கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு – ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி!

கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு – ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி!

ஜி 7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள காா்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.இந்த ஆண்டு ஜி -7 உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘பில்ட் பேக் பெட்டர்’ (Build Back Better) அதாவது சிறந்த வழியில் மீண்டு வருவோம் என்பதாக இருந்தது. மேலும் இந்த மாநாட்டில், கொரோனா வைரஸ், தடையற்ற வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மோடி உலக அளவில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். அதற்கு, ஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை தேவை என்று குறிப்பிட்டார்

ஜி-7 உச்சி மாநாட்டில் விருந்தினர்களாக இந்த நாடுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது . நம் இந்தியாவைத் தவிர, கொரியா குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்காவும் 2021 ஜி 7 உச்சி மாநாட்டில் விருந்தினர் நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன. ஜி -7 நாடுகளில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகியவை உறுப்பினர் நாடுகளாக உள்ளன. இந்த உறுப்பு நாடுகள் அனைத்தும் வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்துகின்றன. உச்சிமாநாட்டை நடத்தும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ​​ஜான்சன் (Boris Johnson) கடந்த ஆண்டு தொற்றுநோய்க்குப் பிறகு முதல்முறையாக ஒரு பெரிய நிகழ்வு நேரடியாக நடத்தப்படுவதைப் பார்ப்பது மிகவும் இனிமையானதாக இருக்கிறது என்று கூறினார்.

இன்றளவும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பிரிட்டனில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் (G7 Summit) பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். பிரதமர் தனது உரையில், ’கொரோனா பெருந்தொற்றை இந்தியா ஒட்டுமொத்த சமூகமாக இணைந்து எதிா்கொண்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியவும், தடுப்பூசிகளை நிா்வகிக்கும் பணியிலும் டிஜிட்டல் உபகரணங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது. உலக அளவில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். அதற்கு, ஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை தேவை. இனி வருங்காலத்தில் இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உலகளாவிய ஒற்றுமை இருக்க வேண்டும். இதில் வெளிப்படையான ஜனநாயக சமூகங்களுக்கு சிறப்புப் பொறுப்பு உள்ளது. கரோனா சிகிச்சை மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்யவும், கரோனா பரவலை தடுத்து சிகிச்சையளிக்க தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்கு வா்த்தகம் சாா்ந்த அறிவுசாா் சொத்துரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (டிரிப்ஸ்) இருந்து விலக்களிக்கவும் உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.