June 7, 2023

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு குட் பை ; 6 வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தார்!

களேபரத்துக்கு பேர் போன கர்நாடகா சட்டப்பேரவையில் கடந்த வாரத்தில் இருந்து நடந்து குழப்பங் களை அடுத்து இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து தோல்வியடைந்தது. அதிலும் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத உறுப்பினர்கள் 16 பேர் ராஜிநாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் பரபரப்பாக அரங்கேறத் தொடங்கியது. இதை தொடர்ந்து, எனது தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பேரவையில் 18-ஆம் தேதி நடைபெறும் என்று குமாரசாமி தெரிவித்தார்.

அதன்பிறகு, கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் பலகட்ட அமளிக்கு மத்தியில் நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன்பிறகு, ஒருவழியாக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று குமாரசாமி தெரிவித்தார். மேலும் இந்த  நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அவர் சட்டப்பேரவை யில் உருக்கமாக பேசினார்.

இதன் பிறகு, குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசை ஆதரித்து 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அவருடைய அரசுக்கு எதிராக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மையை இழந்தது.

இதன்மூலம், கர்நாடகாவில் அரங்கேறி வந்த அரசியல் நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அதேசமயம், 13 மாதங்கள் நீடித்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து, குமாரசாமி ஆளுநரைச் சந்தித்து தனது ராஜிநாமாவை அளிக்கவுள்ளார். அதே சமயம் எடியூரப்பாவிற்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று தகவல்கள் வெளியாகிறது.