நீலக் கிரகம் காப்போம்:2026 பெருங்கடல் தினச் சிறப்பு!
நம் பூமியின் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீல வண்ணப் போர்வையாய் படர்ந்திருக்கும் பெருங்கடல்கள், வெறும் நீர்நிலைகள் அல்ல; அவை இந்த பூமியின் இயக்கத்தை சாத்தியமாக்கும் உயிர்நாடிகள். ஆண்டுதோறும் ஜூன் 8-ஆம் தேதி உலகப் பெருங்கடல்கள் நாளாகக் கொண்டாடப்படும் வேளையில், இந்த 2026-ஆம் ஆண்டு நமக்கு ஒரு புதிய பார்வையையும், பொறுப்பையும் ஐக்கிய நாடுகள் சபை வழியாகக் கடத்தியிருக்கிறது.
Reimagine 2026: கடலுடனான உறவை மறுபரிசீலனை செய்தல்
இந்த ஆண்டின் உலகப் பெருங்கடல்கள் தினத்திற்கான அதிகாரப்பூர்வ கருப்பொருள் (Theme):
“Reimagine: Beyond the world we know, a new relationship with our ocean” (மறுவடிவமைப்பு: நாம் அறிந்த உலகிற்கு அப்பால், நமது பெருங்கடலுடன் ஒரு புதிய உறவு)
இன்று நாம் கடலை நமக்குத் தொலைவில் இருக்கும் ஒன்றாகவோ, அல்லது வெறும் சுற்றுலாத் தலமாகவோ பார்ப்பதை நிறுத்த வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, நம்மை வாழ வைக்கும் காலநிலை சமநிலை என எல்லாவற்றிலும் கடல் நம்முடன் பிணைந்துள்ளது.

இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கும் மிக முக்கியமான மாற்றம்: நாம் கடலின் வளங்களை வெறும் நுகர்வோராக மட்டும் அனுபவிக்கும் ‘வெறும் பயனாளிகள்’ (Passive inheritors) என்ற நிலையிலிருந்து மாறி, அதைப் பாதுகாக்கும் ‘செயல்படும் பாதுகாவலர்களாக’ (Active guardians) மாற வேண்டும் என்பதாகும். அண்மையில் கொண்டுவரப்பட்ட ‘உயர் கடல் உடன்படிக்கை’ (High Seas Treaty) போன்ற சர்வதேச முயற்சிகள் இதற்கு வலு சேர்க்கின்றன.
2026-ன் இலக்கு: வலுவான கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
பல ஆண்டுகளுக்கு வழிகாட்டும் நீண்டகால நடவடிக்கைத் தீமாக (Action Theme) இந்த ஆண்டு பின்வரும் வாசகம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது:
“Strong Marine Protected Areas for Our Blue Planet” (நமது நீலக் கிரகத்திற்கான வலுவான கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்)
நிலத்தில் காடுகளைப் பாதுகாப்பது போல, கடலிலும் குறிப்பிட்ட பகுதிகளை மனிதச் சுரண்டல்கள் இல்லாத ‘பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக’ மாற்றுவதே இதன் நோக்கம். அப்போதுதான் கடல் வாழ் உயிரினங்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
என்ரிக் ஜொர்மிலோவின் எச்சரிக்கையும் உலக நாடுகளின் விழிப்பும்
கடல் பாதுகாப்பு என்பது ஏதோ நவீனக் கருத்துரு அல்ல. 1980-களிலேயே அர்ஜெண்டினாவைச் சேர்ந்த என்ரிக் ஜொர்மிலோ என்ற தீர்க்கதரிசி, புவி வெப்பமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்றும், இதனால் கடல் நீரோட்டங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்றும் உலகை எச்சரித்தார். விளைநிலங்களுக்கு நதிநீர் எப்படியோ, அப்படி கடல் வாழ் உயிரினங்களுக்குக் கடல் நீரோட்டங்கள் முக்கியம் என்பதை அவர் உணர்த்தியபோது உலகம் அதை நம்ப மறுத்தது.
ஆனால், 1990-களில் அமெரிக்கக் கண்டத்தின் கடற்பகுதிகளில் ஏற்பட்ட வெப்ப மாற்றத்தால் கடல்பாசி, கிரில்ஸ் இறால்கள், மற்றும் பவளப்பாறைகள் போன்ற ‘கடலின் தூய்மைப் பணியாளர்கள்’ அழியத் தொடங்கின. கடலில் சேரும் கழிவுகளை உண்டு கடலைச் சுத்தமாக வைத்திருக்கும் இந்த உயிரினங்களின் அழிவால், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடற்கரைகளில் அசுத்தங்கள் குவிந்தன. இதன் நேரடி விளைவாக ஆசிய மற்றும் அமெரிக்கக் கடற்கரையோர நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள் தீவிரமாகப் பரவின. நோய்களின் தாக்கத்திற்குப் பிறகே, உலகம் என்ரிக் ஜொர்மிலோவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்து விழித்துக் கொண்டது.
பூமி உச்சி மாநாடு முதல் ஐநா அங்கீகாரம் வரை
கடலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உலக நாடுகளிடையே பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, 1992 ஜூன் 8 அன்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பூமி உச்சி மாநாட்டில்’ (Earth Summit) உலகப் பெருங்கடல்கள் நாளைக் கொண்டாடுவதற்கான கோரிக்கையைக் கனடா முதன்முதலில் முன்வைத்தது.
தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கொண்டாடப்பட்டு வந்தாலும், கடலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு 2008-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை இதற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தது. தற்போது ‘உலகளாவிய பெருங்கடல் திட்டம்’ (The Ocean Project) என்ற அமைப்பினால் இந்த நாள் உலகெங்கும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
பூமியின் குளிர்சாதனப் பெட்டி: கடலின் அத்தியாவசியப் பங்களிப்புகள்
கடல் இல்லை என்றால் பூமியில் மனித வாழ்க்கையே சாத்தியமில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
-
காலநிலை சீரமைப்பு: கடல் என்பது நம் பூமியின் இயற்கை குளிர்சாதனப் பெட்டி (Refrigerator). அது சூரியனின் வெப்பத்தை உள்வாங்கி, பூமியின் வெப்பநிலையைச் சமமாக வைக்கிறது. கடல் இல்லையென்றால் வானத்தின் அழகிய நீல நிறமும் நமக்குக் கிடைக்காது; நிலப்பரப்புக்குத் தேவையான மழையும் பெய்யாது.
-
பொருளாதாரத்தின் அச்சாணி: கண்டங்களை இணைக்கும் கடல் மார்க்க வர்த்தகமும் போக்குவரத்தும் தான் உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன.
-
உணவும் மருத்துவமும்: ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்களின் பசியைத் தீர்க்கும் உணவாதாரமாகவும், பல உயிர்காக்கும் மருந்துகளின் மூலப்பொருட்களின் களஞ்சியமாகவும் கடல்களே திகழ்கின்றன.
காப்பது நம் கடமை: எதிர்காலத் தலைமுறைக்கான சவால்
கடந்த 30 ஆண்டுகளில், மனிதனின் பேராசையால் கடலின் வளங்கள் மிகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, மற்றும் கடலில் டன் கணக்கில் குவியும் ஞெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் கடலின் ஒட்டுமொத்த இயல்பையும், அதன் அமிலத்தன்மையையும் மாற்றி வருகின்றன. கடல்வாழ் உயிரினங்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து அழியத் தொடங்கிவிட்டன.
நாம் ஆறுகளையும், ஏரிகளையும் தூய்மைப்படுத்தப் போராடுவது போல, கடல்களையும் தூய்மைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்று நாம் கடலைப் பாதுகாக்கத் தவறினால், நம் எதிர்காலத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லப் போவது:
-
நீல நிறத்திற்குப் பதிலாக அசுத்தங்கள் படர்ந்த அமில நீர்,
-
எப்போதும் இருள் சூழ்ந்த நச்சு வானம்,
-
ஆக்சிஜன் வற்றிப்போன ஒரு பாழடைந்த பூமி.
நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, கடலில் கழிவுகள் கலப்பதைத் தடுப்பது மற்றும் கடல் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை பரப்புவது போன்ற சிறு செயல்களின் மூலமே நாம் “Reimagine 2026” என்ற இலக்கை அடைய முடியும். நம் நீலக் கிரகத்தை அதன் இயல்பான அழகோடு அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது நம் ஒவ்வொருவரின் வரலாற்றுப் பொறுப்பாகும்.
நிலவளம் ரெங்கராஜன்


