தமிழக விவசாயிகள் தற்கொலைகள் : இந்திய அளவில் இரண்டாமிடம்!

ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் புள்ளி விவரங்கள் தாமதமாவது போல் 2018-ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தகவல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாடு முழுவதுமான தகவல்களின் அடிப்படையில் விவசாயிகள் தற்கொலை கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2017-ஆம் ஆண்டைப் போன்று 2018-ஆம் ஆண்டிலும் 6 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற ஆறுதல் தகவலும் கிடைத்துள்ளது. முன்னதாக 2017-ஆம் ஆண்டில் 7 மாநிலங்களும், 5 யூனியன் பிரதேசங்களிலும் எந்தவொரு விவசாயியும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆனாலும் 2018ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சி ஆா்பி) மிகத் தாமதமாக வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து என்சிஆா்பி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களில் 10,349 பேர் கடந்த 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
விவசாயிகளின் தற்கொலை கடந்த 2017ல் 10,655 ஆகவும், 2016ல் 11,379 ஆகவும் இருந்துள்ளது.
அதே சமயம், 2017ம் ஆண்டிலும் மேற்கு வங்கம், பிகார், ஒடிசா, உத்தரகாண்ட், மேகாலயா, கோவா, சண்டிகார், டாமன் மற்றும் டையு, டெல்லி, மற்றும் புதுச்சேரி உள்பட 7 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயியின் தற்கொலையும் பதிவு செய்யப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2018ம் ஆண்டில் மட்டும் 1,34,516 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 17,972 விவசாயிகளின் தற்கொலையுடன் மகாராஷ்டிரா முதல் இடத்திலும்,
13,896 விவசாயிகளின் தற்கொலையுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இவ்வாறு, .தேசிய குற்ற ஆவண காப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.