அறுபது வயதாகும் ஏஐ: நீங்கள் அறியாத அதன் வரலாறு!
இன்று நாம் பயன்படுத்தும் ஏஐ, அதன் பிரம்மாண்டமான வளர்ச்சி என அனைத்தையும் வியந்து பார்க்கிறோம். சாட்ஜிபிடிதான் ஏஐ உலகத்தின் தொடக்கம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. ஏஐக்கு எழுபது வயதாகிறது. பல தசாப்தங்களாக நடக்கும் ஆராய்ச்சிகளின் பலன்தான் இந்த தொழில்நுட்பம்.
1955-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி, “Artificial Intelligence” என்ற வார்த்தை பிறந்தது. இந்த சொல்லை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அமெரிக்கக் கணிதவியலாளர் ஜான் மெக்கார்த்தி. இவரது பெற்றோர் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். டார்ட்மவ்த் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய மெக்கார்த்தி, தனது சக ஆய்வாளர்களுடன் இணைந்து ஒரு ஆராய்ச்சியைத் திட்டமிட்டார். அதற்கு அவர்கள் வைத்த பெயர், “A proposal for summer research project on Artificial Intelligence.” இரண்டு மாதத் திட்டமாகத் தொடங்கிய இந்த ஆய்வு, பின்னாளில் உலகம் முழுவதையும் மாற்றியமைக்கும் என்று அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள்.

அன்று முதல் இன்று வரை, ஏஐயின் வரலாறு ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போலத்தான். திடீரென ஒரு உச்சத்தைத் தொடும், பிறகு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். மீண்டும் ஒரு புதிய உச்சம்… இந்த சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு வகையில், இதுவே ஏஐயின் வசீகரத்திற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.
ஐம்பதுகளில், கணினிகளின் திறன் மிகக் குறைவு. அந்தக் காலத்திலேயே மெக்கார்த்தியும் அவரது குழுவினரும், இன்று நாம் வியந்து பார்க்கும் சில வசதிகளைப் பற்றிப் பேசியுள்ளனர். அதில் ஒன்றுதான் “Self Improvement”. ஒரு கணினி அமைப்பை வடிவமைத்தால், அதை நாம் பயன்படுத்தப் பயன்படுத்த அது தானாகவே மேம்பட வேண்டும், நாளடைவில் மேலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தனர். இது, ஒரு உயிரினம் தனது அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது போல, கணினிகளும் கற்க வேண்டும் என்ற ஒரு புதுமையான சிந்தனை. இன்றளவும் இந்த ‘Self Improvement’ குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஏஐ துறைக்கு ஜான் மெக்கார்த்தியின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. அவர் உருவாக்கிய LISP என்ற நிரல் மொழி, ஏஐக்கான நிரல்களை எழுதுவதில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஏஐ ஆய்வு மையத்தை (SAIL) நிறுவியதிலும் மெக்கார்த்தியின் பங்கு மிக அதிகம். ஏஐயின் பரிணாம வளர்ச்சிக்கு இந்த ஆய்வு மையம் தொடர்ந்து உதவியுள்ளது. மெக்கார்த்திக்கு முன்னரே, ஆலன் டூரிங் போன்ற அறிஞர்கள் ‘சிந்திக்கும் இயந்திரங்கள்’ பற்றி எழுதியுள்ளனர். ஆனால், ‘Artificial Intelligence’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தவில்லை.
இன்று ஏஐ ஒரு பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. நிறுவனங்களும், தனிநபர்களும் அதன் பலன்களை தினமும் அனுபவிக்கிறோம். இந்த வளர்ச்சியைப் பார்க்க மெக்கார்த்தி இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர் அன்றைக்குப் போட்ட அந்தச் சின்ன விதைதான் இன்று விஸ்வரூபம் எடுத்து நம் கண்முன்னே நிற்கிறது.


