மாயோன் விமர்சனம்!

மாயோன் விமர்சனம்!

கூகுளில் கோயிலில் புதையல் என்று டைப்பிட்டுப் பாருங்கள்.. ஆயிரக்கணக்கான தரவுகள் கிடைக்கும்.. அவைகளில் எதிலுமே இல்லாத ஒரு கதை ஒன்றை உருவாக்கி அதில்,விஞ்ஞானம், , மெய்ஞானம், ஆன்மிகம், அமானுஷ்யம், திகில், ஆகியவற்றை சேர்த்து கலவையான பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயன்று அதில் ஓரளவு சக்சஸூம் ஆன படம்தான் ‘மாயோன்’.

இப்படத்தின் கதை என்னவென்றால் மாயோன் என்றொரு மலையில் ஆயிரம் வருஷங்க0ளுக்கு மேல் பழமையானது என்று நம்பப்படும் பிரம்மாண்ட கிருஷ்ணர் கோயில் ஒன்று பலருக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது. அக்கோயில் கருவறையில் புதையல் இருப்பதாக ஓலைச்சுவடி ஒன்றின் மூலம் அறிந்து, அதை எடுத்து வெளிநாட்டுக்கு விற்க திட்டமிடுகிறார் தொல்லியல் அதிகாரி தேவராஜ் (ஹரீஷ் பெரடி). அதே துறையின் இளம் அதிகாரியான அர்ஜுன் (சிபிராஜ்), அவரது திட்டத்துக்கு கைகொடுக்க தன் நண்பர்கள் குழுவுடன் முன்வருகிறார். ஆனால், அந்நிய படையெடுப்பாளர்கள் புதையலை அபகரிக்காமல் இருக்க, முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் தடைகள், அமானுஷ்யங்களை கடந்து அந்த குழுவால் புதையலை எடுக்க முடிந்ததா என்பதுதான் மாயோன் கதை.

நாயகன் சிபிராஜ், தொல்லியல் துறை அதிகாரியாக கச்சிதமாக தன் பங்களிப்பை அளித்து நிறைவடைகிறார். நடிப்பதற்கு அதிகம் ஸ்கோப் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் முடிந்தவரை சிறப்பாக நடித்துள்ளார். வழக்கமான நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளார். வழக்கமான வில்லனாக நடித்திருக்கும் ஹரிஷ் பெரோடி வழக்கத்திற்கு மாறான வில்லத்தனம் காட்ட முயற்சி செய்துள்ளார்.கே.எஸ்.ரவிக்குமார் தனித்து ஜொலிக்கிறார்.

இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம். அவரது இசையில் ‘மாயோனே மணிவண்ணா’ பாடல் ரஞ்சனி, காயத்ரி குரலில் தெய்வீக கானமாய் ஒலிக்கிறது. அதிலும் வசனம் அதிகம் தேவைப்படாத படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை மட்டுமே படத்துக்கு வசனமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. கோயிலை பல வித கோணங்களில் எடுத்து மிரள வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத். கதை, திரைக்கதை, தயாரிப்பு எனப் பொறுப்புகளை எடுத்து படத்தில் நடித்தும் இருக்கிறார் அருண்மொழி மாணிக்கம் கடவுளையும் விஞ்ஞானத்தையும் இணைத்து ஒரு ஃபேன்டஸி திரில்லர் அனுபவத்தை அளிக்க முயன்று அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.

கோயில்களில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் அரிய செல்வங்களை பாதுகாப்பதற்காக, அவை தொடர்பான பல தொன்மங்களை உருவாக்கி வைத்திருக்கும் பண்டைய தமிழர்களின் அறிவுசரியாக உணர்த்தப்படுவது பாராட்டத்தக்க விறுவிறுப்பான அம்சம்.
நாயகனை முன்னிட்டு இறுதியில்நிகழும் திருப்பம் (ட்விஸ்ட்) நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் கிராஃபிக்ஸ் என அப்பட்டமாக தெரிந்தாலும், ஒட்டுமொத்த காட்சி அனுபவமாக பார்வையாளரை கவரவே செய்கிறது. குறிப்பாக
படத்தின் முக்கியமான களமாக கருதப்படும் மாயோன் மலை கிருஷ்ணன் கோயில் அமைந்திருக்கும் இடமும் அதற்கான புராண விளக்கமும் சிலிர்க்கச் செய்கிறது.அதன் பின்னணியில் அமைந்த மகாபாரத விளக்கம் அருமை என்றால் அங்கு நடைபெறுவதாக சொல்லப்படும் மாய மந்திர விஷயங்களுக்கெல்லாம் அறிவியல் ரீதியாக கடைசியில் சிபிராஜ் விளக்கம் கொடுப்பது தமிழனுக்கு பெருமை.

மொத்தத்தில் இந்த மாயோன் – கவர்கிறது!

மார்க் 3.25/5

error: Content is protected !!