மறைமலை அடிகள்: தமிழ் மொழியின் காவல் தெய்வம் – பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

மறைமலை அடிகள்: தமிழ் மொழியின் காவல் தெய்வம் – பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

ன்று ஜூலை 15, தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டாற்றிய மறைமலை அடிகள் பிறந்த தினம். நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் 1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் வேதாசலம். பின்னர், அவரது தமிழ் மீதான அளவற்ற பற்றும் தனித்தமிழ் ஆர்வமும், அவரை சுவாமி வேதாசலம் என்பதிலிருந்து மறைமலை அடிகள் எனப் பெயர் மாற்றிக்கொள்ளத் தூண்டின. வடமொழிச் சொற்களான ‘வேதம்’, ‘அசலம்’, ‘சுவாமி’ ஆகியவற்றிற்கு முறையே ‘மறை’, ‘மலை’, ‘அடிகள்’ எனத் தூய தமிழ்ச் சொற்களைப் பெயரிட்டுத் தனித்தமிழ் இயக்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

கல்விப் புலமை மற்றும் தமிழ் ஆர்வம்:

வெஸ்லியன் மிஷன் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்ற அடிகள், அங்கே ஆங்கிலத்தைக் கற்றுத் தேர்ந்தார். வே. நாரயணசாமி பிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆழமாகக் கற்றதுடன், சமஸ்கிருத மொழியையும் கற்று மூன்று மொழிகளில் புலமை பெற்றார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினெண் கீழ்க்கணக்கு போன்ற சங்க இலக்கியங்களை மிகத் தெளிவாகக் கற்று, தமிழ் இலக்கியத்தில் தனியாத தாகம் கொண்டிருந்தார். சிறு வயதிலிருந்தே பழகிய செளந்தரம் என்ற பெண்ணை மணந்து ஏழு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

பத்திரிகை மற்றும் ஆசிரியர் பணி:

நாகை மீனலோசனி செய்தித்தாளுக்குத் தகவல் சேகரிக்கும் பணியைத் தொடங்கினார் மறைமலை அடிகள். சைவ சித்தாந்தப் புலவர் சோம சுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி எழுதிய கட்டுரைகள், நாயக்கரின் கவனத்தை ஈர்க்க, ‘சித்தாந்த தீபிகை’ என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணியைச் செவ்வனே செய்துகொண்டே, தமிழாசிரியர் பணிக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். புகழ் பெற்ற தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நடத்திய நேர்முகத் தேர்வில், தனது புலமையை வெளிப்படுத்தி, மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் தமிழாசிரியர் பணியைப் பெற்றார்.

தனித்தமிழ் இயக்கத்தின் பிதாமகன்:

1902-ஆம் ஆண்டு ‘ஞானசாகரம்’ என்ற சொந்தப் பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் அதன் பெயரை அழகு தமிழில் ‘அறிவுக்கடல்’ என்று மாற்றினார். காலப்போக்கில், தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார். தமிழாசிரியர் பணியைத் துறந்து, கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமளிக்கவும் முடிவெடுத்தார்.

வெறும் பேச்சோடு நின்று விடாமல், தனது பெயரையே மறைமலை அடிகள் என்று மாற்றிக்கொண்டு தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அவரைப் பின்பற்றிப் பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர். ‘முல்லைப்பாட்டு’, ‘பட்டிணப்பாலை’ போன்ற சங்க இலக்கிய நூல்களுக்கு எளிமையான, தூயத் தமிழில் உரை எழுதினார். வடமொழியில் காளிதாசன் படைத்த ‘சாகுந்தலம்’ எனும் காதல் காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

மொழிப் பற்றும் சமூக அக்கறையும்:

மொழி கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று உறுதியாக நம்பிய அடிகள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கேற்றுச் சிறை சென்றார். அதே சமயம், தமிழ், தமிழ் என்று கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்த அவர், ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று வலியுறுத்தினார்.

அவரது தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக, அக்காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருதச் சொற்கள் வழக்கொழிந்து போயின. ‘நமஸ்காரம்’, ‘ஜலம்’, ‘சந்தோஷம்’, ‘அபேட்சகர்’ போன்ற வடமொழிச் சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. இந்தத் தூய தமிழுக்கு நாம் மறைமலை அடிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ் மொழியின் தூய்மைக்காகவும், வளர்ச்சித்திற்காகவும் வாழ்நாளெல்லாம் உழைத்த மறைமலை அடிகளின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்வோம்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts