மோடியின் பரப்புரை மாயை: இந்தியாவின் உண்மை நிலை!
“இந்தியாவின் வரலாற்றில் எந்தப் பிரதமரும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களைப் போல உலக மேடையில் இவ்வளவு தீர்க்கமான செல்வாக்கைப் பெற்றதில்லை” என்று பாஜகவின் பரப்புரைக் கூட்டம் அலறுகிறது. இந்தியாவின் மறுமலர்ச்சி, பொருளாதார வலிமை, மூலோபாய தொலைநோக்கு, தயக்கமற்ற வெளியுறவுக் கொள்கை எல்லாம் மோடியின் மந்திரக்கோலால் தோன்றியவை என்பது அவர்களின் புராணம். ஆனால், இந்த உயர்த்திப் பேசப்படும் “மோடி மேஜிக்” உண்மையில் ஒரு கவனமாகத் தீட்டப்பட்ட மாயை மட்டுமே. இந்தியாவின் உண்மையான அந்தஸ்தையும், வரலாற்றையும், மக்களின் எதிர்பார்ப்பையும் இந்தப் பரப்புரை மறைத்து, ஒரு தனிநபர் வழிபாட்டு நாடகத்தை மட்டுமே முன்னிறுத்துகிறது.

வரலாற்றை மறந்தவர்களின் வாக்கு
இந்தியாவுக்கு உலக மேடையில் மரியாதையும் அந்தஸ்தும் மோடி ஆட்சிக்கு முன்பே இருந்தவை. சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று நாயகர்களான மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு முதல், மன்மோகன் சிங் வரையிலான தலைவர்கள், இந்தியாவை ஒரு தனித்துவமான, மாண்புமிக்க நாடாக உலக அரங்கில் நிலைநிறுத்தினர். அவர்கள் தங்கள் தலைமையைப் பறைசாற்றவோ, நாடு நாடாகச் சென்று கௌரவத்தைக் கேட்டு வாங்கவோ தேவையில்லை. இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த குடியரசுத் தலைவர்களை உலக நாடுகளுக்கு அனுப்பி, உறவுகளைப் பேணி, நாட்டின் கண்ணியத்தை உயர்த்தினர். ஆனால், மோடியின் அணுகுமுறை வேறு. அவர் செல்லும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும் ஒரு வணிக ஒப்பந்தத்தின் தூண்டிலுடன் மட்டுமே நிகழ்கிறது. இது உண்மையான மரியாதையா, அல்லது பணத்தால் வாங்கப்படும் வரவேற்பா? ஜிஆர்டி ஜூவல்லரியில் பத்து லட்சம் நகை வாங்குபவருக்கு கிடைக்கும் “ஹானர்” போல, இந்த மரியாதையில் பெருமைப்பட ஒன்றுமில்லை.
மணிப்பூரும் மௌனமும்
மோடியின் “விஷன்” பற்றிப் பேசப்படும் இந்தக் காலகட்டத்தில், மணிப்பூரின் அவலத்தை மறந்துவிட முடியுமா? மாநிலமே கலவரத்தில் எரிந்து கொண்டிருக்க, பிரதமர் ஒரு முறை கூட அங்கு எட்டிப் பார்க்கவில்லை. மக்களின் வலியைப் புரிந்து கொள்ளவோ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ அவருக்கு நேரமில்லை. ஆனால், வெளிநாட்டு மேடைகளில் பளபளப்பான உரைகளும், ஏழு நட்சத்திர கேமராக்களுடன் கூடிய ரீல்ஸ் எடுக்கவும் அவருக்கு நேரம் இருக்கிறது. இது ஒரு பிரதமரின் பொறுப்பா, அல்லது ஒரு பிராண்டின் புரமோஷனா?

பத்திரிகையாளர் மாநாடு: துணிவின் பற்றாக்குறை
கடந்த 11 ஆண்டுகளாக, மோடி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட நடத்தவில்லை. மக்களின் கேள்விகளை எதிர்கொள்ளவோ, அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவோ அவருக்கு துணிவு இல்லை. இதற்கு மாறாக, செல்லுமிடமெல்லாம் கேமராக்களுடன் சென்று, விதவிதமான ரீல்ஸ் எடுத்து, சமூக ஊடகங்களில் பரப்புவதை அவரது ஆட்சி முக்கியப் பணியாகக் கொண்டிருக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையா, அல்லது ஒரு சினிமா நட்சத்திரத்தின் விளம்பரமா? ஒரு பிரதமரின் பணி, மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதும், அவர்களின் நம்பிக்கையைப் பேணுவதும் தானே, பளபளப்பான படங்களை உருவாக்குவது அல்ல.
உண்மையின் முகம்
மோடியின் ஆட்சி, ஒரு தனிநபர் மையப்படுத்தப்பட்ட பிரச்சார இயந்திரமாக மட்டுமே இயங்குகிறது. இந்தியாவின் பொருளாதார வலிமையும், உலக அரங்கில் மரியாதையும் மோடிக்கு முன்பே இருந்தவை. ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, ஒரு தனிநபரை மட்டுமே உயர்த்திப் பேசுவது, இந்தியாவின் வரலாற்றையும், மக்களின் தியாகங்களையும் அவமதிக்கும் செயல். மணிப்பூரில் மக்கள் தவிக்கும்போதும், விவசாயிகள் போராட்டத்தில் தெருவில் நிற்கும்போதும், வேலைவாய்ப்பின்மை இளைஞர்களை வாட்டும்போதும், “விஷ்வகுரு” என்ற புராணம் மட்டும் எதற்கு? இந்தியாவுக்கு உண்மையான தலைமை தேவை — மக்களின் வலியைப் புரிந்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும், வெறும் பரப்புரையில் மூழ்காத ஒரு தலைமை. மோடியின் ஆட்சி, பளபளப்பான முகமூடிக்குப் பின்னால் உள்ள உண்மைகளை மறைக்க முயல்கிறது. ஆனால், மக்களின் கண்கள் இனி மூடப்பட மாட்டாது.


