ஜல்லிக்கட்டு ஆடணுமுன்னா – கம்ப்யூட்டரிலே ஆடுங்கப்பூ! – சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் அட்வைஸ்!
தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014–ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8–ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனிநபர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று, சுப்ரீம் கோர்ட்டு ஜனவரி 14–ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. பதில்மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசு ஜூலை மாத இறுதியில் பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுவின் மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடங்கியது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள் ஒருபுறம் காளைகளை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவு போடுகிறீர்கள். மறுபுறம் காளைகளை துன்புறுத்தும் போட்டிகளை அனுமதிக்க வேண்டும் என்று வாதிடுகிறீர்கள். மத்திய அரசு முரண்பட்ட நிலையை மேற்கொள்வது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டனர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, ‘மராத்தான் போட்டிகளுக்கு அனுமதி வழங்கும்போது காளை போட்டிகளுக்கு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? மனிதர்களின் உரிமைகளை விட காளைகளின் உரிமை உயர்வானது என்று கருத முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நீதிபதிகள், “மராத்தான் போட்டியில் மனிதன் தன்னுடைய விருப்பத்தின் பேரில் கலந்து கொள்கிறார். ஆனால் ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகளின் பங்கேற்பு அவற்றின் விருப்பத்துக்கு எதிராக வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. 16–ம் நூற்றாண்டில் அடிமைகள் நடத்தப்பட்டது போல காளைகள் நடத்தப்படுகின்றன. அதனால்தான் ஜல்லிக்கட்டு சட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்கத்தக்கது அல்ல” என்றார்கள்
மேலும் நீதிபதிகள், மனிதர்களின் மகிழ்ச் சிக்காக காளைகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த நவீன யுகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை கம்ப்யூட்டரில் விளையாடலாமே? என்றும் கேள்வி எழுப்பினர்.
பீட்டா உள்ளிட்ட அமைப் புகள் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர்கள், ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஏராள மான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. காளைகளை அடித்து துன்புறுத்துதல், மது அருந்தச் செய்தல், கண்களில் எலுமிச்சை சாற்றை பிழிந்து விடுதல், பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தேய்த்து விடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு காளைகளுக்கு கோபத்தை வரவழைக்கின்றனர். இத்தகைய செயல்கள் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதால் இந்த விளையாட்டை அனுமதிக்க கூடாது என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.


