லத்தி – விமர்சனம்!

லத்தி – விமர்சனம்!

திரடியோ, ஆக்ஷனோ விஷாலுக்குப் புதிதல்ல. அதிலும் டெபுடி கமிஷனர், எஸ்.,பி, டி.எஸ்.பி போன்ற போலீஸ் ஆபீசராக மட்டுமே வந்து அதகளம் செய்து ஆர்பரித்தவர் இதன் தொடக்கக் காட்சிகளிலேயே கான்ஸ்டபிளாக லத்தி சுழற்றிக் காட்டி பார்வையாளர்களை ஆக்‌ஷனுக்கு தயார் செய்து விடுகிறார். ஒரு சினிமாவின் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கே உரிய அதிகாரம், மிடுக்கு காட்டி நடிப்பதை விட கான்ஸ்டபிளாக வாழ்வதும், நடிப்பதும் எவ்வளவு சிரமம் என்பதை அப்பட்டமாக சித்தரித்து காட்டி இருக்கிறார் விஷால். அதிலும் படத்துக்கு உரிய எளிமையான நடிப்பால் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் அவதாரத்திலும் அசரடித்து விட்டார் என்பது உண்மை..!

மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் முருகானந்தமாக விஷால். தனது மனைவி சுனைனா, மகன் என வாழ்ந்து வருகிறார். பணிபுரியும் காவல் நிலையத்தில் அவருக்கு பேர் லத்தி ஸ்பெஷலிஸ்ட். இடையில் சஸ்பெண்ட் ஆகும் விஷால், உயர் அதிகாரி ஒருவரின் சிபாரிசில் மீண்டும் பணிக்கு திரும்புகிறார். பிரதி உபகாரமாக, சிபாரிசு உயர் அதிகாரி தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக விஷாலின் உதவியை நாடுகிறார். இதனால், கூடாது என முடிவெடுத்திருந்த ’லத்தி’யை விஷால் மீண்டும் கையிலேந்தியதால் நிகழும் ரணகளமே லத்தி கதை.

விஷாலுக்கு பேர் சொல்லும் படமாகவே வந்திருக்கிறது இந்த லத்தி; உயர் அதிகாரிகளிடம் கான்ஸ்டபிளாக திணறுவது, மனைவியின் அன்புக்கு அடங்கி போவது, மகனின் அன்பில் கரைவது, ஆக்‌ஷன் காட்சிகளில் வழக்கம் போல அதகளம் செய்வது என நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் விஷால் ;ஆரம்ப பேராவில் சொன்னது போல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கே உரிய அதிகாரம், மிடுக்குகள் இன்றி, ஒரு கான்ஸ்டபிளுக்கு உரிய எளிமையான நடிப்பால் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் அவதாரத்திலும் அசரடிக்கிறார் விஷால். குறிப்பாக சண்டை காட்சிகளில் தன் உயிரை கொடுத்து நடித்துள்ளதை ஒவ்வொரு ரசிகனும் புரிய முடிகிறது என்பதே ஆச்சரியம். .

விஷாலின் மனைவியாக வரும் சுனைனாவிற்கு கதையில் அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் தான் வரும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். இவர்களை தாண்டி விஷாலின் பையனாக நடித்துள்ள சிறுவன் நன்றாக நடித்துள்ளார்.கொடூரமான வில்லனாக இந்த படத்தின் தயாரிப்பாளரான ரமணாவே நடித்துள்ளார். முதல் பாதி முழுக்க அவருக்கு கொடுக்கப்படும் பில்டப் காட்சிகள் சற்று தூக்கலாகவே இருந்தன. ரமணா தன்னை யார் அடித்தது என்று கண்டுபிடிக்கும் காட்சி சிறப்பாகவே இருந்தது. முனீஸ்காந்த், பிரபு, தலைவாசல் விஜய் என அனைவருமே ஏற்ற ரோலுக்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். சில காட்சிகளே வந்தாலும், பிரபுவின் கதாபாத்திரம்தான் கதைக்கான திருப்புமுனை.ரமணாவின் அப்பாவாக வருபவர் இன்னும் சற்று நடித்து இருந்திருக்கலாம்.

முதல் பாதியில் எளிமையான கதையை பரபரப்பான களத்துக்குள் அலுப்பு தட்டாமல் பயணிக்கச் செய்யும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கணிக்க முடிந்த காட்சிகளால் சுவாரசியத்தில் தேய்கிறது. முதல் பாதியில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளை ரசிக்க முடிந்தாலும், இரண்டாம் பாதியில் அவையே அயற்சியூட்டுகின்றன. அதிலும் முழுக்கவே ஒரு கட்டிடத்துக்குள் செக்ண்ட் பார்ட் முழுக்க நடக்கும் படியாக திரைக்கதை உள்ளது, அதை முடிந்த அளவிற்கு சுவாரசியமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வினோத் குமார். அதை புரிந்து கொண்டு யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், பாலசுப்ரமணியெம், பாலகிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் இயக்குநரின் எண்ண ஓட்டத்துக்கு பெரும்பலம் சேர்த்து இருக்கிறது. அடடே..இது நம்ம ஏரியா என்பதை உரக்க சொல்லி ஸ்டண்ட் காட்சிகளில் இறங்கி விளையாடி இருக்கிறார் பீட்டர் ஹெயின் மாஸ்டர்.

மொத்தத்தில் சண்டைக் காட்சிகளில் காட்டிய பரபரப்பையும், விறுவிறுப்பையும், திரைக்கதையின் இரண்டாம் பகுதியில் காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

மார்க் 3/5

 

error: Content is protected !!