பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது!

பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில்  தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது!

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அர்ஜுனா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்ததற்காகவும். கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், கிரிக்கெட் வீரர் புஜாரா, பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற வருண் பாரதி, கோல்ப் வீரர் எஸ்எஸ்பி சவுராசியா உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுகின்றன.

டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான விளையாட்டில் ஹர்மன்பிரீத் சிறப்பாக ஆடியதற்காகவும், சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற தேவேந்திர ஜெஜாரியாவும், ஹாக்கி வீரர் சர்தார் சிங்கும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பாராலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற தேவேந்திர ஜெஜாரியா, நாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பாராலிம்பிக் வீரர் ஆவார்.