‘கும்பாரி’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் T.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன், சரவண சக்தி நடிகர்கள் அப்புக்குட்டி. ஜீவா, ரோபோ சங்கர், பிரஜன், ஜெயிலர் கலையரசன், ராட்சசன் சரவணன் மற்றும் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா பேசும்போது, “இந்த படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை அழகாக சொல்லி இருக்கிறார்கள் என்பது படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. சிறிய படமாக இருந்தாலும் நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்தால் வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.
இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, “கும்பாரி என்பதன் அர்த்தம் எனக்கு முதலில் புரியவில்லை. இங்கே வந்த பிறகுதான் கும்பாரி என்றால் நட்பு என அர்த்தம் இருப்பது தெரியவந்தது. மற்ற எந்த உறவுகளும் பந்தத்தோடு தொடர்பு கொண்டது. நட்பு மட்டும்தான் எந்தவித பந்தமும் இல்லாமல் வரக்கூடியது’ என்று கூறினார்.
தேசிய விருது பெற்ற நடிகர் அப்புகுட்டி பேசும்போது, “நானும் விஜய் விஷ்வாவும் மாயநதி என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளோம். அப்போது ஒரு கிராமத்தில் இருந்த குளம் சுத்தம் இல்லாமல் இருந்ததை பார்த்துவிட்டு அதனை புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாவில் அதன் அவல நிலை குறித்து பதிவிட்டு விட்டார் விஜய் விஷ்வா. இதை பார்த்துவிட்டு அந்த ஊர்க்காரர்கள் சிலர் அவரை தேடி வந்து விட்டனர். அந்த அளவிற்கு சமூக பொறுப்பு கொண்டவர்” என்று பாராட்டினார்.
நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி பேசும்போது, “இந்த படத்தில் இவ்வளவு முத்த காட்சிகள் இருந்தும் எப்படி யு சான்றிதழ் கொடுத்தார்கள் என அருகில் இருந்த நண்பர் கேட்டார். முத்தக்காட்சிகளை தற்போது ‘யு’வில் சேர்த்து விட்டார்கள் போல என்று நான் கூறினேன். இது போன்ற சின்ன படங்களுக்கு மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும். சமீபத்தில் வெளியான ஒரு பெரிய படத்திற்கு சில யூடியூப் சேனல்களில் எதிர்மறை விமர்சனம் அளித்துள்ளார்கள். ஆனால் படம் நன்றாக ஓடுகிறது” என்று கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர் T.குமாரதாஸ் பேசும்போது, ‘நட்பு சம்பந்தப்பட்ட படம் இது. காதல், காமெடி, இசை என எல்லாமே நன்றாக வந்துள்ளது. சின்ன படம் என ஒதுக்கி வைக்காதீர்கள். சின்ன படங்கள் மூலம்தான் பெரிய ஆட்கள் உருவாகியுள்ளனர். அன்று ஒரு சின்ன படத்தில் நடித்த சிவாஜிராவ் தான் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியுள்ளார்” என்று கூறினார்.
நாயகன் விஜய் விஷ்வா பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் எப்போது யாரிடம் பேசினாலும் சாப்பிட்டீர்களா என்று தான் முதலில் கேட்பார். அந்த அளவிற்கு எல்லோரையும் அன்புடன் கவனித்துக் கொண்டார். இந்த படத்தின் கதை கடலும் கடல் சார்ந்தும் உருவாகியுள்ளது. 25 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை ரொம்ப வேகமாகவே முடித்து விட்டோம். படத்தின் தயாரிப்பாளர் பட்ஜெட் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆரம்பத்திலேயே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது தரைப்படை, பிளாஷ்பேக், பிரம்ம முகூர்த்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். வாய்ப்புகள் நன்றாகவே கிடைக்கிறது. ஆனால் இதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பயமும் இருக்கிறது” என்று கூறினார்.
இன்னொரு நாயகனாக நடித்துள்ள நலீம் ஜியா பேசும்போது, “சினிமாவில் எனக்கு இது முதல் படம். இதற்கு முன்பு மலையாளத்தில் ஆசியா நெட் சேனலில் ஒரு சீரியலில் கிட்டத்தட்ட 920 எபிசோடுகள் கதாநாயகனாக நடித்துள்ளேன். சினிமா எப்படித இருக்கும் என்கிற ஆர்வத்தில் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நினைத்து வந்ததைவிட இங்கே சினிமா இன்னும் பயங்கரமாக இருக்கிறது” என்று கூறினார்.
நடிகர்கள்
விஜய் விஷ்வா, நலீம் ஜியா, மஹானா சஞ்சீவி, ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் மற்றும் பலர்
*தொழில்நுட்ப குழுவினர் விபரம்”
தயாரிப்பாளர் ; T.குமாரதாஸ்
இயக்குனர் ; கெவின் ஜோசப்
இசை ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி
படத்தொகுப்பு ; T.S.ஜெய்
ஒளிப்பதிவு ; பிரசாத் ஆறுமுகம்
சண்டைப்பயிற்சி ; மிராக்கிள் மைக்கேல்
நடனம் ; ராஜுமுருகன்
பாடகர்கள் ; அந்தோணிதாசன், ஐஸ்வர்யா, சாய்சரண்
பாடலாசிரியர்கள் ; வினோதன், அருண்பாரதி, சீர்காழி சிற்பி
எபெக்ட் ; ராண்டி
மிக்சிங் ; கிருஷ்ணமூர்த்தி
பத்திரிகைத் தொடர்பு ; ரியாஸ் K.அஹ்மத்


