பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!
ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை அனைத்து பெண்களுக்கும் இலவச கல்வி அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதேபோன்று தெலுங்கானா மாநிலத்திலும் திட்டம் உள்ளது. தெலுங்கானாவில் கிண்டர்கார்டன் முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பி.ஹெச்டி வரை இலவச கல்வி திட்டம் உள்ளது.இந்த அதிரடி திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
இது குறித்து கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறுகையில், “இந்த திட்டத்தால் 18 லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தால் ஏழைகள் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.
இந்த திட்டத்தின் படி மாணவர்கள் முதலில் கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர், அரசு செலுத்திய கட்டணத்தை திரும்ப அளிக்கும். தேர்வு கட்டணம் மட்டும் திரும்ப அளிக்கப்படாது.கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு குறைவாகவே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.