கோட்டக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டுகளை வழங்க &, வாடிக்கையாளர்களை சேர்க்க தடை !- ரிசர்வ் பேங்க் அதிரடி
நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வருகிறது –கோட்டக் மஹிந்திரா வங்கி. இந்த நிலையில், இந்த கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல் படி புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கவும், கிரெடிட் கார்டு வழங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலுள்ள தனியார் வங்கியில் 5-வது பெரிய வங்கியாக கோட்டக் மஹிந்திரா பேங்க் கடந்த 2022, 23-ம் ஆண்டுகளில் ஆன்லைன் வங்கி சேவைக்கான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தற்போது , வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A இன் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், கோடக் மஹிந்திரா வங்கி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டு, விலகுமாறு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே பல முறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தபிறகும் கோட்டக் மஹிந்திரா வங்கி உரிய மாற்றங்களை கொண்டு வராததால், தடை விதிக்கும் முடிவை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.போதிய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இல்லாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டக் வங்கியின் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். எனவே, அடுத்த தணிக்கைக்குப் பிறகு தடை உத்தரவு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் (i) அதன் ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்தல் மற்றும் (ii) ஆன்லைன் மூலம் புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்கவும் கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க தடை இல்லை என்றும், ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவு, பங்குச் சந்தை வர்த்தக நேரத்துக்குப்பிறகு வெளியானதால், கோட்டக் மஹிந்திரா பங்கு விலையில் பாதிப்பு ஏற்படவில்லை. ஏப்ரல் 24-ம் தேதி கோட்டக் மஹிந்திரா பேங்க் பங்கு விலை 1.60% மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


