மு.க.ஸ்டாலின் நடத்த போவது உலகத் தமிழ் மாநாடா? உலகத் தமிழ் செம்மொழி மாநாடா?
தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்திட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திட்டமிட்டு வருவதாகத் தமிழ்நாடு அமைச்சர்கள் அவ்வப்போது தகவல்களைத் தவழவிட்டுக் கொண்டு இருக்கின்றனர். எனவே இதுதொடர்பான சில வரலாற்று நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்த்துக் கொள்வது அவசியம்..!
திமுக ஆட்சிக்கு வந்தது 1967-ஆம் ஆண்டு. முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற அண்ணா, சென்னையில் மறு ஆண்டிலேயே உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, சர்வதேச அறிஞர்களையே வியக்க வைத்தார். தற்போது சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள 9 சிலைகளும் அந்த மாநாட்டின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் காட்சிப் பொருட்களாகும். அதன்பின் 1981-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர், மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்.
ஜனவரி 4ம் தேதி தொடங்கி நடந்த இந்த மாநாட்டுச் செய்தியாளனாக தினமலர் சார்பில் நானும் சென்னையில் இருந்து தமிழக அரசால் அழைத்துச் செல்லப்பட்டேன். மாநாடு முடியும் வரை அங்கேயே இருந்து செய்திகளைத் தொகுத்து எழுதும் வாய்ப்பு அடியேனுக்குக் கிட்டியது. நகரில் நகரக்கூட சிரமப்படும் அளவுக்குத் தமிழகம் மற்றும் தமிழினம் ஒருங்கிணைந்து மதுரையில் கூடிக் குதூலித்தது எனலாம். இதில் நானும் பங்கு எடுத்ததின் சான்றான அடையாள அட்டையை இத்துடன் இணைத்துள்ளேன்.
மாநாட்டின் திடலுக்குள் நுழைய இத்தகு அடையாள அட்டை அவசியம். எனவே தினமலர் உள்ளூர் நிருபராக இருந்த இளைஞர் என்னை அணுகி வேண்டினார். நான் பலமுறை திடலினுள் நுழைந்து, வெளியேறி…நுழைவு மையப் பொறுப்பாளர்களுக்கு நெருக்க நேசகன் ஆகிவிட்டிருந்தேன். ஆகவே இந்த அடையாள அட்டையை அந்த நிருபருக்குத் தந்து விட்டேன். முதல் சந்திப்பிலேயே இப்படியொரு அனுபவம். மாநாடு முடிந்து நான்கு மாதங்களுக்குப் பின் நான் வேண்டியபடியே இந்த அடையாள அட்டையை எனக்கு அவர் அஞ்சல் வழி அனுப்பிவைத்து என்னை அஞ்சவிடாமல் உதவினார். அவர் தான் தற்போது ஜெயா டிவி செய்திப் பொறுப்பாளராக இருக்கும் சகோதரர் தில்லை. அவர் என்னை ஏமாற்றியதில்லை.
முதல் மாநாடு 1966ல் மலேசிய நாட்டில் கோலாலம்பூரில் நடந்தது. இரண்டாம் மாநாடு 1968ல் சென்னையில் நடந்தது. மூன்றாம் மாநாடு 1970ல் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் மாநகரில் நிகழ்ந்தது. நான்காம் மாநாடு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் 1974ல் நிகழ்வுற்றது. இதன் பின்னர் ஐந்தாம் மாநாட்டைத் தான் எம்ஜிஆர் மதுரையில் 1981ல் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். ஆறாம் மாநாடு மலேசியாவில் 1987ல் கோலாலம்பூரில் மீண்டும் நடத்தப்பட்டது. ஏழாம் மாநாட்டை 1989ல் மொரீஷியஸ் நாட்டில் போர்ட் லூயிஸ் எனும் மாநகரில் நடத்தினர்.
எட்டாம் மாநாடு மீண்டும் தமிழகத்தைச் சந்தித்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவர் தஞ்சையில் இந்த மாநாட்டை 1995ம் ஆண்டு நடத்தினார். அடுத்த சில மாதங்களில் தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி வந்த ஜெயலலிதா, தனது பிரச்சார வியூகங்களில் ஒன்றாக இந்த மாநாட்டையும் கருதி பிரமிக்க வைக்கும் அளவுக்கு இதை பிரம்மாண்டப்படுத்தினார். இதிலும் நான் கலந்து கொண்டு, செய்திச் சேகரனாய் உலவினேன். மாநாடு வெற்றிகரமாகவே நடந்து முடிந்தது. ஆனால் அதன்பின்னர் அடுத்த ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தோல்வி முகத்தையே தொங்கவிட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.
ஒன்பதாம் மாநாட்டை மறுபடியும் கோலாலம்பூரில் 2015ம் ஆண்டு நடத்தி, மலேசியா பெருமைபட்டுக் கொண்டது. பத்தாம் மாநாடு 2019ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றுக்கிடையே 2010ல் உலகச் செம்மொழி மாநாட்டை அப்போதைய முதல்வர் கலைஞர் நடத்தினார். கொங்கு நாடே குலுங்கிச் சிலிர்க்கும் அளவுக்கான ஏற்பாடுகள், கண்டோரின் விழிகளை வியப்பால் விரியவைத்தன. அதற்கு அடுத்தாண்டு அவர் தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மும்முரத்தில் இருந்தார். எனவே இந்த மாநாட்டைச் சீக்கிரமாக நடத்தி முடித்து, இதனையே தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக்கிட அவர் திட்டமிட்டார். ஆனால் அவரும் அந்த சமயத்தில் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தான் சந்திக்க வேண்டி இருந்தது.
எனவே கலைஞரும், ஜெயலலிதாவும் மீண்டும் அடுத்தடுத்து முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்திருந்தாலும் உலகத் தமிழ் மாநாடு பற்றி மூச்சு விடவில்லை. இதில் சிந்திக்க வேண்டியச் செய்தியுண்டு. தமிழகத்தில் மற்ற மாநாடுகள் எல்லாம் “உலகத் தமிழ் மாநாடு” என்ற பெயரில் நடந்தன. ஆனால் கோவையில் கலைஞர் 2010ல் நடத்திய மாநாடு மட்டும் “உலகச் செம்மொழி மாநாடு” என்ற தலைப்பிட்டே நடத்தப்பட்டது. இப்பெயர் மாற்றத்துக்குக் காரணம் என்ன?
உலகளாவிய தமிழ் அறிஞர்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு அமைப்பு இயங்கி வந்தது. அதன் பெயர், “உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்”. இந்த அமைப்பினர் தான் உலக அளவில் அந்தந்த நாடுகளின் தமிழ் ஆர்வலர்களுடனும் புரவலர்களுடனும் தொடர்பு கொண்டு, மாநாடுகளை நடத்திட ஏற்பாடு செய்து வந்தனர். 2010ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்திட அப்போதைய முதல்வர் கலைஞர் திட்டமிட்டார். அதன்படி உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் அப்போதைய தலைவருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அக்கழகத்தின் தலைவர் ஜப்பான் நாட்டு, டோக்கியோ பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் நொபுரோ கராஷிமா பேச்சுவார்த்தைகளின் பின்னர், “சுமூக சூழல் சுண்டிப் போனது” என அறிவித்தார். “கோவையில் கலைஞர் சொல்லும் தேதியில் இந்த மாநாட்டை நடத்த முடியாது” என்று கராஷிமா வெறுப்புடன் குறிப்பிட்டார்.
“மாநாடு நடத்த குறைந்தபட்சம் ஓராண்டு கால அவகாசம் தேவை. அப்போது தான் உலக அளவிலான தமிழ் அறிஞர்களின் ஒருங்கிணைப்பைச் சாத்தியப்படுத்த முடியும். ஆராய்ச்சிக் குறிப்புகளை ஆய்ந்து தொகுக்கவும் போதிய கால இடைவெளி வேண்டும். எனவே கலைஞர் கேட்பது போன்று மூன்று மாத காலத்துக்குள் இந்த மாநாட்டை நடத்தி முடிக்க இயலாது” என்று நெபுரோ கராஷிமா திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
“என்ன செய்வது?” என்று யோசித்த கலைஞர், உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தையே கைகழுவி விட்டார். “தமிழக அரசே நேரடியாக மாநாட்டை நடத்தும்” என்று அதிரடியாக அறிவித்தார். இந்த சம்பவங்களுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் தான் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பிரகடனப்படுத்தப்பட்டது. எனவே “உலகச் செம்மொழி மாநாடு” என்ற தலைப்பில் கோவையில் மாநாடு நடக்கும் என்று அறிவித்து விட்டார். டோக்கியோவில் இருந்து சென்னைக்கு வந்திருந்த முனைவர் நெபுரோ கராஷிமா, திரும்பத் தன் தாய்நாட்டுக்குப் போய்விட்டார். சொல்லிச் சொல்லி மகிழும் அளவுக்கு இந்த மாநாட்டை கலைஞர் மிகப்பிரமாதமாக நடத்தி முடித்தார்.
இந்த மாநாட்டின் செய்தியாளர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர்.” இதற்கு முந்தைய, உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்றிருந்த செய்தியாளர்களுக்கு எத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன என்று தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப, அதனினும் மேலாகவே உரிய ஏற்பாடுகளைச் செய்யச் செய்தித்துறை திட்டமிட்டது. அதன்படி முந்தைய உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்ட அடியேனுக்கு அழைப்பு வந்தது. பட்டியலிட்ட நீண்ட உரைத் தொகுப்பைத் தயார் செய்தேன். அதனை முன்னெடுத்து இயக்குநரிடம் மூன்று மணி நேரம் தொடர்ந்து தொய்வு இன்றி இவை குறித்து விவரித்துக் கூறினேன். இவை அனைத்தும் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டன. செயல்பாட்டுக்கும் கொண்டு வரப்பட்டன.
கோவை மாநாடு முடிந்த கையோடு கோவையிலேயே மகிழ்ச்சிப் பெருக்குடன் கலைஞர் செய்தியாளர்களைச் சந்தித்து நீண்ட பேட்டி அளித்தார். அப்போது நான் எழுப்பிய வினாவை அவர் முக்கியமான கவனத்துடன் ஏற்றுத் தொடர் வாதம் செய்தார். அது இதோ:
“உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் மூலமாகத் தான் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து வந்தன. கோவையில் நடந்து முடிந்து இருப்பதோ செம்மொழி மாநாடு. அதுவும் தனி அமைப்பு மூலமாக அன்றித் தமிழக அரசே நேரடியாகத் தொடர்பு கொண்டு நடத்தி உள்ளது. இனி அடுத்தடுத்த மாநாடுகளை உலக நாடுகளில் நடத்த வேண்டுமானால் உலகப் பொதுக் கழகம் தேவை. எனவே அத்தகைய பொதுவான அமைப்பை உருவாக்க கலைஞர் ஏற்பாடு செய்வாரா?” -இதுதான் என் கேள்வி.
இதனைக் கருத்தூன்றிக் கேட்டுக் கொண்ட கலைஞர், “இதுகுறித்து தீவிர யோசனை செய்யப்படும். பொதுவான அமைப்பை உருவாக்குவது தொடர்பாக உலகப் பெரும் அறிஞர்களுடன் கலந்து பேசி உரிய நல்ல முடிவு எட்டப்படும். நிருபரின் இந்த யோசனைக்கு நன்றி” என்று கலைஞர் விரிவான விடை அளித்தார்.
ஆனாலும் அவரின் ஆட்சிக் காலம் வரையோ, அதன் பின்னரோ அத்தகு பொது அமைப்பாக புது அமைப்பு உருவாக்கப்படவே இல்லை. இந்த நிலையில் தமிழக அரசுப் பொறுப்பு ஏற்று இருக்கும் மு.க.ஸ்டாலின் முன் இருக்கும் நிலைப்பாடுகள் இதோ..
*ஏற்கனவே உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வந்து, தற்போது ஓய்ந்திருக்கும் உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தை நாடுவது.*கலைஞர் பாணியில் “உலகச் செம்மொழி மாநாடு 2.0” எனத் தலைப்பிட்டு நடத்துவது, புது அமைப்பை நிறுவி அதன் முதல் நிகழ்ச்சியாக நடத்துவது,
எதை முதல்வர் நாடப் போகிறார்?
நூருல்லா ஆர்.
செய்தியாளன்
06-08-2021.