புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்களின் அனுபவமும் நுண்ணிய அறிவும் மத்திய அமைச்சரவைக்கு மேலும் வலுவூட்டும் என்று அந்த வாழ்த்து செய்தியில் மோடி கூறியுள்ளார்.புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றவுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களை மோடி தனது d விட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா அரசு அமைந்த பிறகு நேற்று 3-வது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர்,கோவா முதல்வராக பதவி ஏற்றதாலும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாலும் அவர்கள் வகித்த இலாகா காலியாக இருந்தது.
மேலும் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடந்ததால் ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய விரும்பினார். அடுத்து வயதான அமைச்சர்கள் இருந்ததால் அவர்களால் விரைவாக செயல்பட முடியவில்லை. இதனையொட்டி மூத்த அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்தனர். இதனையொட்டி மோடி, தனது அமைச்சரவையை 3-வது முறையாக நேற்று மாற்றியமைத்தார். இதில் 4 அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் உயரதிகாரிகளாக பதவி வகித்தவர்கள். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றவுடன் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
என் அமைச்சரவை சகாக்களான தர்மேந்திரா பிரதாப், பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி,உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய அனுபவமும் அறிவும் மத்திய அரசுக்கும் அமைச்சரவைக்கும் வலுவூட்டும் என்றும் அந்த வாழ்த்து செய்தியில் மோடி கூறியுள்ளார்.
டெயில் பீஸ்
இன்று பதவி ஏற்றவர்களில் ஏற்கெனவே இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை, பியூஸ் கோயலுக்கு ரயில்வே, சுரேஷ் பிரபுவுக்கு வர்த்தகம், தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே வகித்துவந்த பெட்ரோலியத்துறையோடு திறன் மேம்பாட்டுத்துறையையும் கவனிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன் ராதாகிருஷ்ணனுக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த பொறுப்புகளோடு நிதித்துறை (இணை)யும் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அதே பொறுப்பை தொடர்வார் என்றும் அதைப்போல ராஜ்நாத் சிங் (உள்துறை) மற்றும் சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு) ஏற்கெனவே அவர்கள் கவனித்து வந்த துறைகளில் நீடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.