மாவீரன்; விமர்சனம்!
தமிழ் திரையுலகில், வணிகம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு ஆகிய அளவுகோல்களை கொண்டே ஒரு நாயகனின் வருவாயும், பிம்பமும் கட்டமைக்கப்படுகிறது.. இதை எப்போதோ புரிந்த எம் ஜி ஆர்.தான் முதன் முதலில் தன் படங்களுக்கென் ஒரு பாணியை வகுத்துக் கொண்டார். அதாவது பத்து பேருடன் ஒற்றை ஆளாக சண்டை போடும் எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்து விடுவார் என்பதால், ரசிகர்கள் விரும்பி அவர் படம் பார்த்தார்கள். நல்லவன் வாழ்வான் என்பதில், தன் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே கொடுக்கவில்லை. கூடவே குடும்பப் பாசத்தை மையப்படுத்திக் கொள்வதும் அவர் வாடிக்கை.. இப்படித்தான் சிவாஜிக்கென தனி பாணியுண்டு.. அதாவது தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல் வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார். எந்த காட்சியையும் இயல்பாகவும், உணர்வுப்பூர்வமாக நடிப்பதே சிவாஜியின் பாணி. பல நேரங்களில் எது நடிப்பு, எது உண்மை என பார்வையாளர்களே குழம்பிப் போய் விடுவார்கள். ஆனால் அவர்களுக்கு பிறகு வந்த இது போல் கமல் , ரஜினி, அஜித், விஜய் போன்றோரெல்லாம் தனி பாணியை உருவாக்காமல் லாபி உருவாக்கி ஃபீல்டில் உலா வருகிறார்கள்.. இப்படியான சூழலில் யூத்களின் மனசை மேக்சிமம் கவர்ந்து வரும் சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு பாணியை பிடிக்க முயல்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் படமே ‘ மாவீரன்’.

காமிக்ஸ் ஓவியர் சத்யா வாழும் வடசென்னை கூவம் கரையோர குடியிருப்புப் பகுதியை காலி செய்யும் மாநகராட்சி அவரின் குடும்பத்தையும், அந்த ஏரியா மக்களையும் தரம் குறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் அமர்த்துகிறது. அங்கு அடுத்தடுத்து பிரச்னையாய் வரும் சூழலில் வாழ்க்கையே வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது நேரும் ஒரு விபத்தில் அவர் வரைந்த கார்டூன் கதாபாத்திரத்தின் குரல் ஒன்று அசரீரீயாய் ஒலிக்கிறது. அந்தக் குரல் கோழையான சத்யாவை எப்படி ‘மாவீரன்’ஆக மாற்றி பெரும் புரட்சியை ஏற்படுத்தும் ஃபேன்டஸி ஆக்ஷன் டிராமாவே மாவீரம் கதை.
ஹீரோ சத்யாவாக சிவகார்த்திகேயன். தன் உடல்மொழியில் இருந்து எல்லாவற்றையும் இந்தப் படத்துக்காக மாற்றி அசத்தியிருக்கிறார். ஓவியர் கதாபாத்திரத்திலும், அப்பாவி ஆணாக அதே சமயம் வீரனாக பத்து பொருத்தமும் பக்காவாகப் பொருந்திப்போகிறார் சிவகார்த்திகேயன் . அதிலும் தன் வித்தையை மொத்தமாய் காட்டிவிட்டு, மீண்டும் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு பவ்யமாக முட்டி போட்டும் அமரும் காட்சியாகட்டும்; ” நீ இங்க இருப்பியாடா” என கர்ஜிக்கும் காட்சியாகட்டும் அடடே சொல்ல வைக்கிறார்.. வில்லனாக வரும் மிஷ்கினுடையது. அரசியல்வாதியாக வரும் அவர், பழிவாங்கத் துடிக்கையிலும், சிவகார்த்திகேயனின் பிரச்சினையைக் கண்டு மிரளும் சீன்களைக் கூட ரசிக்கும்படி செய்திருக்கிறார். புது நாயகி அதிதி ஷங்கர். நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் வழக்கமாக எந்தளவுக்கு நாயகிக்கு முக்கியத்துவம் இருக்குமோ அதுவே.. யோகி பாபு தன் காமெடிகளால் மொத்தத் திரையரங்கையும் கலகலப்பாக்கியிருக்கிறார். அபாரமான டைமிங், அவருக்கு எனப் பிரத்யேகமாக எழுதப்பட்ட ஒன்லைனர்கள், அதை அவர் பேசும் விதம் என அனைத்துமே ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக பல படங்களுக்குப் பிறகு வழக்கமான உருவகேலி ஜோக்குகளாக இல்லாமல், ஒவ்வொரு வசனத்திலும் வெடிச்சிரிப்பைப் பற்ற வைக்கிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் சரிதா. மகனனுக்காக கண் கலங்கும் போதும், மகனுக்கு வீரம் வந்திருப்பதை அறிந்து மகிழும் போதும் அவரது நடிப்பு கச்சிதம். படத்தில் மிஷ்கினின் நண்பராக வரும் தெலுங்கு நடிகர் சுனிலின் கதாபாத்திரம் சுமாராக எழுதப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது. படத்தில் முகமே காட்டாமல் குரல் வழியாக வருகிறார் விஜய் சேதுபதி. பாதி படத்திற்கு மேல் இவரது குரல் வழியாகவே கதை சொல்லப்படும் யுக்தியும் ரசிக்கவே வைக்கிறது.
கேமராமேன் விது அய்யனா. இந்த படத்துக்கு என்ன தேவையோ அதைச் சரியாக, அளாவாகச் செய்திருக்கிறார். எடிட்டிங் ஃபிலோமின் ராஜ். – மாவீரன் தொய்வின்றி ஓட இவரது எடிட்டிங் பெரும் பங்காற்றியிருக்கிறது. பரத் ஷங்கர், இசையில் வங்கக்கரை பாடலும், வண்ணாரப்பேட்டையில பாடலும் ஏற்கெனவே ஹிட் அடித்திருந்த நிலையில், தீம் மியூஸிக்கும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.
படத்தை எழுதி டைரக்ட் செய்திருக்கும் மடோன் அஸ்வின் ‘மண்டேலா’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சமூக அவலத்தை கமர்ஷியல் படமாக கொடுக்க முயன்று அதில் ஜெயிக்க முயன்றிருக்கிறார்.. சென்னையில் பூர்வகுடிகளுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு என்னும் மாயாஜால வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் நிஜ சோதனைகளை காமெடிகளின் வழி பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குநர். அடுத்து நடப்பதை சொல்லும் குரல் என்னும் ஃபேன்டஸி மூலம் சமூக பிரச்னையை பேசினாலும், நமக்கான பிரச்னைகளுக்கான தீர்வு நம் கேள்விகள் தான் என்பதையும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறார். ஆனாலும் முன்பாதி போல் இரண்டாம் பாதி கவரத் தவறி விட்டது.. ஹீரோ வில்லன் மோதும் ஒரு சராசரி படமாக மாறிவிடுவதால் ஜொலிக்க கிடைத்த வாய்ப்பு மிஸ் ஆகி விட்டது..
கூடவே வழக்கம் போல் சில பல ஜாஜிக் மீறல்களையும் சுட்டிக்காட்டலாம் என்றாலும் ஒரு பக்கா ஃபேமிலி எண்டர்டெயின்மெண்டுக்கு கேரண்டி கொடுத்து விடுகிறான் இந்த மாவீரன்
மார்க் 3.5/5


