மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: முரண்பட்ட கருத்தால் 3-வது நீதிபதி விசாரணை?
மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித, இடஒதுக்கீட்டை ஐகோர்ட் ரத்துசெய்தது. இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இடஒதுக்கீடு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதனிடையே, முன்னதாக நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, ”மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு செல்லாது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே தமிழக அரசு நடக்க வேண்டும். இதில் தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு பொருந்தாது” என்று தீர்ப்பளித்திருந்தார் அதை எதிர்த்தும் 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், ’50 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்யும் உத்தரவுக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்’. ஆனால் நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பில்,’மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்’ எனக் கூறினார். குறிப்பாக நீதிபதி சசிதரன் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று தீர்ப்பளித்தார். நீதிபதி சுப்பிரமணியம் ”இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். பல ஆண்டுகள் நடைமுறையில் இருப்பதாலேயே அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்
இதைதொடர்ந்து , மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐகோர்ட் பதிவாளர் கூறுகையில்,’ மருத்துவ இடஒதுக்கீடு வழக்கு, தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்’ எனக் தெரிவித்துள்ளார்.


