பராசக்தி – திரை விமர்சனம்!
தமிழ் சினிமாவில் ஆக்சன், காதல், நகைச்சுவை, நாடகம், த்ரில்லர், திகில், வரலாற்றுப் படங்கள், சமூக படங்கள், ஃபேண்டஸி, ஸ்போர்ட்ஸ் என ஏகப்பட்ட வகைகளுண்டு. ஆக்சன் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டரும் கேமராமேனும், காதல் படத்திற்கு பிரபலமான நாயகன்-நாயகி, நகைச்சுவைக்கு வசனம், த்ரில்லருக்கு தொழில்நுட்பக் குழு என இருந்தால் ஜெயித்துவிடலாம். ஆனால், வரலாற்றுப் படம் எடுக்க பக்கா ஸ்கிரிப்ட், பொருத்தமான கலைஞர்கள், அனுபவம் வாய்ந்த கலை மற்றும் இசை இயக்குநர்கள் எனப் பலம் வாய்ந்த மெகா கூட்டணி அமைய வேண்டும். அப்படி ஒரு டீம் உருவாக்கிய படமே இந்த ‘பராசக்தி’.
இயக்கம் மற்றும் திரைக்கதை:
வரலாற்றை ராவாகக் கொடுத்தால் டாக்குமெண்டரி ஆகிவிடும் என்பதைத் துல்லியமாகக் கணித்து, காதல், குடும்பப் பாசம், அரசியல் என அனைத்தையும் கலந்து போர் அடிக்காமல் வழங்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. சிவகார்த்திகேயனின் பங்களிப்பு இப்படத்தின் தரத்தைச் சில படி உயர்த்தியுள்ளது.
கதைச் சுருக்கம்:
1959-ல் மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராகத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுகிறது. ‘புறநானூற்று படை’ என்ற மாணவர் அமைப்பு, செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் ரயில் எரிப்புப் போராட்டம் நடத்துகிறது. இதை அடக்க அரக்க குணம் கொண்ட அதிகாரி திரு நாடன் (ஜெயம் ரவி) அதிரடிப்படையுடன் வந்து மாணவர்களை வேட்டையாடுகிறார். அந்த வேட்டையில் நண்பனை இழந்த செழியன், அதிர்ச்சியில் போராட்டங்களைக் கைவிட்டு குடும்பத்தைக் கவனிக்கச் செல்கிறார்.
பின்னர், இரு மொழி கொள்கை பற்றிய வாக்குறுதி மீறப்பட்டு மீண்டும் இந்தி திணிப்பு வரும்போது இந்தியா முழுவதும் மாணவர்கள் குதிக்கின்றனர். இதில் செழியனின் தம்பி சின்னத்துரை (அதர்வா) ஈடுபடுகிறார். இந்தப் போராட்டங்களை ஒடுக்க அதே கொடுமைக்கார அதிகாரி நாடன் தலைமையில் துணை ராணுவப் படை அழைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியே படத்தின் மீதிக்கதை.
நடிகர்களின் பங்களிப்பு:
-
சிவகார்த்திகேயன் : இந்தத் திரைப்படத்தின் தரத்தைச் சில படி உயர்த்தியதில் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பங்குண்டு. குறிப்பாகச் ‘செழியன்’ கதாபாத்திரத்தை ஏற்று, ‘புறநானூறு படை’ தலைவராக அவர் வரும் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.
-
உணர்ச்சிகரமான நடிப்பு: சிவகார்த்திகேயன் நடிகன் என்ற தனது அடையாளத்தைக் கழற்றி எறிந்துவிட்டு, ஒரு உண்மையான மொழிப்போர் தியாகியாகவே மாறியுள்ளார். ரத்தமும் சதையுமாக அவர் அந்தப் பாத்திரத்தை எப்படி உள்வாங்கினார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
-
மாற்றத்தின் நாயகன்: முதல் போராட்டத்தில் நண்பனை இழந்து அமைதியாவதும், பின் வேலைவாய்ப்பில் இந்தி திணிப்பால் அநீதி இழைக்கப்படும்போது மீண்டும் பொங்கி எழுவதும் அசாத்தியமான நடிப்பு. அவர் மீண்டும் புரட்சிக்குத் திரும்பும்போது அரங்கே அனலில் கொப்பளிக்கிறது.
-
வசன உச்சரிப்பு: உணர்ச்சிமிக்க வசனங்களைப் பேசும்போதும், மாணவர்களை வழிநடத்தும்போதும் அவரது உடல்மொழியும், குரலில் காட்டிய அதிகாரமும் திரையில் ஒரு புதிய சிவகார்த்திகேயனை அடையாளம் காட்டுகிறது.
சாதாரணப் படங்களில் இருந்து விலகி, ஒரு வரலாற்று நாயகனாக அவர் காட்டியுள்ள முதிர்ச்சி, இந்தப் ‘பராசக்தி’யை அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக மாற்றியுள்ளது.
-
-
ஜெயம் ரவி: கொலைக்கு அஞ்சாத சர்வாதிகார அதிகாரியாக இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் பயமுறுத்துகிறார்.
-
அதர்வா: சிவகார்த்திகேயனின் தம்பியாக மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
-
ஸ்ரீ லீலா: ஆட்டத்தைக் குறைத்து, நடிப்பை மெருகேற்றித் தன்னை ஒரு சிறந்த நடிகையாக இதில் நிரூபித்துள்ளார்.
தொழில்நுட்பம்:
கேமராமேன் ரவி கே சந்திரன் ரசிகர்களை வரலாற்று காலத்திற்கே கொண்டு செல்கிறார். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம்; குறிப்பாகத் தெலுங்கில் தொடங்கும் அந்தப் பாடல் மிகவும் ‘லவ்லி’.
மொத்தத்தில் இந்தி கற்றுக் கொண்டால் என்ன, தமிழுக்காக உயிர் விட்டார்களா போன்ற கேள்விகளுக்கு இப்படம் விடை அளிக்கிறது. ஒரு மொழி அழிந்தால் அந்த இனமே அடிமையாகிவிடும் என்பதைத் தெளிவாக விளக்கி, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வைச் சரியான கோர்வையில் வழங்கியுள்ள இந்தப் படத்தை அனைவரும் காண வேண்டும்.
மார்க்: 4.25 / 5


