பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர் ஒப்புதல்

பெரும்பாலான நகரங்களில் காற்று மாசு சுமார் 70%-க்கு மேல் வாகன புகையால் ஏற்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாட்டின் தாக்கம் வானிலையில் ஏற்படும் நிகழ்வுகளால் அது ஏற்படும் இடத்தினில் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் அதன் தாக்கம் ஏற்பட காரணமாகிறது என்ற சூழலில் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான முன் மொழிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுபற்றி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், “சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். இது முறைப்படி அறிவிக்கையாக வெளியாவதற்கு முன்பு மாநிலங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.8 ஆண்டுகளுக்கு மேலான போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும்போது பசுமை வரி விதிக்கப்படும். சாலை வரியில் 10 முதல் 25 சதவிகிதம் வரையிலான விகிதத்தில் வரி விதிக்கப்படும்.”
காற்று மாசினை கட்டுப்படுத்துதல் பெரும் சவாலான பணியாகவே உள்ளது. உலகளவில் காற்று மாசுபாட்டில் முன்னணியில் உள்ள 15 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவன அறிக்கையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக பெரு நகரங்களில் காற்று மாசில் 2.5 மைக்ரான் மற்றும் 10 மைக்ரான் அளவிலான மிதக்கும் நுண்துகள்களின் அளவுகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது.
கடந்த 2016-ல் மட்டும் உலகம் முழுக்க ஏற்பட்ட இறப்புகளில் 4.2 மில்லியன் அளவுக்கு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. காற்று மாசு இறப்புகள் பெரும்பாலும் இதய நோய், பாரிசநோய் மற்றும் சுவாச கோளாறு நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோயாலும் ஏற்படுகிறது.
இதன் தாக்கத்தை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.