June 7, 2023

பரோட்டா மட்டுமில்லே.. ரஸ்க், பிஸ்கட், ரொட்டி வகைகளும் வேண்டாமே!

கோடிகளில் புரள்வோரையும், தெருக்கோடிகளில் தவிப்போரையும் இணைக்கும் ஒரே புள்ளி பசி என்றால் அது மிகையல்ல. எனவே, ருசி பார்த்து அந்த பசியை போக்காமல், உணவின் தரம் பார்த்து உட்கொண்டால் மட்டுமே, ஆரோக்கிய வாழ்வின் அடியொற்றி நடக்கும் நாளைய தலைமுறை. நாம் அருந்தும் தண்ணீர் உள்பட அனைத்திலும் ரசாயன பொருட் களின் ஆக்கிரமிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. குறிப்பாக துரித வகை உணவுகளில் கலப்படமே பிரதானமாக உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் குழந்தைகளுக்கு பாலில் ஊறவைத்து கொடுக்கப்படும் ரஸ்க், சிறுவர்களும் இளைஞர்களும் விரும்பி சாப்பிடும் பிரெஞ்சு பிரை, மைதா பரோட்டா போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் கேன்சர் மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்று மைதா மாவில் செய்யப்படும் பரோட்டா..!தென்மாவட்டங்களில் உள்ள ஓட்டல்களில் எண்ணெயில் பொறித்து பரிமாறப்படும் பரோட்டாவுக்குகென்று தனி ரசிகர்கள் வட்டமே உண்டு. விருதுநகர் புரோட்டா கடை என்ற பெயரில் நாடெங்கும் சக்கை போடு போடும் கடைகள் ஏராளம்.

அந்த வகையில் பெரும்பாலான ஊர்களில் பரோட்டா சூடான தோசைகல்லில் எண்ணைய் போட்டு வாட்டி கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான நகர மற்றும் கிராமப்புறங்களில் மைதா பரோட்டாதான் இரவு நேர உணவாகவே மாறி வருகிறது. சுவையான அசைவ, சைவ கிரேவிகளை ஊற்றி ருசித்து சாப்பிடும் உணவு பிரியர்களில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த பரோட்டா செய்ய பயன்படும் மைதாவில் உடலுக்கு கேடு விளைவிக்கும் பெராக்சைடு என்ற ரசாயணம் கலக்கப்பட்டுள்ளது என்று..?

ஆம்.. பஞ்சம் வந்து வாட்டிய காலத்தில் வயிற்றை நிரப்ப பயன்பட்ட மைதாவால் தயாராகும் பரோட்டோவை, தற்போது தினமும் வீட்டில் உள்ளவர்கள் ருசிக்க தொடங்கி விட்டனர். பரோட்டோ மட்டும் அல்ல, மைதாவில் தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு பாலில் ஊறவைத்து கொடுக்கப்படும் ரஸ்க், பிஸ்கட், ரொட்டி வகைகளை தொடர்ச்சியாக உணவாக எடுத்துக் கொண்டாலும் அது உடல் பருமன், அஜீரணக் கோளாறு, நீரிழிவு, குடல் புற்றுநோய் உள்ளிட்டவற்றுடன் மாரடைப்பு வரை கொண்டு வந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பாஸ்ட் புட் வகைகள், எண்ணெயில் பொறித்து எடுக்கப்படும் பிரெஞ்சு பிரை சுவையில் சிறுவர்கள் மயங்கி கிடந்தாலும், அதுவும் ஜங்க் புட் போல உடலுக்கு கேடு விளைவிக்கும் குப்பையான உணவுப் பொருள் என்கின்றனர் மருத்துவர்கள்.

பெரும்பாலும் உணவில் தேவை அளவு மட்டும் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதுவும் ஒருமுறை மட்டுமே பொறிக்க பயன்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டும் மருத்துவர் கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுதல் நலம் என வலியுறுத்துகின்றனர்.

ஆவியில் வேகவைத்த உணவுகளும், சிறுதானிய வகைகளும் மட்டுமே எப்போதும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்கின்றனர். பெரும்பாலும் சாப்பிடும் முன்போ அல்லது சாப்பிட்ட பின்னரோ தான் நீர் அருந்த வேண்டும் என்றும் சாப்பிடும் முறையை சரி செய்து கொண்டாலே பெரும்பாலான நோய்கள் வருவதை தவிர்க்கலாம் என்கின்றனர்.

பெரும்பாலும் ஓட்டல் மற்றும் சாலையோர கடைகளில் தினமும் உணவு உன்பதை தொடர்ச்சியாக வைத்துக் கொண்டால் அவர்களுக்கு உடல் பருமன் மற்றும் குடல் நோய்கள் வரும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் வீடுகளில் சமைத்து உண்பதால் அவற்றை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.