2021ல் நாடெங்கும் மொபைல் செயலி மூலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு!
புது டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் சென்சஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கான புதிய கட்டடத் திற்கு அடிக்கல் நாட்டி பேசும் பொழுது ‘ 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும், காகித கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் கணக்கெடுப்புக்கு மாறும் முறை யாக இது அமையும். அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே விதமான அடை யாள ஆவணமோ அல்லது அட்டையோ தேவை. கணக்கெடுப்பு துவங்கிய 140 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக மொபைல் செயலி மூலமாக மக்கள் தொகை கணக்கெடுக் கப் பட உள்ளது. வீடுவீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த செல்போன் வாயிலாக கணக்கெடுப்பை நடத்த ஊக்குவிக்கப்படுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 மொழிகளில் நடைபெறும். இதற்கு 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று தெரிவித்தார். அதிலும் மொபைல் ஆப் மூலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் தடவையாக அமையும். பேப்பர் பேனா ஆகியவற்றை பயன்படுத்தும் காலத்தில் இருந்து விடுபட்டு டிஜிட்டல் புள்ளிவிவர காலத்துக்கு இந்தியா முன்னேறுகிறது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் டிஜிட்டல் முறையில் அமைவது பெரிய புரட்சியாக அமையும் என அமித்ஷா குறிப்பிட்டார்.
19வது நூற்றாண்டில் மக்கள் தொகை பெருக்கம் குறித்த அச்சம் தோன்றியதும் உலக நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு பரவியது. ஆனால் அதுதான் முதல் கணக்கெடுப்பா என்றால் இல்லை. உலகில் மனிதர்கள் குழுவாக வாழ ஆரம்பித்ததும் தலைகளை எண்ண ஆரம்பித்ததுதான் முதல் கணக்கெடுப்பு. பிறகு நகரங்கள் உருவான பிறகு வரி வசூலிக்க ஏதுவாக தொடர்ந்ததுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு. இந்த பழக்கம் உலகம் முழுவதும் இருந்தாலும் எழுதப்பட்ட வரலாறு மேற்கத்திய நாடுகளில் தொடங்கியதால் அந்த நாடுகளில்தான் கணக்கெடுப்பு ஆரம்பித்ததாகவும் சொல்கிறார்கள்.
பாபிலோனியாவில் கிமு3800ம் ஆண்டில் தொடங்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆறு/ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றதாம். அப்போது மக்களிடம் கையிருப்பில் இருந்த வெண்ணெய், தேன், பால், கம்பளி, காய்கறிகள் ஆகியவற்றையும் கணக்கெடுத்திருக்கிறார்கள். இப்படி உட்பட பல்வேறு நாடுகளில் பண்டைய காலங்களில் போருக்கு ஆள் பிடிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆனால் முறையான கணக்கெடுப்பு இங்கிலாந்தில் அரசி விக்டோரியா காலத்தில் 1801ம் ஆண்டில் தொடங்கியதாக கூறுகிறார்கள்.
அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் மெட்ராஸ் மாகாணத்தில் 1851-52 ஆண்டுகளில் கணக்கெடுப்பு நடந்திருக்கிறது. அப்போது சாதி, மதம், வயது உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப் பட்டுள்ளன. முதல் கணக்கெடுப்பின் படி மெட்ராஸ் மாகாணத்தில் 3.33 கோடியும் இந்தியாவில் 23.88கோடி பேரும் வசித்துள்ளனர். அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் கணக்கெடுப்பு நடப்பது தொடர்கிறது.
இந்தியாவில் கடைசியாக 2011ம் ஆண்டு நாடு முழுவதும் பிப்.9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைப்பெற்றது. இந்தப்பணியில் ஆசிரியர்கள், வருவாய்துறை ஊழியர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள் என 25 லட்சம் பேர் ஈடுபட்டனர். இவர்கள் நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் உள்ள சுமார் 7742 நகரங்கள், 6லட்சம் கிராமங்களில் மக்கள் தொகையை கணக்கெடுத்தனர். இப்பணிக்காக 2,209கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதை அடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பனிப் பிரதேசங்களில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதமே கணக்கெடுப்பு நடைபெறும் என கூறப்ப்பட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில் எதிர்கால இந்தியாவுக்கான திட்டங்களை வகுக்க முடியும். சமூகநலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவும் என்று அமித்ஷா கூறினார். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பயன்கள் குறித்து முதலில் பிரசாரம் செய்வோம்.மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலமாக முனிசிபல் வார்டுகள், சட்டமன்ற தொகுதி எல்லைகள், மக்களவைத் தொகுதி எல்லைகள் ஆகியவற்றையும் வரையறுக்க இயலும் என அமித்ஷா கூறினார்.