‘லைக்கா’ நிறுவனம் சார்பில் வவுனியா நகரில் ஈழத் தமிழர்களுக்கு 150 இலவச வீடுகள்!

‘லைக்கா’ நிறுவனம் சார்பில் வவுனியா நகரில் ஈழத் தமிழர்களுக்கு 150 இலவச வீடுகள்!

இலங்கை வவுனியாவில் ஈழத் தமிழர்களுக்கு இலவசமாக 150 வீடுகளை ‘லைக்கா’ நிறுவனம் வழங்கியது. இதற்கான விழாவில் இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்றனர்.

lyca apr 12

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமான ‘2.0’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தனது தாயார் ஞானாம்பாள் பெயரில் நடத்திவரும் ‘ஞானம்’ அறக்கட்டளை சார்பில் இலங்கையின் வவுனியா நகரில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு 150 வீடுகளை இலவசமாக கட்டித்தர முடிவு செய்தார்.

இதன் மொத்த திட்ட மதிப்பு ரூ.33 கோடி ஆகும். கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 9-ந் தேதி இந்த வீடுகளை ஈழத் தமிழர்களுக்கு வழங்க முடிவு செய்தார். இதற்கான விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பினை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை வருவதாக இருந்தார். ஆனால், அவரது இலங்கை பயணத்துக்கு வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இலங்கை செல்லும் முடிவை ரஜினிகாந்த் கைவிட்டார்.

ரஜினிகாந்த் வருகைக்காக 9-ந் தேதி திட்டமிடப்பட்டிருந்த வீடு வழங்கும் விழாவானது, அவரது வருகை ரத்தானதை தொடர்ந்து ஒருநாள் தாமதமாக 10-ந் தேதி (நேற்று முன்தினம்) நடந்தது. இலங்கை வவுனியாவில் சின்னடம்பன் பகுதியில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், இங்கிலாந்து அனைத்துக்கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத்தலைவர் ஜேம்ஸ் பெர்ரி எம்.பி. மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி மெம்பர் கீத் வாஸ் எம்.பி., லைகா நிறுவன துணைத்தலைவர் பிரேம் சிவசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், யாழ்ப்பாணம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் சுமார் 25 ஆண்டு காலத்துக்கும் மேலாக தங்கியிருந்த 150 தமிழ் குடும்பங்களுக்கு இலவச வீடுகளுக்கான சாவியை ஞானம் அறக்கட்டளை தலைவி ஞானாம்பாள் வழங்கினார்.

முன்னதாக விழாவில் இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் பேசியதாவது:-

அரசின் போக்கை பொறுத்தமட்டில், பழைய அரசாங்கத்துக்கும், புதிய அரசாங்கத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இந்த மாற்றம் மட்டுமே தீர்வு ஆகிவிட முடியாது. போரின்போதும், போருக்கு பின்னரும் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நல்லதொரு முடிவு எடுக்கவேண்டும்.

புதிய அரசு அமைந்து 2 வருடங்கள் ஆகிறது. எனவே, மக்கள் பிரச்சினையில் அவர்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும். மக்களின் காணி நிலங்கள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த நிலங்களை இனியும் ராணுவம் பயன்படுத்தக்கூடாது. அந்த நிலங்களில் வணிகம் நடக்கக்கூடாது.

 இலங்கையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகம் அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து ஐ.நா.வில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதுதொடர்பாக உள்நாட்டு ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நாங்கள் அக்கறை எடுப்போம். உங்களுக்கு வீடுகள் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. ஏனைய வசதிகளும் உங்களுக்கு கிடைத்தால் அது இரட்டிப்பாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

லைகா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜா கூறுகையில், “ஈழத் தமிழர்களுக்காக நான் எந்த உதவியும் செய்யத்தயாராக இருக்கிறேன். இலங்கை அரசு தனது ஆதரவை தரும்பட்சத்தில், இலங்கையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறேன். எனவே, இலங்கை அரசு எங்கள் நலத்திட்டங்களுக்கு உதவவேண்டும்” என்றார்.

இங்கிலாந்து எம்.பி.க்கள் ஜேம்ஸ் பெர்ரி, கீத் வாஸ் ஆகியோர் பேசியதாவது:-

இலங்கையில் நடந்த போர் மற்றும் அவலங்களை நாங்கள் அறிவோம். தமிழ் மக்களுக்கு அநீதி வழங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் என்றைக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுப்போம். உங்கள் பிரச்சினையை எங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். ஜெனிவா கூட்டத்திலும் நிச்சயம் பேசுவோம். அமைதி, நல்லிணக்கத்துடன் நீங்கள் வாழ நாங்கள் இருக்கிறோம். அகதிகள் என்ற நிலை இனி தமிழர்களுக்கு ஏற்படாத வகையில் உதவி செய்வோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இலவச வீடுபெற்ற வன்னி கிராமத்தை சேர்ந்த தவமணி என்ற பெண் கூறியதாவது:-

அகதி முகாம்களில் வருடங்கள் உருண்டோடியது நினைவில்லாமல், இன்றைய தினம் வீடுகள் கிடைத்திருப்பது சந்தோஷம். ஊருக்கு பல மைல் தொலைவு தூரம் இந்த ஞானம் கிராமம் உள்ளது. இங்கு எல்லா வசதிகளும் ஏற்படுத்தித் தருவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். அகதிகள் முகாம் வாழ்க்கைக்கு இந்த புது வாழ்க்கை எவ்வளவோ மேல். அகதிகள் முகாமில் பலர் திருமணம் செய்து, குழந்தைகளும் பெற்றுவிட்டனர். இனி அந்த சிறைவாசம் எங்களுக்கு இல்லை என்றபோது மனம் மகிழ்ச்சி அடைகிறது. சொந்த ஊரும், இடமும் கிடைக்க இயலவில்லை. இருந்தாலும் தேசம் கடந்து போகும் சூழ்நிலை எங்களுக்கு அமையவில்லை என்றபோது சிறிது மனம் அமைதியாகிறது. இனியாவது இயல்பு வாழ்க்கை திரும்புவதை ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.