’படையாண்ட மாவீரா’ – விமர்சனம்!

’படையாண்ட மாவீரா’ – விமர்சனம்!

1980களின் ஆரம்பத்தில் டாக்டர் ராமதாஸ், வடமாவட்டங்களெங்கும் இருந்த பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து வன்னியர் சங்கத்தைத் தொடங்கினார். அவர்களின் கோரிக்கையாக மக்கள் தொகை அடிப்படையில் சாதி வாரிஇடஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்கள். முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வைத்தனர். பல்வேறு வழிகளில் கோரிக்கை வைத்தும் கவனிக்கப்படாததால்,1987ஆம் ஆண்டு ஒரு பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள்.வடமாவட்டங்கள் முழுவதும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு சாலை மறியல் நடத்தப்பட்டது. அப்பொழுது சாலைகளை மறிக்க, வானங்களை தடுக்க சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு சாலையில் போடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இந்தப்போராட்டம் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.அந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் தாக்கியதில் பலர் உயிரிழந்தனர்.அமெரிக்காவில்இருந்த முதல்வர் எம்ஜிஆர் திரும்பி வந்து வன்னியர் சங்கம்உட்பட பல்வேறு சாதி சங்கங்களை அழைத்துப் பேசினார். பின்னர் பல கட்டங்களுக்குப் பிறகு ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு’ தமிழகத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் கலைஞர் ஆட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மரங்கள் வெட்டப்பட்டதால்அந்தப் பெயர், அந்த இமேஜ், பாமகவுடன் ஒட்டியது. இதைப் போக்க, பசுமை தாயகம் இயக்கம் ஆரம்பித்து செயல்பட்டார்கள் என்பது தனி எபிசோட். இப்படி மரத்தை வெட்டிப் போராடியதாலேயே வன்னியர் சங்க தலைவர் குருநாதன், காடுவெட்டி குரு என்று அழைக்கப்படுகிறார் என்று இன்று வரை பலரும் நம்புகின்றனர். ஆனால், அவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டி என்னும் ஊர். அந்த ஊர் பெயராலேயே அவர் காடுவெட்டி குரு என்று அழைக்கப்பட்டார்.ஆனால் அவரது பேச்சுகள் அவரை ஒரு அதிரடி நபராக வெளிக்காட்டியதால் இந்த சந்தேகம் பலருக்கும் இருந்தது. அவரது பெயர்க் காரணம் குறித்தகேள்வியை ஒரு முறை நிருபர்கள் கேட்ட பொழுது, சிரித்துக்கொண்டே சொன்னார், “நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன் இல்லைங்க. என் ஊர் காடுவெட்டி என்பதால்தான் இந்தப் பெயர். நெறய பேர் என்னை அப்படிதான் நெனைச்சுக்குறாங்க” என்றார்.அப்பேர்பட்ட காடுவெட்டி குரு மீதான தவறான பிம்பத்தை உடைக்கும் விதமாக திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் வ.கெளதமன் என்பவர் காடுவெட்டி குருவே நமஹ என்று ஸ்துதி பாடி ஒரு முழு நீள சினிமா படத்தை வழங்கியதில் ஜெயித்து விட்டார் .

அதாவது அரியலூர் டிஸ்டிரிக்கில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைக்கும் தொழிற்சாலையை தடுப்பதற்காக அங்குள்ள ஏழை மக்களின் இடத்தை அபகரிக்கிறார்கள். அதை எதிர்த்து குரல் கொடுக்கிறார் ஒரு வீரர். இதையடுத்து  அவர் மீது பல வழக்குகளும், குண்டர் சட்டமும் பாய்கிறது. ஆனாலும்  அவர் மீதிருந்த தவறான கண்ணோட்டங்களை மடைமாற்றி, மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடியவரவர். அதிலும் வன்னியர் என்னும் சாதி பாகுபாடுகளை தவிர்த்து, தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்தவரவர் என்றெல்லாம் சொல்லும் கதையே இந்த படையாண்ட மாவீரா!

நாயகனான குரு ரோலில் நடித்திருக்கும் கவுதமன் உணர்ச்சிப் பெருக்குடன் நடித்திருக்கிறார்.ஏழை மக்களுக்கு எதிராக போலீசார் நடத்தும் அராஜகத்தை தட்டிக் கேட்பதும், சீரழிக்கப்படும் பெண்களுக்கான நியாயத்தை தட்டி கேட்க சரியான தண்டனை தருவதன் மூலமும் காட்சிகளில் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.பாசக்காட்சிகளில் பனிமழை பொழிகிறார்.காதல் காட்சிகளில் கனிவு காட்டுகிறார்.நிஜத்திலும் அவர் ஒரு உணர்ச்சிகர மேடைப் பேச்சாளி என்பதால் பொருந்தி போய் விடுகிறார்.நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடாவுக்கு குறைந்த திரை இருப்பே என்றாலும் வருகிற காட்சிகளில் நிறைவாக இருக்கிறார்.

சிறுவயது குருவாக நடித்திருக்கும் வ.கெளதமனின் மகன் தமிழ் கெளதமனும்,அப்பாவுக்குத் தப்பாத பிள்ளையாக இருந்து ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு முழுநியாயம் செய்திருக்கிறார்.நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,அந்த வேடத்துக்காகவே பிறந்தவர் போல் ஜொலிக்கிறார்.ஆடுகளம் நரேன்,சரண்யா பொன்வண்ணன்,இளவரசு, மன்சூரலிகான், மதுசூதனராவ் உள்ளிட்டு படத்தில் இருக்கும் அனுபவ நடிகர்களால் படத்துக்குப் பலம்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் கமர்ஷியலாக இருந்தாலும் சுமாராகவே இருக்கிறது. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசையில் சில இடங்களில் கவனம் ஈர்த்தாலும், பெரும்பாலான இடங்களில் பழைய படங்களை நினைவுப்படுத்துவதுடன் அதீத அதிர்வலைய ஏற்படுத்துகிறது.

கேமராமேன் பி ஜெகதீஸ்வரன் படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளில் தனி அக்கறைக் காட்டியுள்ளார்

ஆனாலும் ஆரம்ப பேராவில் சொன்னது போல் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை அவர் ஆதரவாளர்களை கவர்ந்தாலும், கதை சொல்லல் மற்றும் காட்சி மொழியில் சொல்வதில் கொஞ்சமும் மெனக்கெடாமல் ஒரு சாதாரண கமர்ஷியல் படமாக கொடுத்து சலிப்படைய செய்திருக்கிறார்.

மொத்தத்தில் படையாண்ட மாவீரா – மஞ்ச சட்டைப்பிரியர்களுக்கான படம்

மார்க் 2.25/5