கலைமாமணி: விருதுச் சட்டகத்தைத் தாங்கும் கலைஞர்களும், காலத்தின் மாற்றத்தைக் கோரும் மேடையும்!
தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுக் களத்தில் ‘கலைமாமணி’ விருதுக்கென ஒரு நீண்ட வரலாறு உண்டு. கலைத்துறையில் வாழ்நாள் சாதனைகளைப் படைத்தவர்களைச் சிறப்பிக்கும் அந்தத் தருணம், ஒரு சமூகத்தின் பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது. சமீபத்தில் நடைபெற்ற கலைமாமணி விருதுகள் வழங்கும் நிகழ்வை நான் பார்த்தபோது, கலைஞர்கள் தேர்வில் பெரிய முரண்பாடுகள் இல்லாவிட்டாலும், நிகழ்வு மேடையில் அரங்கேறிய சில காட்சிகள் மனதைப் பெரிதும் வருத்தின.
விருதைப் பெரும் கலைஞர்கள், தங்களுக்குச் சான்றாக வழங்கப்படும் பட்டயச் சட்டகத்தைத் தாங்களே தூக்கிக்கொண்டு வந்து, முதலமைச்சரிடம் கொடுத்து, பின்னர் அவர் அதை வழங்குவதுபோல நிழற்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த ஏற்பாடு சில நிமிடப் புகழுக்காக நடத்தப்படும் தனிநபர் நிகழ்ச்சியைப் போலத் தோன்றுகிறதே தவிர, ஓர் அரசின் பண்பாட்டு நிகழ்வாகத் தெரியவில்லை. ஓரிரு மூத்த கலைஞர்களுக்கு மட்டும் துணை முதல்வர் சட்டகத்தை யாரிடமிருந்தோ வாங்கி முதலமைச்சர் கையில் கொடுக்கும் காட்சி, இந்த ஏற்பாட்டில் உள்ள அடிப்படை ஒழுங்குமுறை பிழையைக் கோடிட்டுக் காட்டுகிறது.
உண்மையில், இந்தக் கலைமாமணி விருதை வழங்குவதற்குப் பொறுப்பான இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்களும், அரசுத் தரப்பும், விருதுச் சட்டகத்தை முதலமைச்சர் கையில் வழங்குவதற்குக் கூட ஒரு பணியாளரையோ அல்லது அதிகாரியையோ நியமிக்க இயலாத அளவுக்கு யோசிக்க இயலாதவர்களா? என்ற கேள்வி எழுகிறது. நீண்ட காலமாகப் பண்பாட்டு நிகழ்வொன்றை அரங்கேற்றும் ஒரு கட்டமைப்பில், இந்த எளிய நடைமுறையில் கூட ஒரு நேர்த்தி இல்லாமை இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

இதற்கு மாறாக, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வழங்கப்படும் “கர்நாடக ரத்னா” போன்ற விருதுகளைக் கவனியுங்கள். அங்கே, விருது பெறுபவர்கள் அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகளில் அமர வைக்கப்படுகிறார்கள். முதலமைச்சரோ அல்லது சிறப்பு விருந்தினரோ நின்றபடியே பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களைச் சிறப்பிக்கிறார்கள். இதுவே, கலைக்கும் கலைஞனுக்கும் ஓர் அரசு கொடுக்கும் உயரிய மரியாதை.
தமிழ் சமூகம் கலைக்காகவும், கலைஞர்களின் தன்மானத்திற்காகவும் மாபெரும் அரசுகளையும், அதிகாரத்தையும் துச்சமாக மதித்துத் தூக்கி எறிந்த வரலாற்றைக் கொண்டது. அப்படிப்பட்ட பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்து வரும் கலைஞர்கள், தங்கள் விருதுச் சட்டகத்தை நீங்களே சுமந்து வந்து, கூனிக்குறுகி முதலமைச்சரை மகிழ்விக்க முயற்சி செய்வதைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. இது கலைஞர்களுக்கு ஏற்படும் அவமரியாதை மட்டுமல்ல; தமிழ் மண்ணின் கலைப் பெருமைக்கே இழைக்கப்படும் இழுக்கு.
முதலமைச்சரும், இயல், இசை, நாடக மன்றத்தின் பொறுப்பாளர்களும் நினைவில் கொள்ள வேண்டியது இது ஒரு தனிப்பட்ட வேண்டுகோள் அல்ல. உலகெங்கும் கலைகளை நேசிக்கும், கலைகளோடு வாழும், மானிடத்தின் சுயமரியாதை கொண்ட உள்ளக்கிடக்கை இது.
ஒரு பண்பட்ட சமூகம், தன் கலைஞர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதில்தான் அதன் நாகரீகத்தின் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, கலைமாமணி போன்ற அரசு விருது வழங்கும் நிகழ்வுகளில், கலைஞர்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இனிவரும் காலங்களில், மேடையில் அந்த விருதுச் சட்டகத்தைத் தாங்கி வரும் பணியைச் செய்து, கூனிக்குறுகும் உடல்மொழியை வெளிப்படுத்தும் நிலையைத் தமிழ்க் கலைஞர்களுக்குத் தராமல், அவர்கள் கெளரவிக்கப்படும் நிலையை உருவாக்குவீர்களா? இது காலத்தின் தேவை; கலைஞர்களின் தன்மானக் குரல்.
செய்வீர்களா?
கை.அறிவழகன்


