தமிழ் குரல் / AI Voice
இதன் இரண்டாம் பாகம் Link…
https://www.aanthaireporter.in/ah-europe-a-dream-beyond-the-continent-part-2-by-venuji/
இதன் முதலாம் பாகம் Link: https://www.aanthaireporter.in/eu-rope-a-dream-beyond-the-continent-part-01/
ஹெல்சிங்கி விமான நிலைய வாசலில் எங்களுக்காக ஆதியும் டெஸ்லா காரும் காத்திருந்தார்கள். ஆம், டெஸ்லாவும் எங்களுடைய இந்தப் பயணத்தில் ஒரு தவிர்க்க முடியாத ‘எண் கொண்ட’ உறுப்பினராகவே இணைந்துவிட்டது. நாங்கள் திட்டமிட்டிருந்த 1540 பெருக்கல் 2 கிலோமீட்டர் பயணத்தை இந்த டெஸ்லா கார் தான் சாத்தியமாக்கியது.
சென்னையிலும் தற்போது டெஸ்லா புக்கிங் தொடங்கப்பட்டிருப்பதால், அதன் சில சிறப்பம்சங்களை இங்குப் பகிர்வது பயனுள்ளதாக இருக்கும். காரின் சாவி என்பது ஒரு ஸ்மார்ட் கார்டு மட்டுமே. அதையும் நமது தொலைபேசியோடு இணைத்துக் கொண்டால், காரை ஓட்டுபவர் 30 அடி தூரத்தில் வரும்போதே கதவுகள் தானாகவே அன்லாக் ஆகிவிடும். யார் காரை ஓட்டப் போகிறோமோ அவர்களின் உயரத்திற்கும் பருமனுக்கும் ஏற்றவாறு ஒரு முறை சீட், ஸ்டீயரிங், பக்கவாட்டு கண்ணாடிகள் என எல்லாவற்றையும் சரிசெய்து சேவ் செய்துவிட்டால் போதும். அந்த நபர் ஓட்டுநர் இருக்கையில் உட்காரும்போது அவருக்கு ஏற்றவாறு கார் தானாகவே சீட்டை முன்னே பின்னே மற்றும் பக்கவாட்டில் நகர்த்தி அமைத்துக் கொடுத்துவிடும்.
காரின் வெளிப்புறத்தில் ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டு சுற்றிலும் நடப்பவற்றைத் தொடர்ச்சியாகக் கவனித்துக் கொண்டே இருக்கும். நாம் எங்கேயாவது சென்றுவிட்டு மீண்டும் காரில் ஏறினால், கார் அருகில் யார் வந்தார்கள் போனார்கள் என்பதைத் திரையில் காட்டிக் கொடுத்துவிடும். ஹேர்பின் வளைவுகள் போன்ற கடுமையான வளைவுகளைத் தவிர மற்ற அனைத்துச் சாலைகளிலும் குரூஸ் கன்ட்ரோல் வசதியைப் போட்டுவிட்டால் அது பாட்டுக்கு வண்டியைத் தானே ஓட்டிக் கொள்ளும்.
இருப்பினும் ஓட்டுநர் ஸ்டீயரிங்கைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படித் தொடாமல் அலட்சியம் காட்டினால், கார் ஒரு குலுக்கு குலுக்கி ஓட்டுநரை எச்சரிக்கும். சாலையில் ஓட்டுநரின் கவனம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அங்கு நெடுஞ்சாலைகளில் 120 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கலாம் என்பதால் இந்த குரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதமான சாரல் மழைக்கிடையில் எங்கள் டெஸ்லா கார் நிதானமாகப் பயணித்துக் கொண்டிருந்தது.

லேண்ட்ஸ்கேப்பிங் அழகும் கடுமையான சாலை விதிகளும்
ஆதி தங்கியிருக்கும் வீடு எஸ்பூ என்ற இடத்தில் இருக்கிறது. விமானத்தில் பெங்களூரு சென்றிருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்; விமான நிலையத்திலிருந்து நகரைத் தொடும் சில கிலோமீட்டர்கள் வரை சாலையின் இருமருங்கிலும் அவ்வளவு அழகாக லேண்ட்ஸ்கேப்பிங் செய்திருப்பார்கள். ஆனால் இங்கோ நாடு முழுவதுமே அனைத்துச் சாலைகளும் அப்படி நேர்த்தியாக லேண்ட்ஸ்கேப்பிங் செய்யப்பட்டிருக்கின்றன. நம் நாட்டு கார்களுக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கார்கள் மற்றும் சாலைகளில் இருக்கும் இடது, வலது பக்க மாற்றங்கள் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இங்குச் சாலை விதிகள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் பின்பற்றப்படுவதால் விபத்துகள் எங்குமே பொதுவாகப் பதிவாவதில்லை. சாலைகளில் நடந்து செல்பவர்களுக்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மோட்டார் வாகனங்கள் செல்லும் பாதைகளை ஒட்டியே நடப்பவர்கள் செல்லும் வழியும், சைக்கிள்கள் செல்லும் வழியும் எல்லா இடங்களிலும் தடையின்றி இருக்கிறது. எதில் யார் செல்ல வேண்டும் என்பதற்கான தெளிவான குறியீடுகளும் தவறாமல் இடம்பெற்றுள்ளன. அங்கு இருக்கும் தானியங்கி நடைபாதை விளக்குகளை அவசரமாகக் கடக்க வேண்டியவர்கள் கைமுறையாக (Manual) மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பியர்களின் வாழ்க்கை முறையும் தோற்ற அழகும்
நடப்பது, ஓடுவது மற்றும் சைக்கிள் ஓட்டுவது போன்றவை ஐரோப்பியர்களின் அன்றாட நல்வாழ்வு நடைமுறைகளில் ஒன்றாக இருப்பதைக் காண முடிந்தது. நடைப்பயிற்சி விரும்பியான நான் நேரம் காலம் பார்க்காமல் இங்கு நடந்து கொண்டிருப்பதைப் போல, அங்கே இரவு 12 மணிக்குக் கூட நடைப்பயிற்சியும் ஓட்டப்பயிற்சியும் செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது, “நானெல்லாம் ஐரோப்பாவில் பிறந்திருக்க வேண்டிய ஆள்” என்று பெருமூச்சு விட்டு எளிதாக அவர்களை என்னுடன் பிணைத்துக் கொள்ள முடிந்தது.
இன்னொரு விஷயமும் என்னுடன் ஒத்திருந்தது. ஐரோப்பியர்கள் அணியும் உடைகள், சர்ச்சுகள் மற்றும் வீடுகளின் நிறங்கள் உட்பட எல்லாமே அதிகபட்சம் கருப்பு நிறத்தில் அமைந்திருக்கின்றன. குளிர்பிரதேசங்களில் கருப்பு நிறம் வெப்பத்தைத் தக்க வைக்கும் என்பது இதற்கு முக்கியக் காரணம். கருப்புதான் எனக்குப் பிடித்த வண்ணம் என்பதால் இந்த நிறத் தேர்விலும் அவர்கள் என்னைக் கவர்ந்தார்கள்.
ஆனால், அவர்களது உடலமைப்பையும் அழகையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. சாதாரணமாகச் சாலையைக் கடந்து செல்லும் ஒரு இளம் பெண் சமந்தாவாகவோ, தமன்னாவாகவோ தெரிகிறார். அதிலும் தமன்னாவை இன்னொரு வெள்ளாவியில் போட்டு எடுத்தால் என்ன நிறம் வருமோ, அந்த அழகில் ஒவ்வொருவரும் ஜொலிக்கிறார்கள்.
பழகினால் பச்சைக் குழந்தைகள்
அடுத்தவர் விஷயங்களில் அனாவசியமாகத் தலையிடும் பழக்கம் அவர்களிடம் அறவே இல்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போது கொஞ்சம் முரட்டுத்தனம் மிகுந்தவர்களாகத் தோன்றினாலும், பழகிவிட்டால் பச்சைக் குழந்தையாக மாறுகிறார்கள். வழியில் எதிர்ப்படும் ஒவ்வொருவரும் ஹாய், ஹலோ அல்லது ஹேவ் எ நைஸ் டே என்று சொல்லிப் புன்னகையோடு கடக்கிறார்கள்.
தானாக ஓடிவந்து உதவி செய்யும் குணம் கொண்டிருக்காமல், அவரவர் வேலையை அவரவரே செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நாம் சென்று உதவி என்று கேட்டால் மறுக்காமல் செய்கிறார்கள்.
விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் இதே விதிதான் பொருந்துகிறது. எங்கெங்கும் காணப்படும் பறவைகளுக்கு மனிதர்கள் உணவிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. நான் சில இடங்களில் நம் வழக்கப்படி பறவைகளுக்கு உணவு வைத்தபோது என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். பறவைகள் தங்கள் உணவைத் தன் சொந்த முயற்சியிலேயே தேடிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
கடற்கரைச் சத்தமும் அமைதியான சூழலும்
நாடு முழுவதுமே அமைதியான தியானத்தில் இருப்பது போல் நிசப்தமாக இருக்கிறது. அந்த அமைதியைக் கலைக்கும் ஒரே சத்தம் கடற்கரைப் பிரதேசங்களில் வசிக்கும் சீகல் (Seagull) என்கிற பறவையுடையது மட்டுமே. எந்நேரமும் ஏதோ ஒரு பிரச்சினை அல்லது பஞ்சாயத்து வைத்துக்கொண்டு சதா சண்டையிட்டபடி கத்திக் கொண்டே இருக்கின்றன. “பறவைகளே பதில் சொல்லுங்கள்… மனிதர்கள் மயங்கும்போது நீங்கள் பேசுங்கள்…” என்ற கண்ணதாசனின் பாட வரிகள் நினைவுக்கு வர, அவர் ஒருவேளை இங்கே பயணம் வந்திருப்பாரோ என்று நினைக்கத் தோன்றியது.
பாதுகாப்பான உறைவிடமும் நள்ளிரவு வெளிச்சமும்
இப்போது ஆதி தங்கியிருக்கும் ஃபிளாட் வந்துவிட்டது. கார் பார்க்கிங்கிற்குள் நுழைவதற்குக் கூட பாஸ்வேர்ட் எண்கள் தேவைப்படுகின்றன. அதைச் சொடுக்கியதும் பார்க்கிங் ஷட்டர் கதவு திறக்க, உள்ளே கும்மிருட்டாக இருக்கிறது. கார் உள்ளே நுழைந்ததும் அத்தனை விளக்குகளும் பளிச்சென்று எரியத் தொடங்குகின்றன. மின்சாரத்தைச் சேமிப்பதற்கு இப்படி ஒரு நவீன யுக்தி பயன்படுத்தப்படுகிறது. பார்க்கிங்கிற்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலே ஏதோ ஒரு மூலையில் யாரோ இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
கார் இல்லாமல் நடந்து வந்தாலும் அந்த ஃபிளாட்டின் பொதுக்கதவைப் பாஸ்வேர்ட் எண் அல்லது சாவி போட்டுத் திறந்து கொண்டுதான் உள்ளே செல்ல முடியும். வேறு யாரும் அனுமதியின்றி எங்கும் நுழைந்துவிட முடியாது. ஸ்டுடியோ அப்பார்ட்மெண்ட் வகையில் அமைந்திருந்த ஆதியின் வீடு மிகவும் சுத்தமாகப் பளிச்சென்று இருந்தது. இங்கிருந்து வெளிநாடு கிளம்பும்போதே உமாவிடம் சமையல் கற்றுக்கொண்டு பாத்திரப் பண்டங்களோடு சென்றிருந்ததால் ஆதிக்குச் சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை; சமைக்கும் பிரச்சினை மட்டும்தான்.
எங்களுக்காக ஆதி தயார் செய்து வைத்திருந்த சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் சோயா வறுவல் ஆகியவை குளிர்ந்திருந்த எங்கள் உடலுக்கு நல்ல வெதுவெதுப்பைத் தந்தன. சாப்பிட்டு முடித்ததும் அருகே இருந்த கடற்கரைக்கு நடைபயிற்சி செல்லப் புறப்பட்டோம்.
தூங்கா நகரம் என்பதைப் போல இது ஒரு தூங்கா நாடு. இரவு எத்தனை மணிக்கும் யாராவது புழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். கோடைக்காலங்களில் இங்கு 20 மணி நேரம் வரை பகல் வெளிச்சம் நீடிக்கிறது. நாங்கள் கடற்கரைக்குச் சென்றபோது சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இரவு மணி 10; ஆனால் மாலை 4 மணிக்கான சூரிய வெளிச்சம் அங்கே சூழ்ந்திருந்தது.
தூங்கா நாடு என்பதைப் போலவே நாங்கள் சென்ற மூன்று நாடுகளையுமே பூங்கா நாடுகள் என்றும் அழைக்கலாம். கண்ணில் படும் இடங்கள் அனைத்துமே ஒரு மலர்க் கண்காட்சியாகவே விரிகிறது. வழியெல்லாம் வண்ண வண்ணப் பூக்களால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பவர்களுக்கு, வாழ்வின் இறுதி வரை அந்த மலர்ந்த நினைவுகள் என்றும் மணக்கும் நினைவுகளாகவே நிலைத்திருக்கும்.
