‘கொம்பு சீவி’ இசை வெளியீடு:சரத்குமார்-சண்முக பாண்டியன் இணைந்த பாச விழா!
‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் மற்றும் ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடித்திருக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமான உணர்வுப்பூர்வமான விழாவாக நடைபெற்றது. இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவான இந்த கிராமியப் பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி என்டர்டெய்னரில் தார்னிகா, காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் 19-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், கொம்பு சீவி படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போது மிகுந்த எனர்ஜியாக இருப்பதாகவும், கொம்பு சீவி என்பது கிராமப்புறத்தில் காளையைக் குறிக்கும் என்றும், இதில் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் அந்த அளவிற்கு ஆக்ரோஷமாக இருப்பதாகவும் பாராட்டினார். கேப்டன் விஜயகாந்த் கண்களில் இருந்த நெருப்பும் வேகமும் சண்முக பாண்டியனிடமும் தெரிகிறது என்று கூறிய அவர், சரத்குமாரின் தோற்றம் ‘வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!’ என்பது போல் இருப்பதால், இந்தப் போஸ்டரே படத்தின் வீரத்தைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், இந்தப் படத்தில் நகைச்சுவையை விட ஆக்ஷன் வேகம் அதிகம் இருக்கும் என நம்புவதாகவும், இன்றைய தலைமுறையினர் ரசிப்பதை அறிந்து இப்படத்தைக் கொடுத்த பொன்ராம் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். மேலும், எம் கே தியாகராஜ பாகவதர் – பி யு சின்னப்பா தொடங்கி, எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் எனத் திரையுலகில் மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம் என்றும், இளைஞர்களாகிய இவர்களின் வெற்றி அவசியம் என்றும், ஏனெனில் மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள் என்றும் வாழ்த்தி விடைபெற்றார்.
நடிகர் ரியோ பேசுகையில், சிவகார்த்திகேயனை வைத்து மூன்று வெற்றிப் படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் பொன்ராம் என்றும், ‘சீம ராஜா’ திரைப்படம் தொலைக்காட்சியில் குடும்பம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய திரைப்படங்களில் முதன்மையான இடத்தை பிடித்திருப்பதால், ‘பிராப்பரான டெலிவிஷன் மூவி’ என்றால் இயக்குநர் பொன்ராமிற்கு தான் அதில் முதலிடம் என்றும் புகழ்ந்தார். படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது காமெடியும், ஆக்ஷனும் அதிகம் இருப்பதாகத் தெரிவித்த அவர், கிராமியப் பின்னணியிலான படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஸ்பெஷலாக இருக்கும் என்றும், ‘பருத்திவீரன்’, ‘விருமன்’ போன்ற படங்களை உதாரணம் காட்டினார். சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ படத்தின் மூலமாகத்தான் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார் என்றும், இன்றும் சரத்குமார் யுவனின் இசை போலவே இளமையாக இருப்பதால், இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், இந்தக் கொம்பு சீவி திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் கேப்டன் மீது வைத்திருக்கும் நட்பின் காரணமாகவே பொன்ராமைச் சந்தித்து, இந்தப் படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டதாகத் தெரிவித்தார். பாடலுக்கான வாய்ப்பு கிடைத்தவுடன் ‘ராஜ்ஜியம்’ படத்தில் இடம்பெற்ற ‘தமிழன் தமிழன்..’ போன்ற பாடல் எழுதுவதற்கான சூழல் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கும் இந்த படத்தில் கமர்ஷியல் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார். இருப்பினும், கேப்டனுக்கு எழுதியது போல் அசைக்க முடியாத பாடல் ஒன்றை சண்முக பாண்டியனுக்காக விரைவில் எழுதுவேன் என்று உறுதியளித்தார். கேப்டனுடன் ஆறு, ஏழு படங்களில் பணியாற்றி இருப்பதாகவும், அவருடைய நினைவுகள் ஏராளம் என்றும், சண்முக பாண்டியன் திரையுலகில் வளர்ந்தால் தாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என்றும், கேப்டனுக்குத் திருப்பி செலுத்த வேண்டிய அன்பை உங்கள் மீது செலுத்துவோம் என்றும், அன்பு ஒருபோதும் தோற்காது; அன்பு வெல்லும்; கொம்பு சீவியும் வெல்லும் என நம்புவதாகவும் வாழ்த்தினார்.
இயக்குநர் எம் ராஜேஷ் பேசுகையில், இந்தப் படம் ஒரு குடும்ப விழாவைப் போல் இருப்பதாகவும், தாமும் பொன்ராமும் நீண்டகால நண்பர்கள் என்பதால், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திலிருந்து ‘கொம்பு சீவி’ படம் வரை நண்பனாகவும் கதை விவாதத்தில் பங்கு கொண்டும் உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார். தான் படத்தை பார்த்து விட்டதாகவும், திரையில் இரண்டு தூண்களாகச் சரத்குமார் – சண்முக பாண்டியன் தோன்றுவதாகவும், சரத்குமார் எனர்ஜியுடன் கூடிய நடிப்பை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். படத்தை பார்க்கும் போது பல இடங்களில் சண்முக பாண்டியன் நடிப்பில் கேப்டனைப் பார்ப்பது போல் இருந்ததாகவும், இது ரசிகர்களுக்கு அற்புதமான தருணமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் பேசுகையில், பொன்ராமின் காமெடி திரைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், இந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போது அவரது முந்தைய வெற்றிப் படங்களின் பட்டியலில் இணைவதை போல் தெரிகிறது என்றும் வாழ்த்தினார். சண்முக பாண்டியனுக்காக மிகப்பெரிய இடம் ஒன்று காத்திருப்பதாகவும், தைரியத்துடன் அதில் பயணம் செய்யுங்கள் என்றும், எல்லாத் திறமைகளும் அவரிடத்தில் இருப்பதோடு அவருடைய அப்பா அம்மாவின் ஆசியும் உறுதியாக இருக்கிறது என்றும் கூறினார். இந்தப் படம் சண்முக பாண்டியன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
விஜய பிரபாகரன் பேசுகையில், தான் ஹீரோவின் அண்ணனாக இல்லாமல், சண்முக பாண்டியனின் ரசிகனாக இங்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். சண்முகம் 2012-ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கி 13 ஆண்டு காலமாகப் பயணிக்கிறார் என்றும், இத்தனை ஆண்டுகளில் இது நான்காவது படம் தான் என்றும் கூறினார். ஏனென்றால், நடுவில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது, படங்களில் நடிப்பதை விட அப்பாவுடன் இருந்து அவரை மீட்டு மீண்டும் தமிழக மக்களுக்குத் தர வேண்டும் என்று உறுதியாகச் சொன்னது சண்முகம் தான் என்றார். அப்பா இல்லாத நிலையில், சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காகச் சரத்குமார் சார் கை கொடுத்து ஆதரவு தருவது பாசிட்டிவாகப் பார்க்கிறேன் என்றும், கேப்டனும் சரத் சாரும் ‘புலன் விசாரணை’ காலகட்டத்திலிருந்து ஒன்றாகவே பயணித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், ‘வஸ்தாரா..’ பாடலில் சரத் சாரும் சண்முகமும் நடனமாடியது சிறப்பாக இருந்ததாகவும், கேப்டன் விரும்பியபடி சண்முகத்தின் முதல் மூன்று படங்களுக்கும் இளையராஜா குடும்பத்திலிருந்து (கார்த்திக் ராஜா, இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா) இசை கிடைத்திருப்பது கேப்டனின் ஆசி பரிபூரணமாக இருக்கிறது என்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார். இந்தப் படம் ஒரு புது கூட்டணி என்றும், டிசம்பர் 19-ம் தேதியன்று ‘கொம்பு சீவி’ மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நம்புவதாகவும் பேசினார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், கேப்டனின் படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும், அவர் தனக்கு மிகவும் இன்ஸ்பயரிங்கான பர்சன் என்றும் கூறினார். இயக்குநர் பொன்ராம் யார் ஹீரோ எனக் கேட்டபோது சண்முக பாண்டியன் என்று சொன்னதுமே ஒரு வினாடி கூடத் தாமதிக்காமல் இசையமைக்க ஒப்புக்கொண்டதாகவும், கேப்டன் சார் ஏராளமானவர்களுக்குத் தூணாக (Pillar) இருந்திருக்கிறார் என்றும், சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நிச்சயமாக ஒரு பெரிய இடம் உண்டு என்றும் தெரிவித்தார். சரத்குமாரிடமிருந்து தொடங்கி இன்று சண்முக பாண்டியனுக்கும் தான் பணியாற்றுகிறேன் என்று கூறிய யுவன், பொன்ராமின் டிரேட் மார்க் காமெடி காட்சிகள் சூப்பராக இருந்ததாகவும், அவருடைய இயக்கத்தில் பணியாற்றியது ஜாலியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இந்த விழாவில் இருக்கும் அனைவரும் கேப்டனைத் திருமணம் செய்த நாளிலிருந்து தனக்கு அறிமுகமானவர்கள் தான் என்றும், யுவனும் தனக்குப் பிள்ளை தான் என்றும், சரத்குமாருடனும் தனக்குப் பல ஆண்டுகளாகப் பிணைப்பு உண்டு என்றும் தெரிவித்தார். ‘புலன் விசாரணை’ திரைப்படமும் தங்கள் திருமணம் நடந்த அதே ஜனவரி 31, 1990 அன்றுதான் வெளியானது என்றும், அன்று முதல் அவர்கள் இருவரிடத்திலும் உண்டான நட்பு இன்று வரை உறுதியுடன் தொடர்வதாகவும் கூறினார். நடிகர் சங்கத் தலைவராகப் பணியாற்றியபோது சரத் சாரும் நெப்போலியன் சாரும் கேப்டனுக்கு இரண்டு கரங்கள் போல் இணைந்து செயல்பட்டார்கள் என்றும் நினைவுகளைப் பகிர்ந்தார். தான் படத்தைப் பார்த்து விட்டதாகவும், இந்தப் படம் குடும்பம் குடும்பமாகத் திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து ரசித்துக் கொண்டாட கூடிய படமாக இருக்கும் என்றும், ராஜா சாரும் யுவனும் இணைந்து பாடியிருக்கும் அம்மா சென்டிமென்ட் பாடல் படத்திற்குச் சிறப்பு என்றும், சண்முகமும் அவரது தாய் மாமனாக நடித்திருக்கும் சரத் சாரும் அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கும் என்றும், இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும் கூறினார். டிசம்பர் 19-ம் தேதியன்று படம் வெளியாவதால், அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் பொன் ராம் பேசுகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையா தான் சண்முக பாண்டியனை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார் என்றும், அதனால் அவருக்குத் தனது முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப்பிடிப்பின்போது வைகை அணை பகுதியில் விவசாயம் நடப்பதைப் பார்த்த அனுபவம் தான் இந்தப் படத்திற்கான கதையாக உருவானது என்றும், அது ஒரு சீரியஸான கதை என்றாலும், அதுதான் தனக்கான சவால் என்பதால், ஆக்ஷனும் காமெடியும் கலந்த என்டர்டெய்னராக இதை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியதாகவும், சரத்குமாரிடம் கதை சொல்லும் போது சற்று பயம் இருந்ததாகவும், ஆனால் அவர் குழந்தையாகவும் இளைஞராகவும் இருப்பதால் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிகா, சரத்குமார் நடித்த ‘நாட்டாமை’ படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்த நடிகை ராணியின் மகள் என்ற அரிய தகவலையும் வெளியிட்டார். சண்முக பாண்டியன் சண்டைக் காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்காமல் நேரடியாகப் படப்பிடிப்பில் கலந்து கொண்டது கேப்டனின் ரத்தத்தில் ஊறிய விஷயம் என்றும், அவருக்கு ஒரு குளோசப் காட்சி வைக்கும் போது கேப்டனைப் பார்த்தது போலவே இருந்தது என்றும் ஆச்சரியம் தெரிவித்தார். படத்தின் கதைக்களம் 1996-ம் ஆண்டு என்பதால் அதற்கு ஏற்ற வகையில் தோற்றத்தை மாற்றியதாகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தப் படத்திற்காகப் பின்னணி குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
தயாரிப்பாளர் முகேஷ் த செல்லையா பேசுகையில், இளையராஜா மற்றும் கேப்டன் விஜயகாந்த் ஆகிய இருவரும்தான் தமக்கு இன்ஸ்பிரேஷன் என்றும், கேப்டன் பிரியாணி மட்டும் போடவில்லை, அதனைப் பாசத்துடன் வழங்குவார் என்றும் கூறினார். அவர்களுடைய இன்ஸ்பிரேஷனால்தான் தான் தயாரிப்பைத் தொடங்கி இருப்பதாகவும், இந்தப் படம் வெற்றி பெற அனைவரது ஆதரவும் தேவை என்றும் கேட்டுக்கொண்டார்.

நடிகர் சண்முக பாண்டியன் பேசுகையில், இந்தப் படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்றும், அப்பாவின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்திருப்பதால், இந்தப் படத்தில் பணியாற்றியதிலிருந்து தனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார் என்றும் தெரிவித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைப் பார்த்த பிறகு தானும் இயக்குநர் பொன்ராமின் ரசிகனாகி விட்டதாகவும், அவருடன் பணியாற்ற முடியும் என்ற தனது ஆசை இன்று சாத்தியமாகி இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் படம் சீரியஸான கதை என்றாலும், இயக்குநர் அதை நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார் என்றும், அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று ரசிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், இந்த விழாவை ஒரு உணர்வுப்பூர்வமான விழாவாகவே கருதுவதாகவும், மேடையில் நிற்கும்போது அன்பு நண்பர் விஜயகாந்தை நினைக்காமல் இருக்க இயலாது என்றும், அவரைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் தன் கண்கள் கண்ணீரால் நிரம்பிவிடும் என்றும் உணர்ச்சிவசப்பட்டார். இந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். புலன் விசாரணை படத்திற்காக விஜயகாந்த் தான் தன்னை வில்லனாகப் பரிந்துரை செய்தார் என்றும், அது மறக்க முடியாத தருணம் என்றும் குறிப்பிட்டார். சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராவார் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். சண்முகம் தனது உயரத்தைப் பற்றித் தவறாக நினைக்காமல், ‘தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன்’ போல நிமிர்ந்து கதையைக் கேட்டுப் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இந்த ‘கொம்பு சீவி’ படத்தை அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று பார்க்க வேண்டும் என்றும், திரைப்படம் வெளியான 30 நாட்களில் டிஜிட்டல் தளத்தில் வந்துவிடும் என்று காத்திருக்காமல், திரையரங்கில் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், டிஜிட்டல் தளங்களும் திரைப்படத்திற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுப்பதைப் 50 நாளாக உயர்த்தினால் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.


