கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குண்டு வைத்து தகர்ப்பு!
கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி குடி யிருப்புகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்கும்படி, கடந்த மே 8-ம் தேதி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் காலி செய்யாததால் கேரள அரசு கட்டிடத்தை இடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.
ரூ .25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்கள், இடிப்பதைத் தடுப்பதற்கான கடைசி போராட்டம் வீணாக முடிவடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாரத்தில் வளாகத்தை விட்டு வெளியேறினர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மராடு நகராட்சியில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று காலையில் தொடங்கியது. மராடு நகராட்சியில் அமைந்துள்ள ஹோலி ஃபெய்த் எச் 20 குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை 11.18 மணிக்கு இடிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஆல்ஃபா செரீன் குடியிருப்பின் இரட்டைக் கோபுரங்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு இடிக்கப்பட்டன