தேசிய கல்வி தினம்: ஆசாத்தின் கனவும் இந்தியாவின் கல்விச் சீர்திருத்தமும்!

தேசிய கல்வி தினம்: ஆசாத்தின் கனவும் இந்தியாவின் கல்விச் சீர்திருத்தமும்!

ந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், அழியாத கல்வித் தடம் பதித்தவருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின்  பிறந்த நாளான  நவம்பர் 11ஆம் தேதி தேசிய கல்வி தினம் (National Education Day) கொண்டாடப்படுகிறது. தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்விக்கு இருக்கும் அசைக்க முடியாத முக்கியத்துவத்தை இந்த நாள் அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது.

தேசிய கல்வி தினம் என்பது வெறும் நினைவு தினம் மட்டுமல்ல; இந்தியாவின் கல்வி முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சிறப்புப் பேச்சுகள், கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள், மற்றும் விருது வழங்கும் விழாக்கள் எனப் பல்வேறு நிகழ்வுகளுடன் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆசாத்தின் கல்விக் கொள்கையும் சீர்திருத்தங்களும் 

தேசத்தின் கல்வி முறைக்காக ஆசாத் முதலில் எழுப்பிய குரல்தான், பிற்காலத்தில் வந்த தேசக் கல்வி கொள்கைக்கு (1986) அடிப்படையாக அமைந்தது. இந்த கொள்கை 1992-ல் புதுப்பிக்கப்பட்டது.

சமமான தரமான கல்வி 

ஆசாத்  முதன்மையான வலியுறுத்தல், சாதி, மத, பாலினம் மற்றும் இடம் போன்ற பாகுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலை வரை தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். அனைத்துக் கல்வித் திட்டங்களும் மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதி காட்டினார்.

முக்கிய சீர்திருத்தங்கள் 

  • இலவச கட்டாயக் கல்வி: 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும் என ஆசாத் வலியுறுத்தினார்.
  • பல்வகை கல்வி மேம்பாடு: பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, மற்றும் தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தார்.
  • உயர் கல்வி: பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வி சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்பையும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
  • வயது வந்தோர் கல்வி: வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் மொழிப் பார்வை 

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியக் கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த ஆசாத், அவற்றைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

  • மொழிப் பார்வை: உருது, பார்சி, அரபு மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருந்த போதிலும், தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை கருத்தில் கொண்டு ஆங்கில மொழியைப் பயன்படுத்தச் செய்தார். அதே சமயம், ஆரம்பக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முக்கிய நிறுவனங்களின் தொடக்கம் 

கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக ஆசாத் இருந்தபோது, மத்திய மற்றும் மாநிலக் கல்வி முறைகளில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தார்.

  • ஐ.ஐ.டி. நிறுவுதல்: தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை (AICTE) வலுவான அமைப்பாக மாற்றியதன் விளைவாக, 1951-ல் காரக்பூரில் முதல் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐ.ஐ.டி.) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், மற்றும் தில்லி போன்ற நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் நிறுவப்பட்டன.
  • திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி: தில்லியில் 1955-ல் திட்டமிடுதல் மற்றும் கட்டிடக்கலைக்கான பள்ளி (School of Planning and Architecture) ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்களுக்கான ஆசாத்தின் அறிவுரை 

ஆசாத்  மாணவர்களிடம், “மதவாதத்தை ஒரேயடியாக குழி தோண்டிப் புதையுங்கள்” என்ற உறுதியான அறிவுரையைத் தொடர்ந்து வழங்கினார். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனை அடைந்தார்.

1954-ல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பேசும்போது, நியாயமற்ற காரணங்களுக்காக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது, நாட்டின் கலாச்சார வேர்களை அசைத்துப் பார்ப்பதாக வருத்தம் தெரிவித்தார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள்; அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காவிட்டால் தேசத்திற்குத் தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போகும் என்ற கருத்தை ஆசாத் கொண்டிருந்தார்.

எதிர்காலத்திற்கான அறைகூவல் 

இந்தியாவின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இத்தகைய இளைஞர் சக்திக்குத் தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவது காலத்தின் கட்டாயம்.

தேசிய கல்வி தினம், மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி இயக்க இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான கல்வி உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. ஆசாத் அவர்களின் தொலைநோக்கு பார்வையே, வலிமையான மற்றும் முற்போக்கான இந்தியாவைக் கட்டமைப்பதற்கான அடித்தளமாக இன்றளவும் விளங்குகிறது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts

error: Content is protected !!