மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன – தேஜா சஜ்ஜா!
நடிகர் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் ஆகியோர் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் தேஜா சஜ்ஜா பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். சென்னையில் உங்களைச் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி ‘மிராய்’ திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவை, வரும் நாட்களிலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ‘மிராய்’ ஒரு ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் பக்தி கலந்த படமாகும்.
வருடத்தில் சில படங்களே குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகும். அந்த வரிசையில் ‘மிராய்’ நிச்சயம் இடம்பெறும். மூன்று வயது குழந்தை முதல் எண்பது வயது பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கதை இது. பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. விஸ்வா சாருக்கு எங்களை நம்பியதற்காக நன்றி. இந்த படம் உருவாக முக்கிய காரணம் இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி அவர்கள்தான். அவரது சிறப்பான திரைக்கதைதான் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. AGS நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்திருப்பதிலும் எனக்கு மகிழ்ச்சி. அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யாவுக்கும் எனது நன்றிகள்.
‘மிராய்’ என்றால் ஜப்பானிய மொழியில் ‘எதிர்காலத்தின் நம்பிக்கை’ என்று அர்த்தம். ஆனால், படத்தில் இந்த வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது. அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும்.
இந்தப் படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், அந்த நாடுகளில் இந்தியப் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு முன்பு வெளியான ‘ஹனுமான்’ திரைப்படமும் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நான் தொடர்ந்து ஃபேண்டசி படங்களில் நடிப்பதற்கான காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கும் ஃபேண்டசி படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் நடப்பவை நிஜத்தில் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நிஜத்தில் அது சாத்தியமில்லை என்பதால், சினிமாவில் அதை செய்து பார்க்க விரும்புகிறேன்.
‘மிராய்’ திரைப்படத்தில் VFX காட்சிகள் ஒரு பெரிய சவாலாக இருந்தன. இந்தியத் திரைப்படங்களின் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதற்காக, இந்தப் படத்தின் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திரைக்கதையிலும், VFX-லும் அதிக திறமை கொண்ட இயக்குநர்களான பிரசாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.
‘ஹனுமான்’ படம் உலக அளவில் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், மக்களின் ஆதரவையும் பெற்றது. அதனால், ‘மிராய்’ படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப்பெரிய அளவில் முயற்சி செய்துள்ளோம்.
இந்தப் படத்தில் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறோம். அதற்காக, தாய்லாந்தில் இருந்து கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை வரவழைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக்கிற்குச் சென்று இருபது நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நான் நேரடியாக நடித்துள்ளேன்.
‘மிராய்’ படம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, இமயமலை, இலங்கை என பல இடங்களுக்குச் சென்று சண்டைக் காட்சிகளைப் படமாக்கியுள்ளோம்.
வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து ‘மிராய்’ படத்தைக் கண்டுகளிக்க வேண்டும். இந்தப் படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும். நன்றி!”


