பொங்கலோ பொங்கல்: தலைவர்கள் வாழ்த்து!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்மக்கள் வசித்துவரும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே எழுந்து புத்தாடை உடுத்து சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. நாளை மாட்டுப் பொங்கலும், அதற்கு அடுத்தநாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகைக்கு நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாசகர் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும். சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்
தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகை தருணத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் ஒரு அறுவடை திருநாள். அது நமது குடும்பங்களுக்கு அளப்பரிய, அபரிமிதமான மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்கிறது. தை மாத தொடக்கம் நமக்கு இயற்கையின் ஆசீர்வாதங்களையும், அறுவடையையும் வாரி வழங்குகிறது. அதற்காக இந்த நல்ல நாளில் நமது பிரார்த்தனைகளையும், நன்றியையும் தெரிவிப்போம்.
பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சி கொண்டாட்டம் அற்புதமான இயற்கை வழிபாடு பாரம்பரியத்தையும், தொன்று தொட்டுவரும் நமது பழக்க வழக்கங்கள் மற்றும் மிகப்பெரிய தமிழ் கலாசாரத்தையும், சந்தோசத்துடனும், பெருமையுடன் வழங்கட்டும்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:
பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலக மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் திருநாளாகவும், உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி சிறப்பித்துள்ளது. “உழன்றும் உழவே தலை” என்று வள்ளுவப் பெருந்தகை வேளாண்மையின் சிறப்பை கூறுகிறார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வேளாண் பெருமக்களின் வாழ்வு வளம் பெறும் வகையில், தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திட, புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் வழங்குதல், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், மண் ஆய்வின்படி உரமிட்டு உற்பத்தியை பெருக்கிட விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்குதல், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக விவசாயிகளுக்கு தரமான சான்றுபெற்ற விதைகள் வழங்குதல், விவசாயத்திற்கு அடித்தளமான நீர்வள ஆதாரங்களை தூர்வாரி மேம்படுத்திடும் வகையில் குடிமராமத்து திட்டம், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி, வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைத்திடும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 5318.73 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்தது, பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் 2980 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுத்தது, போன்ற எண்ணற்ற திட்டங்களை விவசாயப் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.பொங்கல் திருநாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:
எத்தனையோ விழாக்கள் வருகின்றன. மகிழ்ச்சி தருகின்றன. எனினும், பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியுடன், பெருமிதமும் கலந்திருக்கிறது. காரணம், இது தமிழர்களின் தனித்துவமான விழா. தமிழர் திருநாள் என்பதுடன், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது. உழைப்பின் உயர்வினை உலகுக்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும், அந்த உயர்வுக்கு உற்ற துணையாக நிற்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் இதயபூர்வ நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் நன்னாளை, தமிழினத்தின் ஆதிப் பழம்பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக, பண்பாட்டு மடை மாற்றம் ஏற்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு மகத்தானது.
கழகத்தினரைப் பொறுத்தவரை, பொங்கல் விழா என்பது தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு திராவிட இனத்தின் பண்பாட்டுத் திருவிழா. அந்த உணர்வுடன்தான் அன்றுதொட்டு இன்றுவரை பொங்கல் பெருவிழாவை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம். இந்தப் பொங்கல் நன்னாளில், கழகத்தின் பொதுச்செயலாளர் நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் அன்புக்கட்டளை ஒன்றை விடுத்திருக்கிறார். தமிழர் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் இணைத்துக் கொண்டாடும் கழகத்தினர், இரு வண்ணக் கொடியாம் நம் கழகக் கொடியை உயர்த்திட வேண்டும் என்பதே பேராசிரியர் அவர்கள் விடுத்துள்ள அன்புக் கட்டளை.
எனவே, பொங்கல் திரு நாளை தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி, பண்பாட்டு மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்த கழகத்தையும் தலைவர் கலைஞரையும் மறவாமல், வட்டங்கள் தோறும் வீடுகள் தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றிடுவோம்.
காற்றில் அந்தக்கொடி அசையும்போது தமிழ் உணர்வு நம் நெஞ்சமெல்லாம் பரவி நிறையட்டும்! தமிழ் நிலத்தைக் காக்கவும், தமிழினத்தை மீட்கவும் தமிழ் மொழிப்பெருமைகளைப் போற்றவும், அடுத்தடுத்து கழகம் பெறவிருக்கும் வெற்றிக்குக் கட்டியம் கூறுவது போல கழகக் கொடிகள் உயரட்டும். இல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும். இருவண்ணக் கொடி பறக்கட்டும். அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த இனிய பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வைகோ :
கடந்த சில ஆண்டுகளாக உழவர் பெருங்குடி மக்களின் வாழ்க்கை கண்ணீர் வெள்ளம் ஆயிற்று. உழுது பயிரிட்டு உலகத்திற்கு உணவு அளித்த விவசாயிகளின் விம்மல்கள் தணியவில்லை; பெருகிற்று. வெள்ளத்தால் புரண்டோடி வந்த நதிகளின் வெள்ளத்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த தண்ணீர் உரிமையை, அண்டை மாநிலங்கள் தடுக்கின்றன. மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கே துரோகம் இழைக்கிறது.
எத்தனை சோதனைகள், வேதனைகள் சூழ்ந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு தமிழ்நாட்டின் நலன்களைக் காக்கவும், பணநாயகத்திலிருந்து விடுவித்து, ஜனநாயகத்தைக் காக்கவும் தமிழக மக்கள் உறுதிகொள்ள வேண்டும். இருளுக்குப்பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்
ஜி.கே.வாசன்:
தமிழகத்தில் இனிமேல் நல்லதே நடக்க வேண்டும். தீயவை ஒழியவேண்டும். நிச்சயமற்ற தன்மை நீங்கவேண்டும் தமிழர்களின் இல்லந்தோறும் பொங்கல் பொங்குவது போல் மகிழ்ச்சி பொங்கி மங்கலம் பெருகவேண்டும்.இறைவனும் இயற்கையும் நமக்கு துணை நிற்க வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சு. திருநாவுக்கரசர் :
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் தனது வாழ்த்துச் செய்தியில், எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் இவ் உவகைத் திருநாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ எனது மனநிறைந்த பொங்கல் வாழ்த்துக்களை எனது சார்பிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நெடிய மரபுவழி நம்பிக்கை. மனித உரிமைகள் பறிப்பு, மத்தியில் அதிகார குவியல், மக்கள் நல்லிணக்கத்தை சிதைக்கும் மதவெறி பேச்சுக்கள், அறிவியலுக்கு பொருந்தாத சாதி எனும் தப்பெண்ணம் ஒரு பக்கம் செல்வகுவியல், மறுபக்கம் ஏழ்மை எனும் நிலைமாறி ஒரு சமதர்ம சமூகம் நோக்கி நடைபோட பொங்கல் திருநாளில் சபதமேற்போம்.
விஜயகாந்த்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைப்போரே உயர்ந்தவர் என்ற அடிப் படையில் உழைப்புக்கு மரியாதை தரும் நாள் பொங்கல் திருநாளை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டு உற்றார் உறவினர்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.
டி.டி.வி.தினகரன்:
டிடிவி தினகரன் எம்எல்ஏ வாழ்த்து செய்தியில், இயற்கை அருளாலும் தங்கள் கடின உழைப்பின் பலனாலும் இறை வனை வணங்கி தம் மோடு உழைத்திட்ட கால்நடைகளுக்கும் தனது நன்றியினை யையும் மகிழ்ச்சி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் கமல்ஹாசன்:
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இனி விதைப்பது நற்பயிராகட்டும் என்றும் வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு என்றும் பொங்கல் வாழ்த்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.