வேளாண் சட்டங்கள் ரொம்ப நல்லது – பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி பேச்சு!

வேளாண் சட்டங்கள் ரொம்ப நல்லது – பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி பேச்சு!

நாடாளுமன்றத்தில் 7 மாதங்களுக்கு முன்னர் 3 முக்கிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டன. 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 3 வேளாண் சட்டங்கள் மூலமாக பயனடைந்து உள்ளனர். பல அரசியல் கட்சிகள் இந்த சட்டங்களை ஆதரிக்கின்றன. சட்டங்கள் அமலாக்கப் படுவதை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவு எதுவாயினும் அதனை அரசு மதிக்கும்”என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

பார்லிமெண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து ஜனாதிபதி உரையாற்றினார்.

உயிர்க்கொல்லி கொரோனா தலைதூக்கியிருக்கும் காலக் கட்டத்தில் இந்தக் கூட்டத்தொடர் துவங்கியிருக்கிறது. புதிய ஆண்டு – புதிய தசமம் துவக்கம். இந்த ஆண்டு நாம் இந்திய சுதந்திரத்தின் 75–வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம் என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் 6 பேரை இந்த கொரோனா காலத்தில் நாம் இழந்து விட்டிருக்கிறோம்.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு 8 மாதங்களாக 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

ஏழை பெண்களுக்கு ஜன் தான் திட்டத்தில் ரூ.31000 கோடி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் 2200 ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு மிகவும் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கில் வென்டிலேட்டர்களும், பிபிஈ கவச உடைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உலகளவில் மிகப்பெரிய இடம் பிடித்துள்ளது என்றார்.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய கயாஜனா திட்டம் நாட்டில் 24000 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1½ கோடி மக்கள் ரூ.5 லட்சம் அளவுக்கு இலவச சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:–

சுகாதார வசதிகளை மேம்படுத்தும் போது நாட்டில் மருத்துவக்கல்வியும் அதிக கவனம் பெறுகிறது. இந்தியாவில் 2014–ம் ஆண்டில் 387 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. அது இப்போது 562 மருத்துவக் கல்லூரிகளாக உயர்ந்துள்ளது.

கர்ப்பிணிகளுக்கு சிறந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முத்ரா யோஜனா திட்டம் மூலம் பெண் தொழில்முனைவோர்கள் பலனடைந்துள்ளனர். 70 சதவீதம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜல் அபியான் திட்டத்தில் 3 கோடி குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன.

அரசின் கொள்கைகள் சிறு, குறு தொழில்முனைவோருக்கு சாதகமாக உள்ளன. நமது இளைய தலைமுறையினருக்கு புதிய கல்விக்கொள்கை பயனளிக்கும். அரசின் உதவித்தொகை மூலம் ஏராளமான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. அரசின் திட்டங்களால் மீனவ சமுதாயம் பயன்பெற்று வருகிறது. 3ம் பாலினத்தவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படவில்லை. புதிய பார்லிமென்ட் கட்டப்பட உள்ளது. பல்வேறு துறைகளில் தேவைப்படும் சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

வங்கித்துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளோம். இந்தியாவில் எளிதாக தொழில் துவங்குவதற்கான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுயதொழில் முனைவோரை ஊக்குவிக்க ஏதுவாக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. நக்சல் வன்முறையை குறைத்துள்ளோம். வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைகள் வெகுவாக குறைந்துள்ளது.

நாட்டில் உள்ள 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. காஷ்மீரில் அமைதியான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. தூத்துக்குடி – ராமநாதபுரம் இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. எல்லையில் நமக்கு சவால் விடுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்காக தங்களது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களை நாம் போற்றுகிறோம். நமது பாதுகாப்பு துறையை நவீனப்படுத்தி வருகிறோம். இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) பணிகளை கண்டு பெருமைப்படுகிறோம். வந்தே பாரத் திட்டத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன. சர்வதேச அளவில்,இந்தியாவிற்கு புதிய அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாடு சிறந்த வளர்ச்சி பெற்றுள்ளது.

150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்து

மின்சார செலவை குறைப்பதற்காக 33 கோடி எல்இடி மின் விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதுடன், 150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. சர்வதேச அளவில், தேவைக்கு ஏற்ப மருந்துகள் உற்பத்தியை இந்தியா உறுதிசெய்யும்.

ஒரு பிராந்தியத்திலிருந்து இன்னொரு பிராந்தியத்துக்கு 38,000 டன்னுக்கும் மேலான உணவு தானியங்களை போக்குவரத்து மூலம் கொண்டு செல்ல 100 கிசான் ரெயில்கள் துவக்கப்பட்டுள்ளன.

பால்வளத்துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கவும், கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியாக ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் பிரான் மந்திரி மத்ஸ்யா சம்பாதா யோஜனா திட்டத்தில் மீனவர்கள் வருமானத்தைப் பெருக்க, மீன்வளத்த்துறையில் ரூ.20,000 கோடி முதலீட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ராணுவ வல்லமையை இன்னும் வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ராணுவத்துறையில் தற்சார்புக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ரூபாய் 48 ஆயிரம் கோடி மதிப்புக்கு உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட போர் விமானங்கள் 83ஐ வாங்குவதற்கு எச்.ஏ.எல். நிறுவனத்திடம் ஆர்டர் தரப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தில் 7 மாதங்களுக்கு முன்னர் 3 முக்கிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 3 வேளாண் சட்டங்கள் மூலமாக பயனடைந்துள்ளனர். பல அரசியல் கட்சிகள் இந்த சட்டங்களை ஆதரிக்கின்றன. சட்டங்கள் அமலாக்கப்படுவதை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவு எதுவாயினும் அதனை அரசு மதிக்கும்.

இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.

Related Posts

error: Content is protected !!