ராகுல்காந்தியால் இனி பிரயோஜனமில்லை!
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் இடம் பெற்றிருக்கும் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது என்பதைத்தான் கவனிக்கிறோம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விட்டது என்று நினைக்கிறோம். ஆனால் அங்கேயும் காங்கிரஸுக்குப் பின்னடைவுதான்.ஜார்க்கண்ட்டில் பாஜக 21 தொகுதிகள் வென்றிருக்கிறது. காங்கிரஸ் 16. பாஜகவின் வாக்கு சதவிகிதம் 33.2%. காங்கிரஸ் 15.6%. சொல்லப் போனால் இந்தியா கூட்டணியிலேயே அதிக தொகுதிகள் வென்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியே 23.4% வாக்குகள்தான் பெற்றிருக்கிறது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் வேண்டும் என்று முன்னர் ஒரு முறை கலைஞர் பேசி இருந்தார். அது அமலுக்கு வந்திருந்தால் ஜார்க்கண்ட்டிலும் பாஜகதான் ஆட்சியைப் பிடித்திருக்க நேரிட்டிருக்கும்.இது போதாது என்று இடைத் தேர்தல்களிலும் உத்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், அஸ்ஸாம், மேகாலயா போன்றவற்றில் பாஜக அல்லது என்டிஏ கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.
எனவே காங்கிரஸைப் பொருத்த அளவில் எங்குமே கொண்டாடுவதற்கு என்று பெரிதாக எதுவுமில்லை. வயநாடு தேர்தலில் பிரியங்காவின் வெற்றி ஒன்றுதான் ஆறுதல். அங்கேயுமே கூட அவர்களுக்கு வெற்றி நோக்கமாக இருக்கவில்லை. வெற்றி வித்தியாசம்தான் நோக்கமாக இருந்தது. பிரியங்கா 5 லட்சம் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கட்சி செயல்பட்டது. அது நடக்கவில்லை. (4.1 லட்சம் வித்தியாசம்) பாஜக வேட்பாளர் சுமார் 1.1 லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறார். கேரளாவைப் பொருத்தவரை அதுவே அவர்களுக்கு சாதனைதான். வயநாட்டிலும் 2024 பொதுத் தேர்தலில் ராகுல் பெற்றதை விட 50 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பிரியங்காவுக்குக் கிடைத்திருக்கிறது.
நான் ராகுல் காந்தி மேல் பெரும் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் நல்லவர், அடித்தட்டு மக்களின் நலனில் அக்கறை உள்ளவர். இந்தியாவின் பன்முகத் தன்மையை போற்றுபவர். அதை ஊக்குவிக்க முனைபவர் போனற்றவற்றில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அவரால் வெற்றிகரமாக இயங்க முடியும் என்ற நம்பிக்கை நீர்த்துப் போய் சில காலமாகிறது. அவரால் குறிப்பிடத்தகுந்த தேர்தல் வெற்றிகளை ஈட்ட முடியும் என இன்றும் யாரேனும் நம்புகிறார்களா என்பது தெரியவில்லை. பாஜக எனும் அசுர சக்தியை தோற்கடிப்பது இருக்கட்டும். முதலில் காங்கிரஸ் கட்சியையே வலுப்படுத்த இயலுமா என்பதே சந்தேகமாக உள்ளது.
2019 பொதுத் தேர்தலுக்குப் பின் ராகுல் பதவி விலக வேண்டும் என்று நான் எழுதிய போது என்னை ‘பாஜக ஸ்லீப்பர் செல்’ என்று ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலாக பின்வரும் வரிகளை எழுதினேன்: ‘என்னைப்பொருத்த வரை ராகுல் காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று விரும்புபவர்கள்தான் உண்மையில் பாஜக ஸ்லீப்பர் செல்கள்.’அந்தப் பதிவு எழுதிய இரண்டு வாரங்களில் ராகுலே காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். எனினும் தேசிய அளவில் அதிகாரபூர்வமற்ற தலைவராக இன்றும் தொடருகிறார். This is power without accountability. கட்சித் தலைவராக மக்கள் செல்வாக்கு எதுவுமற்ற வேறு ஒருவர் செயல்படுகிறார். இந்த முரணை காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தேர்தல் அரசியலில் தன்னால் நிஜமாகவே வெற்றிகரமாக செயல்பட இயலுமா என்பதை ராகுல் காந்தி தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து கடந்து பல காலமாகிறது.
டெயில் பீஸ்:
ராகுலை விட்டால் வேறு யார் தலைவர் பதவிக்கு வர முடியும்? வேறு யார் இருக்கிறார்கள்? … என்று கேட்கிறார்கள். அதாவது இந்தக் கேள்வியில் என்னை மாட்ட விட்டு விட்டோம்; கிடுக்கிப்பிடி போட்டு விட்டோம் என்கிற மாதிரி நினைக்கிறார்கள். இப்படி ஒரு கேள்வி கேட்கும் நிலைக்கு வந்து விட்டது; அதாவது இன்றைய காங்கிரசில் இருப்பவர்களிலேயே ராகுல்தான் ஆகச்சிறந்த ஆளுமை கொண்ட தலைவர் என்று சொல்வதே அந்தக் கட்சியை அவமானப்படுத்தும் விஷயம்தான் என்பதே கூட இவர்களுக்குப் புரியவில்லை. 140 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க ஒரு கட்சிக்கு ராகுலை விட்டால் வேறு நாதி இருக்கவில்லை என்பதுதான் இந்திய தேசம் எதிர்கொள்ளும் ஆகப்பெரிய சோகம்
– ஸ்ரீதர் சுப்ரமணியம்