கொரோனா 3 வது அலை : பிரான்ஸில் ஒரு மாத ஊரடங்கு!

மக்களைப் பாடாய்படுத்தும் கொரோனா 3 வது அலையை தடுக்க, பாரீஸ் உள்ளிட்ட 15 நகரங்களில் ஒரு மாத ஊரடங்கை பிரான்ஸ் அரசு பிறப்பித்துள்ளது.
ஒரு வருசத்துக்கு முன் தலைக் காட்டிய கொரோனா வைரஸ், இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. வைரஸ் பரவல் சற்று குறைவதும் பின்னர், அடுத்த அலையாக பரவுவதும் என இன்னமும் வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தியபடியே உள்ளது. தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸில் கொரோனா வைரசின் 3-வது அலை பரவியிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கடந்த 7 நாட்களாக புதிய கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டதைப் போலவே புதிய உருமாறிய கொரோனா பிரான்ஸ் நாட்டின் லானியன் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா, வழக்கமாக நடத்தப்படும் பிசிஆர் சோதனைகளிலிருந்து தப்பிவிடுகிறது. எனவே, இந்த உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றே முடிவில் தெரியவரும்.
இதனால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரீஸ் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள் மற்றும் பள்ளிகள் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.