இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பெங்களூர் சொர்க்கமாகவும், சென்னை நரகமாகவும் மாறிவிடும்!?
பெங்களூர்-ஓசூர் சாலையில் எலக்ட்ரானிக் சிட்டியில் இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ எம்பசிஸ், ஆரக்கிள், டெல் என பல ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன. சர்வதேச நிறுவனங்களும் செயல்படுகிறது. சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரும் மழை வெள்ளத்தால் பல ஐ.டி நிறுவனங்கள் ஒரு வாரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டன. இதையடுத்து பல ஐ.டி நிறுவனங்கள் பெங்களூருக்கு இடம் மாறின. ஊழியர்களையும் பெங்களூருக்கு இடம் மாற்றியது. புதிதாக வேலையில் சேரும் ஊழியர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் பெங்களூரில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தற்போது காவிரி பிரச்சினையால் பெங்களூரில் அடிக்கடி பந்த், வன்முறை நடப்பதால் ஐ.டி. நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 4 நாட்களுக்கு ஐ.டி நிறுவனங்களின் பணிகள் முற்றிலும் முடங்கிப்போயின. செப்டம்பர் 2-ந் தேதி நடந்த பாரத் பந்த்தின் போது ஐ.டி. நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மூடப்பட்டன. அதன் பிறகு காவிரி பிரச்சினைக்காகபந்த் நடத்தப்பட்ட போதும் ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது பஸ்கள், லாரிகள் எரிப்பு காரணமாக பெங்களூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து 4 நாட்களாக ஐ.டி. நிறுவனங்கள் செயல்படவில்லை. அதில் பணியாற்றும் பெரும் பாலான வெளியூர் ஊழியர்கள் வன்முறைக்கு பயந்து வெளியேறிவிட்டனர்.
இதனால் ஐ.டி. நிறுவனங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அசோசம் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கர்நாடகத்தில் ஐ.டிதுறை மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இதில் பெங்களூர் தான் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 22,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரையிலான இழப்பு ஏற்பட்டுள்ளது. இது உத்தேச தொகைதான் இதை விடவும் அதிகம் இழப்பு இருக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளது. பெங்களூரில் அடிக்கடி நடக்கும் மொழி வெறியர்களின் வன்முறை காரணமாக ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களும், தங்கள் இருப்பிடத்தை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்களும் கர்நாடகத்தில் தொழில் தொடங்கும் முடிவை கைவிடும் நிலையில் உள்ளன. குறிப்பாக வெள்ளத்தால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு இடம் பெயர்ந்த ஐ.டி நிறுவனங்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப முடிவு செய்துள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முகநூலில் வெளியான ரியாக்சனிது:
பெங்களூரிலிருந்து சென்னைக்கு மாற ஐடி நிறுவனங்கள் ஆலோசனை செய்கின்றன என்ற பதிவை நண்பர்கள் சிலர் பகிர்கிறார்கள். இதில் சற்றும் உண்மை இல்லை. கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ளம் வந்தபோது டிஎல்எப் வளாகத்தினுள் வெள்ளம் சென்றுவிட்டது. எண்ணற்ற மென்பொருள் நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்க சென்னைவாசிகள் கடும்சிரமத்தில் இருந்தார்கள். கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அவர்களை டிஎல்எப் வளாகத்துக்கு அழைத்து பிள்ளை பிடிக்கும் கும்பல்போல பணியாளர்களை பேருந்தில் ஏற்றி பெங்களூரில் இறக்கிவிட்டார்கள். சிலரை புனேவுக்கு போக சொன்னார்கள். தெலுங்கானா பிரச்சினையின்போது ஹைதராபாத்திலிருந்து ஐடி நிறுவனங்கள் சென்றுவிடும் என்று சொன்னார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பெங்களூர் சொர்க்கமாகவும், சென்னை நரகமாகவும் மாறிவிடும்.
ஐடிநிறுவனங்கள் கார்பரேட் மாடலில் இயங்குபவை. ஒரு டிவி செய்தியை பார்த்தேன். கலவரக்காரர்களில் சிலர் பெங்களூர் மக்களுக்கு குடிநீர் தருவதற்காகத்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று சொன்னார். இதில் உண்மை இருக்கிறது. காவேரி இப்போது விவசாயிகள் பிரச்சினை மட்டும் அல்ல. அது மறைமுகமாக கார்ப்பரேட் பிரச்சினையாகி விட்டது. பெங்களூர்,சென்னை போன்ற பெருநகரங்களில் குடிநீர் பிரச்சினை கடந்த பத்தாண்டுகளில் உருவானவை. அதுவும் கார்பரேட் நிறுவனங்கள் வந்தபிறகே. மேற்கு தாம்பரம், செங்கல்பட்டு தாண்டியுள்ள இடங்களில் தனியார் ஆட்கள் பலர் அவர்கள் நிலங்களில் ராட்சத குடிநீர் குழாய் பதித்து நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சி எடுக்கிறார்கள். அந்த குடிநீர் முழுவதும் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் எண்ணற்ற மென்பொருள் நிறுவனங்களுக்குதான் சப்ளை செய்யப்படுகிறது.
இந்தியாவில் பிரச்சினை இல்லாத மாநிலம் எதுவுமில்லை. இது கார்பரேட்டுக்கும் நன்றாக தெரியும். அதனால்தான் அந்தந்த மாநில மக்களை விட வெளிமாநில மக்களை வேலைக்கு நியமிக்கிறார்கள். நான்கைந்து மாநிலங்களில் கிளைகளை திறக்கிறார்கள். ஒருவேளை நேபாளத்திலோ, ஆப்கானிஸ்தானிலோ குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைத்தால் அங்கும் கிளையை தொடங்குவார்கள்.
ராஜீவ்காந்தி சாலை நாவலின் இறுதி அத்தியாயத்தில் சந்திரா என்ற சிஇஓவை ஒரு நிருபர் பேட்டி எடுப்பார். அந்த பகுதி இதுதான்.
கேள்வி:- உங்கள் போட்டி நிறுவனங்கள் இப்போது சீனாவில் வலுவாக காலூன்றி வருகின்றன. வரும் காலங்களில் சீன நிறுவனங்கள் அமெரிக்க மென்பொருள் துறையை கைப்பற்றுமா?
சந்திரா:- எனக்கு அப்படித் தோன்றவில்லை. குறிப்பாக பி.பி.ஓ துறையில் சீனர்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தவிர சீனர்களின் உள்நாட்டுத் மென்பொருள் தேவைகளே அதிகம் இருப்பதாலும் தேவைகளை காட்டிலும் அங்கு மென்பொருள் ஊழியர்கள் குறைவாக இருப்பதாலும் நாம் கவலைப்பட தேவையில்லை.
கேள்வி:- ஒருவேளை சீனர்கள் அவர்களது உள்நாட்டு மென்பொருள் தேவைகளுக்கு இந்தியாவை அணுகினால் வரவேற்பீர்களா?
சந்திரா:- கண்டிப்பாக. நாங்கள் ஏற்கனவே அங்கு எங்கள் கிளைகளை நிறுவி சில ஊழியர்களை பணியில் அமர்த்தி முன்னோட்டம் பார்த்து வருகின்றோம். உங்கள் கேள்வியின்படி பார்த்தால் நாங்கள் ஏற்கனவே சீனச் சந்தையையும் குறிவைத்துதான் இயங்கி வருவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் வரும் சந்திராவின் குரல் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் குரல். 2010 ல் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு சொன்ன பதில்தான் மேலே இருப்பது.


