32°C
விளம்பரம்
Advertisement

இயற்கையின் ரகசியம் உடைத்த நாயகன்: சார்லஸ் டார்வின் தினம்!

admin Published: February 12, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


னித இனம் எப்படித் தோன்றியது? நாம் எங்கிருந்து வந்தோம்? – பல நூற்றாண்டுகளாக விடை தெரியாமல் இருந்த இந்தக் கேள்விகளுக்கு, ஒரு கப்பல் பயணத்தின் மூலம் விடை கண்டு, உலகச் சிந்தனைப் போக்கையே மாற்றியவர் சார்லஸ் டார்வின். இன்று (பிப்ரவரி 12) அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘டார்வின் தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

டார்வின் தினம்: உருவான பின்னணி

அறிவியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய டார்வினின் பங்களிப்பை நினைவுகூர, 1997-ல் நியூயார்க் பேராசியர் மாசிமோ பிக்லியூசி என்பவரால் இந்தத் தினம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் 2015-ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு, இன்று சர்வதேச அளவில் பிப்ரவரி 12-ம் தேதி ஒரு முக்கிய தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

மருத்துவப் படிப்பும்… மனமாற்றமும்!

இங்கிலாந்தின் ஷ்ரூஸ்பரி பகுதியில் பிறந்த டார்வினை, அவரது தந்தை ஒரு மருத்துவராகப் பார்க்கவே ஆசைப்பட்டார். ஆனால், ரத்தத்தைக் கண்டாலே அஞ்சிய டார்வினுக்கு, மருத்துவப் பாடங்களை விட இயற்கையை உற்று நோக்குவதில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது. இதனால் படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.

அவரது ஆர்வத்தைக் கண்ட தாவரவியல் பேராசிரியர் ஹென்ல்ஸோ, 1831-ல் அவருக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கினார். அதுதான் ‘பீகிள்’ (HMS Beagle) என்ற கப்பலில் இயற்கை ஆராய்ச்சியாளராகப் பயணிக்கும் வாய்ப்பு. ஆரம்பத்தில் தந்தை மறுத்தாலும், மாமா ஜோசியாவின் ஆதரவுடன் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தைத் தொடங்கினார் டார்வின்.

பீகிள் பயணம்: ஒரு ஐந்து ஆண்டு அனுபவப் பாடம்

எந்தச் சம்பளமும் இல்லாத அந்த 5 ஆண்டு காலப் பயணம், டார்வினின் அறிவை விசாலமாக்கியது. அவர் சென்ற இடமெல்லாம் உயிரினங்களைச் சேகரித்தார். குறிப்பாக, கலாபகஸ் தீவுகளில் அவர் கண்ட பறவைகள் (Finches) அவரை வியக்க வைத்தன.

  • ஒரே வகை பறவைகள், வெவ்வேறு தீவுகளில் தங்களுக்குக் கிடைக்கும் உணவுக்கு ஏற்ப தங்களின் அலகுகளை மாற்றிக் கொண்டிருந்தன.

  • இதிலிருந்தே ‘இயற்கைத் தேர்வு’ (Natural Selection) மற்றும் ‘தகவமைப்பு’ (Adaptation) போன்ற புரட்சிகரமான கொள்கைகளை அவர் உருவாக்கினார்.

வாசிப்பும்… எழுத்தும்…

டார்வின் வெறும் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும்கூட. தான் பார்த்த ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு டைரியில் துல்லியமாகப் பதிவு செய்தார். லயல் எழுதிய புவியியல் புத்தகமும், மால்தூஸின் மக்கள்தொகை கொள்கையும் அவரது சிந்தனைக்கு உரமிட்டன. இந்தப் பயணத்தின் இறுதியில் அவர் எழுதிய ‘பீகிள் கடற்பயணம்’ என்ற நூல், அவரை முன்னணி அறிவியலாளர்கள் வரிசையில் அமர்த்தியது.

குரங்குகளின் வாரிசா மனிதன்?

டார்வினின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, மனிதர்கள் குரங்கு இனத்தின் வாரிசுகள் என்பதுதான். “வாலில்லா குரங்குகளுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” என்று அவர் ஆதாரங்களுடன் சொன்னபோது, அன்றைய சமூகம் கொதித்தெழுந்தது.

  • எதிர்ப்புகள்: பல மத நம்பிக்கையாளர்கள் அவரை எதிரியாகப் பார்த்தனர். அவரை ஒரு குரங்கு போலவே வரைந்து கேலிச் சித்திரங்கள் வெளியிட்டு அவமானப்படுத்தினர்.

  • டார்வினின் அமைதி: “தன்னுடைய கொள்கைக்குப் பின்னால் உண்மை இருக்கிறது” என்று உறுதியாக நம்பிய டார்வின், அந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கவில்லை. தனது அறிவியல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

பரிணாமவியலின் தந்தை

இன்று உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் டார்வினின் கொள்கைகளைத்தான் படிக்கிறார்கள். உயிரியல் துறையில் அவர் போட்ட அந்த அடித்தளம் இல்லையென்றால், இன்று நாம் அடைந்துள்ள பல மருத்துவ மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் சாத்தியமாகி இருக்காது. அதனால்தான் அவர் இன்றும் ‘பரிணாமவியலின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.

இயற்கையின் மீது தீராத காதல் கொண்டிருந்த ஒரு மனிதன், கடும் எதிர்ப்புகளையும் தாண்டி உண்மையை நிலைநாட்டிய கதைதான் டார்வினின் வாழ்க்கை.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

உடனடி செய்திகள்