நயன்தாரா சொல்லித் தரும் புதிய ஜெர்மன் வார்த்தையும், பொருளும்!
இன்று பிரபல இந்தியத் திரைப்பட நடிகை திருமதி. நயன்தாரா மூலம் ஒரு புதிய ஜெர்மன் வார்த்தையை நாம் அனைவரும் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.
“Schadenfreude” -ஷாடன்ஃப்ராய்டபிறருக்கு நடக்கும் துன்பத்தில் இன்பம் காண்பதற்குப் பெயர் தான் ஷாடன்ஃப்ராய்ட! ஒருவரை மற்றொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ய எத்தனிக்கும் போது கூட அந்த செயலின் மூலம் இன்பம் அடைந்து “ச்ச குத்தியும் தப்பிச்சுட்டானே” என்பதும் “கொலை முயற்சிக்குக் காரணம் கற்பிப்பதும்” என்று இருப்பதும் தொடர்ந்து எண்ணுவதும் ஷாடன்ஃப்ராய்டவில் வரும்.
இது தீங்கான மனநிலையாகும். இத்தகைய மனநிலை கொண்டோர் தனக்கும் சுற்றத்தாருக்கும் தீங்கு இழைக்க வல்லவர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.எனினும் இவர்கள் தங்களுக்கு யாராலோ தீங்கு நேரும் போது அதற்கு காரணம் கற்பிப்பவர்களாகவோ அல்லது தனக்கு தீங்கு நேர்ந்ததற்கும் தனக்கும் பங்குண்டு என்று எண்ணி தாக்கியவனை பூஜிப்பார்களா? என்றால் அதுதான் இல்லை!எப்போதும் இந்த ஷாடன்ஃப்ராய்ட பிறருக்குத் துன்பம் நடக்கும் போது மட்டும் தான் இவர்களுக்குத் தோன்றும். இது அவர்களின் எண்ணங்களில் ஏற்படும் கோளாறு என்பதை உணர்ந்து இத்தகையோர் இதிலிருந்து மீள வேண்டும் என்று பிரார்த்திப்போம்
இதற்கு நேரெதிரான வார்த்தை -“ஃப்ராய்டன் ஷாட”FreudenSchade”. அதாவது பிறருக்கு நடக்கும் நல்ல விஷயங்களைப் பார்த்து எரிச்சல் கொள்வது.!இதைத் தான் பொறாமை எண்ணம் என்று கூறுகிறோம். பொறாமையும் தன்னை மட்டுமின்றி தன் சுற்றம் அனைத்தையும் சேர்த்தழிக்கும் தீ போன்றது என்பதால் அதையும் வெறுப்போம்.
நமக்குள் இருக்கும் இந்த இரண்டு நச்சு எண்ணங்களும் தவறானவை என்று உணர்ந்து இதிலிருந்தும் மீள முயற்சி செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
நமக்கு அதிகமதிகம் எய்ட்ஃபூலூங் Einfühlung இருக்க வேண்டும் . அதாவது நமக்கு முன் ஒருவர் துன்பப்பட்டாலோ அல்லது இன்பத்தை அனுபவித்தாலோ அவர் நிலையில் நம்மை வைத்துப் பார்த்துப் பழக வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் “எம்பதி” என்று பெயர்.”தான்” என்ற அகந்தை உணர்வு அதிகம் இருப்பவர்களுக்கு
எம்பதி உணர்வு குறைந்து கொண்டே சென்று ஒரு கட்டத்தில் துளியும் இல்லாமல் போய் விடும்.
எனவே எம்பதி உணர்வை உணர்வதற்கு “தான்” என்ற அகந்தையை முதலில் குறைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பிறர் துன்பத்தில் மகிழவோ பிறர் இன்பத்தில் பொறாமை கொள்ளவோ மாட்டோம்.
உங்களின் மூலம் இன்று மூன்று ஜெர்மன் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டோம். திருமதி. நயன்தாராவுக்கு நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை