June 2, 2023

இந்திய எல்லையுடன் புது அட்லஸ்!- நேபாள் அடாவடி

இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறிவந்த நேபாளம், அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ள விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம் இந்தியா – நேபாளம் இடையிலான மேற்கு எல்லையை காளி ஆறு பிரிக்கிறது. இதற்கு கிழக்கே உள்ள பகுதி தனக்கு சொந்தம் என்று நேபாளம் உரிமை கொண்டாடுகிறது. இந் நிலையில் இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கியதாக நேபாள நாட்டின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டு புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. அதன்படி இந்திய பகுதிகளை சேர்த்த இந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மொத்தம் உள்ள உறுப்பினர்கள் 275 பேரில், 258 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரசும் ஆதரவு அளித்து மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வரைபடம் குறித்து நேபாளம் கூறுகையில், 1816-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் எல்லைகள் வகுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.இந்திய பகுதிகளை சேர்த்து வரைபடத்தை நேபாளம் மாற்றி அமைத்து உள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விரைவில் வரைபடம் மாற்றப்பட்ட விஷயத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “நேபாளத்தின் பிரதிநிதிகள் சபை இந்திய பிராந்தியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கும் வகையில் நேபாள வரைபடத்தை மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது களங்கத்திற்கு உரியது. இந்த விஷயத்தில் நாங்கள் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம்.

நேபாளத்தின் இந்த செயற்கையான விரிவாக்கம் வரலாற்று உண்மையோ அல்லது சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது அல்ல, இது நியாயமானதல்ல. நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான தற்போதைய புரிதலை மீறுவதாக உள்ளது” என்று தெரிவித்தார்.