நியூசிலாந்து : ஜசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் பிரதமராகிறார்!

நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கானத் தேர்தலில் 48.9 சதவிகித வாக்குகளைப் பெற்று தாராள வாத தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாகப் பிரதமராகிறார்.
கொரோனா தொற்று பரவலின் காரணமாக செப்டம்பர் 19 அன்று நடைபெறுவதாக இருந்த நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தல் நான்கு வார காலங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நடப்பு பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், ஜூடித் காலின்ஸின் தேசியவாத கட்சியும் போட்டியிட்டன.
இந்நிலையில் 87 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி 48.9 சதவிகித வாக்குகளையும், தேசியவாத கட்சி 27 சதவிகித வாக்குகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இத்தகைய பெரும்பான்மையுடன் ஒரு கட்சி வாக்குகளைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
சனிக்கிழமை நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய ஜசிந்தா ஆர்டெர்ன்,” எனது அரசு ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பணியாற்றும் என நான் உறுதியளிக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
கரோனா தொற்றை சிறப்பாகக் கையாண்டதற்காக பல்வேறு உலக நாடுகளின் மத்தியில் நியூசிலாந்து பாராட்டு பெற்றது.கரோனா பரவலைத் தடுக்க நியூசிலாந்து நாடானது மிகச்சிறப்பாக போராடி வருவதாக உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.