாக இருந்து விட்டோமோ? என்ற உறுத்தலை இதன் மூலமாக அவர் தவிர்க்கலாம்.

இரண்டாவது விஷயம், முதல்வர் பதவியை துறந்த பிறகு என்ன செய்வது என்பது. அது கடினம் அல்ல. பதவிகளுக்கு அப்பாற்பட்ட தலைவனாக, ஒரு ஸ்டேட்ஸ்மனாக, தன்னை உயர்த்திக் கொள்ளலாம். கிங் மேக்கராக, சமூகத்தின் மனசாட்சியாக மாறுவது அவருக்கு சிரமம் அல்ல. ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படக்கூடிய ஒரு அரசியல் இயக்கத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி இந்தியாவுக்கு எடுத்துக்காட்ட அவர் மெனக்கிடலாம். அதற்கு ஐந்தாண்டுகள் போதும். அப்புறம் ஒரு செயல் தலைவரை தேர்வு செய்து விட்டு, கட்சியின் நிறுவன தலைவராக எஞ்சிய காலத்தை நிம்மதியாக கழிக்கலாம்.

மூன்றாவது விஷயம் மத்திய அரசுடன் மாநிலத்தின் உறவு. இதில் அவர் கண்ணை மூடிக் கொண்டு எம்ஜிஆர் பாதையில் பயணம் செய்யலாம். எம்ஜிஆருக்கு தேசிய பார்வை இருந்ததே தவிர, தேசிய அளவில் கல்லா கட்டும் ஆசைகள் கிடையாது. தமிழகத்தின் நலனை மட்டுமே அவர் முதன்மையாக கொண்டிருந்தார். அப்படி உருவானதுதான் சட்ட மன்றத்தில் மூன்றில் இரண்டு, நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒன்று என தேர்தலுக்காக அவர் வகுத்த எம்ஜிஆர் ஃபார்முலா. தமிழகத்துக்கு அது பெரிதும் உதவியது. காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பலவீனப்பட்டு மாநில கட்சிகளுடன் ஜூனியர் பார்ட்னராக பங்கேற்கும் சூழல் உருவான பிறகு எம்ஜிஆர் ஃபார்முலா நீர்த்துப்போய் 2ஜி வரைக்கும் வந்தது எல்லாம் சமீபத்திய வரலாறு. மாநிலத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பதில் ரஜினி உறுதியாக இருக்க வேண்டும்.

இனி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு வருவோம்.

ரஜினி தமிழக நட்சத்திரம் மட்டுமல்ல. அவருடைய செல்வாக்கு எல்லை கடந்த ஒன்று. தென்னிந்தியாவில் அவரை நேசிக்கிறார்கள். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவரை ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கிறார்கள். இமேஜ் குறித்த எந்த கவலையும் இல்லாமல் இயற்கையான தோற்றத்தில் வளைய வரும் வேறு சூப்பர்ஸ்டாரை அவர்கள் கண்டது இல்லை. எளிமையான வார்த்தைகளில் வெளிப்படும் அவரது ஆன்மிக, தத்துவார்த்த சிந்தனைகளை அந்த மக்கள் பெரிதும் மதிக்கிறார்கள். ஆகவே சமூக அரசியல் சீர்திருத்தவாதியாக ரஜினி தனது எல்லைகளை விஸ்தரிப்பது சுலபம். முதல்வர் பதவியை விட்ட பிறகு, காமராஜர் பாணியில் ரஜினி ஒரு ஆலோசகராக, வழிகாட்டியாக மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளலாம். ஆனாலும் தமிழகத்தின் குரலாக அவரது கருத்தை மத்திய அரசும் மற்றவர்களும் எதிர்பார்ப்பார்கள்.

இந்தியா இன்று எப்படிப்பட்ட சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது என்பதை விவரிக்க தேவையில்லை. தேசத்தை முழுவதுமாக கட்டமைக்க வேண்டும் என்றால், ஆட்சி அதிகாரத்துக்கு அப்பாலும் மக்களால் மதிக்கப்படுகிற ஒரு தலைவன் அவசியம். ஊழலை ஒழிப்பது மட்டுமே நாட்டை சீரமைக்காது. ஏனென்றால் இந்த நாடு முன்னேற்ற பாதையில் செல்வதை விரும்பாத அந்நிய சக்திகளும் அவர்களுக்கு துணை போகும் உள்நாட்டு சக்திகளும் ஏராளமான கண்ணிகளை புதைத்திருக்கின்றன.

மக்களை பிளவுபடுத்தி ஒருவருக்கு எதிராக மற்றவரை திருப்பும் வேலையில் தீய சக்திகள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. அதற்கு அணை போட்டு, அனைத்து பிரிவு மக்களையும் இணைத்து தேச நலன் என்ற பொது நீரோட்டத்துக்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு நல்ல தலைவனுக்கு உண்டு. வெவ்வேறு மதங்களை சேர்ந்த ஆன்மிக தலைவர்களையும் ஒரே மேடைக்கு கொண்டுவந்து சேர்க்கும் ஆற்றல் ரஜினிக்கு இருக்கிறது. நதிகள் இணைப்பில் அக்கறை கொண்ட ரஜினி இந்திய மக்களின் இதயங்களை இணைக்கின்ற ஒரு சமூக பொறியாளராக புது அவதாரம் எடுக்க வேண்டும்.

சமூக அரசியல் சீர்திருத்தம் இதற்கு முன் எவரும் முயற்சி செய்யாத விஷயம் என்று சொல்லவில்லை. கடைசியாக 1970 களில் ஜெயபிரகாஷ் நாராயண் அந்த பொறுப்பை கையில் எடுத்தார். அவர் தேர்வு செய்தது போராட்ட பாதை. அது வன்முறைக்கு வழி வகுத்து நெருக்கடி நிலைக்கு இட்டுச் சென்றது. ஆனால் ரஜினி போராட்ட வழிமுறைக்கு எதிரானவர். அவருடையது யாருடனும் மோதல் இல்லாத அமைதி வழி.

டெயில்பீஸ்: ரஜினியின் தார்மிக குழப்பங்களை போக்கி, தனக்கான இடம் நோக்கி அவரை நடக்கவைப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். தமிழகத்தின் நலனுக்காகவும், திசை தெரியாமல் தவிக்கும் ஆதரவாளர்களுக்கு வழி காட்டவும் ரஜினி உடனே முடிவை அறிவிக்க வேண்டும். பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் கவலை தீர்க்க வரும் தடுப்பு மருந்து அதுவாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டுகாலமாக தனக்காக காத்திருக்கும் தமிழக மக்களுக்கு ரஜினி செய்யக்கூடிய ஒரே நன்றிக்கடனும் அதுவே.

யாரோ