லால் சலாம் – விமர்சனம்!

லால் சலாம் – விமர்சனம்!

சில பல ஆண்டுகளுக்கு முன்னால் 3, வை ராஜா வை ஆகிய படங்களை கோலிவுட்டுக்கு வழங்கிய தைரியத்தில் லால் சலாம் என்ற மதம் மற்றும் அரசியல் சாயம் பூசிய படத்திற்கு திரைக்கதை மற்றும் இயக்கம் செய்து வழங்கியுள்ளார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். வழக்கம் போல் அரசியல்வாதி ஒருவர் மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அதில் எப்படி லாபம் பார்க்கிறார் என்பதுதான் மையக் கரு. அதை குடும்பம், இளவயசு வாழ்க்கை, பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என சகல விஷயங்களையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார். நாடெங்கும் கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை நிலவும் காலக் கட்டத்தில் இப்படியான மத நல்லிணக்கத்தையும், விளையாட்டில் நடக்கும் அரசியல்களையும் தைரியமாக ஒரு படமாகக் கொடுத்திருப்பதற்க்கு அவருக்கு ஒரு தனி பாராட்டு விழாவே நடத்தலாம்..

அதாவது மொய்தீன் பாய் கேரக்டரில் உள்ள ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர் லிவிங்ஸ்டன் ஆகியோர் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக பழகி வருகிறார்கள். இவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஊரும் இந்து – முஸ்லீம் என பாகுபாடு பார்க்காமல் அண்ணன், தம்பி போல் வாழ்ந்து வருகிறார்கள். இச்சூழலில் கிரிக்கெட் விளையாட்டு ஒன்றினால் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபத்தை, அங்குள்ள அரசியல்வாதி தனக்கு சாதகமாக மாற்ற, இரு பிரிவினருக்கும் இடையில் மதக் கலவரத்தை தூண்டுகின்றார்.இதனால் ஒற்றுமையாக இருந்த இரு பிரிவினருக்கும் இடையில் பெரும் வன்முறை ஏற்படுகின்றது. இந்த சண்டையில் ரஞ்சி டிராபிக்கு தகுதிபெற்ற ரஜினியின் மகனாக வரும் விக்ராந்த் பாதிக்கப்படுகிறார். விஷ்ணு விஷால் காதலிக்கும் பெண் அரசியல்வாதிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்படுகின்றது. இதனால் ஏற்பட்ட கோபத்தால் ஊர் திருவிழாவுக்கு தேர் கொடுத்து வந்த அரசியல்வாதி தேரை தர மறுக்கிறார். இதை அடுத்து கோயிலுக்கு புதிய தேர் வாங்க விஷ்ணு விஷாலும் அவரது கிரிக்கெட் அணி வீரர்களும் எடுக்கும் முயற்சிகளே இந்தப் படத்தின் கதை.

படத்தில் இரண்டு ஹீரோக்கள், ஒருவர் விஷ்ணு விஷால்., இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. விக்ராந்த் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக நடிக்க முயன்றிருக்கிறார். . இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. காமெடி நடிகர் செந்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். கேமராமேன் விஷ்ணு ரங்கசாமி கிராமத்தையும், அங்கு நடக்கும் கோயில் திருவிழாவையும் இயல்பாக படமாக்கியிருப்பதோடு, விஷ்ணு விஷாலின் சண்டைக்காட்சியை வித்தியாசமாக படமாக்கி அசத்தி இருக்கிறார். எடிட்டர் பிரவின் தேவையில்லாத சில கதாபாத்திரங்களின் எக்ஸ்பிரஷன்கள் உள்லிட்ட பல காட்சிகளுக்கு கத்திரி போட தவறி விட்டார்..!

ஆனால் முன்னரே சொன்னது போல் இக்காலக் கட்டத்துக்கு தேவையான ஹெவியான கதைக்களத்தை கையிலெடுத்த ஐஸ்வர்யா அதற்கான திரைக்கதையில் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பான் இந்தியா பட வரிசையில் சேர்ந்திருக்கும்..

மொத்தத்தில் லால் சலாம் – ஏமாற்றவில்லை என்பதே பெரிய விஷயம்

மார்க் 3/5

error: Content is protected !!