25 ஆண்டுகளுக்குப் பிறகு குஷி: பழைய நினைவுகளை மீட்டெடுத்த பத்திரிகையாளர் சந்திப்பு!
சென்னை: தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘குஷி’. வெளியாகி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்டம்பர் 26 அன்று திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் வெளியிடுகிறார். இதனையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் படத்தின் வெற்றிப் பயணம் குறித்து மனம் திறந்து பேசினர்.

குஷி: ஒரு காதல் காவியத்தின் வெற்றி
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசுகையில், படம் மறுவெளியீடு செய்யப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் ‘குஷி’யாகப் பார்த்து மகிழ்வார்கள் என நம்புகிறேன்” என்ற அவர், படத்தின் ஆரம்பக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். “‘வாலி’ படத்தின் வெற்றியைப் பார்த்துதான் நான் எஸ்.ஜே.சூர்யாவை தேடினேன். ‘கதைக்கு இயக்குநர்தான் முக்கியம்’ என நான் கூற, அவர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இயக்கினார். இப்படத்திற்கு இசை தேவா சார்தான் என்பதை நம்ப முடியவில்லை. அவர் ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ மெட்டில் போட்டுக் கொடுத்த ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது.”
படத்தின் மையக்கருவான ‘ஈகோ’ பற்றி வைரமுத்து பாராட்டியதையும் அவர் நினைவு கூர்ந்தார். “வைரமுத்து சார் படம் பார்த்துவிட்டு, ‘ஈகோ என்ற மெலிதான வரியை வைத்துக்கொண்டு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க தைரியம் வேண்டும்’ என்று சொன்னதாக சூர்யா என்னிடம் கூறினார்” என்றார். மேலும், இன்றுள்ள ரசிகர்களுக்கு ‘குஷி’யின் திரையரங்கு அனுபவம் கிடைத்திருக்காது என்றும், அவர்கள் நிச்சயம் இப்படத்தை ரசிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சினிமாவில் மறுவெருவாக்கம் செய்யும் குஷி
படத்தின் விநியோகஸ்தரான சக்திவேலன், பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் ‘குஷி’யின் ட்ரெய்லரை ரசித்துப் பார்த்தது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகத் தெரிவித்தார். “கட்டிப்புடி பாடலுக்கு ரசிகர்கள் காட்டும் கொண்டாட்டத்தைப் பற்றி மும்தாஜ் மேடமிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது” என்று அவர் குறிப்பிட்டார்.
‘கில்லி’ படத்திற்குப் பிறகு ‘குஷி’யின் மறுவெளியீட்டிற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதாகவும், இது ஒரு ஊர் திருவிழா போல இருக்கும் என்றும் அவர் கூறினார். பெண்களுக்காகப் பிரத்யேகக் காட்சிகளைத் திரையிடவும் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். “குஷி படத்தின் வெற்றிக்கு, ‘பாப்பு’ போன்ற ஒரு எளிமையான வார்த்தைகூட மக்களோடு எளிதாக இணைந்ததும் ஒரு காரணம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
எஸ்.ஜே.சூர்யாவின் மனம் திறந்த பேச்சு
‘குஷி’யை இயக்கி, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா, பத்திரிகையாளர்களின் வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்து போனார். “‘இளைய தளபதியை’ மீண்டும் இப்படிப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்தப் படத்தில் மிகவும் அழகாக இருப்பார்” என்று விஜய் குறித்துப் புகழ்ந்தார்.
படைப்பாளியாக தனது பணி குறித்துப் பேசிய அவர், “ஒரு படத்திற்கு நான் கதை சொல்லும்போதே அதை பல லட்சம் முறை பார்த்தது போன்ற அனுபவம் ஏற்படும். ஆனால், ‘குஷி’யை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடன் பார்த்தபோது, எனக்கு முதன்முறையாகப் பார்த்தது போல உணர்வு ஏற்பட்டது” என்றார்.
மேலும்”கட்டிபுடி பாடலுக்கு எல்லோரும் ரசித்துப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாடலை தேவா சாரிடம் கேட்கும்போது, செந்தமிழ் தேன் மொழியாள் மெட்டில் போடுங்கள் என்றேன். அப்படித்தான் கட்டிபுடி பாடல் உருவானது. அதேபோல், மொட்டு ஒன்று மலர்ந்திடும் பாடல் மெட்டுக்கு எழுதாமல் பாட்டுக்கு மெட்டுப் போட்டுக் கொடுத்தார். அப்பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கக் கூடிய ஊடலை அழகாக சொல்லும். அந்த கவிதை வரிகளுக்கு தேவா சார் அற்புதமாக இசையமைத்தார். இப்படத்தில் ஒவ்வொன்றும் தானாகவே அமைந்தது”என்றார்
கலைஞர்களைப் பற்றிப் பேசிய சூர்யா, “இப்படத்திற்கு அழகாக ஒளிப்பதிவு செய்த ஜீவா சாரை இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன். அதேபோல், நான் நடிகனாக வேண்டும் என்றுதான் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் என்னை இயக்குநராக்கி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சார்தான்” என்று நன்றியுடன் தெரிவித்தார். மேலும், அவர் அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் இறங்கி அடிப்பேன் என்றும், அதற்கு முன்னோட்டமாக இந்த மறுவெளியீடு இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


