அக்னி நட்சத்திரம் ஆரம்பம்தான்; ஆனாலும் மூணு நாளைக்கு ஹீட் கம்மியாம்!

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்தான்; ஆனாலும் மூணு நாளைக்கு  ஹீட் கம்மியாம்!

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவானது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குகிறது. குறிப்பாக பருவமழை பொய்த்து போனதால், நாடு முழுவதும் இந்தாண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மழை இல்லாததால், தமிழகத்தில், இந்தாண்டு தொடக்கம் முதலே கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

agni may 3

அதிலும் முன்னரே குறிப்பிட்டது போல், கடந்த மாதம் முதல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெப்பச்சலனம் காரணமாக, ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தாலும் சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெயில் நிலவிவருகிறது. இந்நிலையில், கத்தரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் நாளை துவங்கி 28-ந்தேதி முடிகிறது. இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும் என்றும், அனல் காற்று வீசும் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதே சமயம் வெப்பம் குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன், ”கடற்கரை பகுதிகளில் காற்றின் திசை காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை குறைவாக இருக்கும். இதற்கு மாறாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரித்து காணப்படும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ”அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் பேச்சிப்பாறை, செங்கோட்டை ஆகிய இடங்களில் 6 செ.மீ வரை கோடை மழை பதிவாகியுள்ளது.சென்னையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. வறண்ட சூழ்நிலையையே நிலவும்” என்றார்.

Related Posts