நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி நினைவு நாள்!
திரைகானம் பாடிய நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, கும்பகோணத்தில் பிறந்தவர். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி, டி.கே.எஸ். நாடக குழு, கிருஷ்ண நாடகசபா (இவரது சொந்த சபா) ஆகிய நாடக சபாக்களில் நடித்து தம் நடிப்பை வளர்த்துக் கொண்ட இவர், நாடகத்தைக் கண்ணாகப் போற்றியவர். தனது தந்தை காலமான அன்றும் கூட, தந்தையின் இறுதிக் கடன்களை முடித்த கையோடு, அன்றிரவே நாடகத்தில் நடித்தார்.

இவர் சார்ந்திருந்த திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 1960 ஆம் ஆண்டிலேயே எம்.எல்.சி. பதவி வகித்தவர் இவர். அறிஞர் அண்ணா இவருக்கு “நடிப்பிசைப் புலவர்’ என்ற பட்டமளித்தார். நடிப்பிசைப் புலவரை அனைவரும் “அண்ணாவின் செல்லப்பிள்ளை’ என்று செல்லமாக அழைத்தார்கள்.
நீதிபதி, பூம்பாவை, பில்ஹணா, கங்கணம், காஞ்சனா, விஜயகுமாரி, வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்க வாசல், செல்லப் பிள்ளை, அவன் அமரன், மேனகா (1955), கன்னியின் சபதம், துளிவிஷம், சுகம் எங்கே ஆகிய 15 படங்களில் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் நடித்து 100 நாட்கள் ஓடிய திரைப் படங்கள், குமாஸ்தாவின் பெண், பூம்பாவை, கிருஷ்ண பக்தி, வேலைக்காரி, சொர்க்கவாசல் ஆகியவை.
பராசக்தி படத்திற்கு முன்பே, கே.ஆர்.ஆர். நடித்த வேலைக்காரி படத்தில், அறிஞர் அண்ணாவின் வசனத்தில் ஓர் அருமையான நீதிமன்றக் காட்சி இடம் பெற்றது. “சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு’ என்ற அண்ணாவின் வசனம் பிரபலமாயிற்று. சட்டம் ஒரு இருட்டறை என்ற இந்த வசனம்தான் பின்னாளில் விஜயகாந்த் நடித்த படத்தின் தலைப்பாகியது.
தமிழ்த் திரையின் பிரதான நான்கு நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெமினி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் கே.ஆர்.ராமசாமி. எம்.ஜி.ஆருடன் அரச கட்டளை, நம் நாடு, நாடோடி ஆகிய படங்களிலும், சிவாஜியுடன் செந்தாமரை, துளிவிஷம் ஆகிய படங்களிலும், எஸ்.எஸ்.ஆருடன் செந்தாமரை, சொர்க்கவாசல், தலை கொடுத்தான் தம்பி ஆகிய படங்களிலும், ஜெமினியுடன் நீதிபதி, சதாரம் ஆகிய படங்களிலும் கே.ஆர்.ஆர். சேர்ந்து நடித்துள்ளார்.
கிருஷ்ண லீலா என்ற நாடகத்தில் இவர் கிருஷ்ணனாக நடித்தார். இந்த நாடகத்தில் இவருடன் ருக்மணியாக நடித்த கல்யாணியை இவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இவரின் துணைவியார் கே.ஆர்.ஆர். கல்யாணி, கோழி வளர்ப்பு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர்களுக்கு 4 மகள்களும் 1 மகனும் உள்ளனர்.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா ஆகிய நான்கு தமிழக முதலமைச்சர்களுடன் கலையுலகத் தொடர்பு கொண்டவர் கே.ஆர்.ராமசாமி. அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்தில் உருவான வேலைக்காரி, சொர்க்கவாசல், ஓர் இரவு, எதையும் தாங்கும் இதயம் ஆகிய படங்களிலும், எம்.ஜி.ஆர். நடித்த அரச கட்டளை, நம்நாடு, நாடோடி ஆகிய படங்களிலும், ஜெயலலிதா நடித்த அரச கட்டளை, நம்நாடு ஆகிய படங்களிலும், வி.என்.ஜானகி நடித்த வேலைக்காரி படத்திலும் கே.ஆர்.ராமசாமி நடித்துள்ளார்.
திராவிட இயக்கப் பிரமுகர்களான கண்ணதாசன் வசனம் எழுதிய கன்னியின் சபதம் படத்திலும், இராம.அரங்கண்ணல் வசனம் எழுதிய செந்தாமரை படத்திலும், முரசொலி மாறன் திரைக்கதை வசனம் எழுதிய தலை கொடுத்தான் தம்பி படத்திலும் கே.ஆர்.ராமசாமி நடித்துள்ளார். மேலும், கண்ணதாசனும் ஏ.கே.வேலனும் சேர்ந்து வசனம் எழுதிய சுகம் எங்கே என்ற படத்திலும் கே.ஆர்.ராமசாமி நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி ஆகிய நான்கு திராவிட இயக்க நடிகர்களில், நடித்தும் பாடவும் கூடியவராக விளங்கியவர் கே.ஆர்.ராமசாமி மட்டுமேயாவார்.
இவர் நன்றாக நடித்து சொந்தக் குரலில் பாடக்கூடியவராக இருந்தும், இரு பாடல் காட்சிகளில் இவருக்கு வேறு பின்னணிப் பாடகர்கள் குரல் கொடுத்திருப்பது ஒரு வியப்பான சினிமா வரலாறாக உள்ளது. “அவன் அமரன்’ படத்தில் வான்மதி நீயறிவாய் என்ற பாடல் காட்சியில் கே.ஆர்.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்துள்ளார். தலை கொடுத்தான் தம்பி படத்தில் கதை கதையாம் காரணமாம் என்ற பாடல் காட்சியில் கே.ஆர்.ஆருக்கு ஏ.எல்.ராகவன் குரல் கொடுத்துள்ளார்.
நடிப்பிசைப் புலவர் பெண் வேடமிட்டு நடித்த ஒரே படம் நீதிபதி என்ற படம் மட்டுமே. பெண் வேடமிட்ட நடிப்பிசைப் புலவரை, காதலிக்கும் காதலனாக நடித்தவர் டி.எஸ்.பாலையா.
குமாஸ்தாவின் பெண் படத்தை இயக்கிய பி.என்.ராவ் என்ற இயக்குநர், படப்பிடிப்பின் போது மது மயக்கத்திலேயே இருப்பாராம். கலைஞர்களை மதிக்காமல் கெடுபிடியுடன் நடந்து கொண்டு சர்வாதிகாரம் செய்வாராம். பி.என்.ராவ் இப்படி நடந்துகொண்டதால், இவரைப் பழிவாங்கும் நோக்கில் ஒரு காரியம் செய்தார் வசனம் எழுதிய டி.கே.முத்துசாமி. பி.என்.ராவ் என்ற இயக்குநரின் பெயரை இடவலமாக்கி வி.பி.வார் என்று ஒரு நகைச்சுவை பாத்திரத்தை இப்படத்தில் உருவாக்கினார் டி.கே முத்துசாமி. இவ்வேடத்தில் கே.ஆர்.ஆர். நடித்தார். விஜயனுக்கு கைவராத வில்வித்தையா… நடிப்பிசைப் புலவருக்கு கைவராத நடிப்பா… வி.பி.வார் வேடத்தில் நடித்து நையாண்டி செய்து பி.என்.ராவை ஒரு கை பார்த்து விட்டார் கே.ஆர்.ஆர். இதைப் பற்றி அறிஞர் அண்ணா குடியரசு பத்திரிக்கையில் சிறப்பாக ஒரு விமர்சனமும் செய்துள்ளார்.
சிரிப்பு நடிகர் வீரப்பன் நகைச்சுவை வசனம் எழுதுவது போல, கே.ஆர்.ஆர். நடித்த பில்ஹணா படத்தின் நகைச்சுவை பகுதி வசனங்களை, சிரிப்பு நடிகர் பிரண்ட் ராமசாமி எழுதியுள்ளார்.
கிருஷ்ண பக்தி படத்தின் கதாநாயகன் பி.யு.சின்னப்பா ஆனாலும், கிருஷ்ணனாக நடித்தது நடிப்பிசைப் புலவர்தான். நீதிபதி படத்தில் ஜெமினி கணேசன் நீதிபதி, கே.ஆர்.ஆர். குற்றவாளி. காஞ்சனா படத்தில் கே.ஆர்.ஆருக்கு மைத்துனராகவும், தலை கொடுத்தான் தம்பி படத்தில் தந்தையாகவும் நடித்துள்ளார் ஆர்.எஸ்.மனோகர். துளி விஷம் படத்தில் நடிப்பிசைப் புலவர் நாயகனாகவும், சிவாஜி கணேசன் வில்லனாகவும் நடித்துள்ளார்கள்.
இவர் முதன் முதலில் நடித்த மேனகா (1935) படத்தில் ஒரு பிச்சைக்காரனாக சிறிய வேடத்தில் நடித்தார். அடுத்து வந்த மேனகா (1955) படத்தில் கதாநாயகனாக நடித்தார். இரண்டும் ஒரே கதைதான்.
பம்மல் சம்மந்த முதலியாரின் மனோகரா கதையானது, திரைப் படமாக தயாரிப்பதற்கு முன்பு, மனோகரா என்ற பெயரிலேயே நாடகமாக நடிக்கப் பட்டது. நாடகத்தில் மனோகரனாக கே.ஆர்.ஆரும், மனோகரனின் தாயார் பத்மாவதியாக சிவாஜி கணேசனும் நடித்தனர். பின்பு, மனோகரா நாடகம் படமாக உருவாக்கப்பட்டபோது, படத்தில் மனோகரனாக சிவாஜி கணேசனும், மனோகரனின் தாயார் பத்மாவதியாக பி.கண்ணாம்பாவும் நடித்தனர். மேனகா கதை நாடகமாக நடிக்கப்பட்டபோது, நாடகத்தில் மேனகையாக நடித்து, நாயகர் பட்சமடி எனக்கது ஆயிரம் லட்சமடி, என்ற மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பாடலைப் பாடி நன்றாக நடிப்பாராம் கே.ஆர்.ஆர்.
கலைவாணர் தமது என்,எஸ்.கே. நாடக சபாவின் நிர்வாகத்தை கே.ஆர்.ஆரிடம் ஒப்படைத்திருந்தார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான கே.ஆர்.ஆர். சபாவை சரிவர நடத்தவில்லை. ஒரு நாள் சபாவில் மது மயக்கத்திலிருந்த நடிப்பிசைப் புலவரை, கன்னத்தில் அறைந்து விட்டார் கலைவாணர். அதுவரை யாரையுமே கைநீட்டி அடிக்காத கலைவாணர், தேம்பித் தேம்பி அழுத நடிப்பிசைப் புலவரைப் பார்த்து, “உனது வளர்ச்சிக்காகத்தாண்டா இந்த நாடக சபாவை நடத்துகிறேன். நீ இப்படி இருக்கிறாயே’ என்று சொல்லிவிட்டு, தாம் அணிந்திருந்த வைரக்கடுக்கன்களை கழட்டி நடிப்பிசைப் புலவருக்கு மாட்டி விட்டார்.
அறிஞர் அண்ணா தனக்காக எழுதி வைத்திருக்கும் நாடக ஆக்கங்களை பெற்றுச் செல்வதற்காக காஞ்சிபுரம் செல்வார் கே.ஆர்.ஆர். அப்படி அண்ணாவை சந்திக்க செல்லும் சமயத்தில் கூட மது மயக்கத்தில் செல்வார் என்று சொல்கிறார்கள், அண்ணா நடத்திய திராவிட நாடு சஞ்சிகையில் பணிபுரிந்தவர்கள். அண்ணாவும் தமது செல்லப் பிள்ளை கே.ஆர்.ஆரை கண்டித்து உள்ளார். நல்ல சாரீரம் உள்ள நடிப்பிசைப் புலவர் மதுவுக்கு அடிமையானது, அவரது சரீரத்துக்கு மட்டுமின்றி சினிமா சரித்திரத்திற்கும் இழப்புதான்.
சொர்க்க வாசல் படமானது தணிக்கை குழுவினரின் பார்வைக்குச் சென்றபோது அப்படத்தில் உள்ள “எங்கே சொர்க்கம்’ என்ற பாடலை தணிக்கை குழுவினர் நீக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதாவது அப்பாடலில் வரும் “ஆத்திகம் எது நாத்திகம் எது அறிந்து கொள்வீரே’ என்ற வரிகளைக் கடுமையாக ஆட்சேபித்தார்கள் தணிக்கை குழுவினர். அதனால் அப்பாடலுக்குப் பதிலாக “ஆகும் நெறியெது ஆகா நெறியெது’ என்ற பாடல் உருவாக்கப் பட்டு பின்பு படத்தில் இணைக்கப்பட்டது. இம்மாதிரியான (படத்தில் இடம் பெறாமல் இசைத் தட்டில் மட்டும் உள்ள) பாடல்களை, இலங்கை வானொலியில் “மலர்ந்தும் மலராதவை’ என்ற தலைப்பில் ஒலிபரப்புவார்கள்.
கே.ஆர்.ராமசாமி நடித்த 26 படங்களில் 16 படங்களில் மட்டும் மொத்தம் 45 பாடல்கள் பாடியுள்ளார். மேனகா (1935), குமாஸ்தாவின் பெண், பூம்பாவை, பில்ஹணா, கங்கணம், கிருஷ்ண பக்தி, தலை கொடுத்தான் தம்பி, நாடோடி, அரச கட்டளை, நம் நாடு ஆகிய 10 படங்களில் இவர் பாடல்கள் பாடவில்லை. இவர் பாடய 45 பாடல்களில் இவர் தனித்து 29 பாடல்களும், மற்ற பாடகர்- பாடகியருடன் சேர்ந்து 19 பாடல்களும் பாடியுள்ளார். “எதையும் தாங்கும் இதயம்’ படத்தில், உள்ளம் தேடாதே என்று சொல்லுதே என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து கே.ஆர்.ஆர். பாடியுள்ளார்.
கே.ஆர்.ராமசாமி நடித்த படங்கள்
மேனகா (1935), குமாஸ்தாவின் பெண் (1941), பூம்பாவை (1944), தெய்வநீதி (1947), பில்ஹணா (1948), கங்கணம் (1948), கிருஷ்ண பக்தி (1949), வேலைக்காரி (1949), விஜயகுமாரி (1950), ஓர் இரவு (1951), காஞ்சனா (1952), சொர்க்கவாசல் (1954), துளிவிஷம் (1954), சுகம் எங்கே (1954), மேனகா (1955), செல்லப்பிள்ளை (1955), நீதிபதி (1955), சதாரம் (1956), கன்னியின் சபதம் (1958), அவன் அமரன் (1958), தலை கொடுத்தான் தம்பி (1959), செந்தாமரை (1962), எதையும் தாங்கும் இதயம் (1962), நாடோடி (1966), அரச கட்டளை (1967), நம்நாடு (1969).


