படப்படப்பை ஏற்படுத்திய`இறைவன்` டிரைலர்- டைரக்டர் விளக்கம்!

மென்மையான வகையில் மனிதர்களின் உணர்வுப்பூர்வமான கதைகளான ‘வாமணன்’, ‘என்றென்றும் புன்னகை’. ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டரான ஐ.அஹமத் ஜெயம் ரவியின் `இறைவன்` படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ‘இறைவன்’ திரைப்படம், நேருக்கு மாறாக, மிக கொடூரமான வன்முறைக் காட்சிகள் கொண்ட படமாக உருவாகியிருக்கிறது. ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம்.ஜி இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த ‘இறைவன்’ சைக்கோ த்ரில்லர் ஜானர் திரைப்படமென்றாலும் இளம் பெண்களை மிக கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் பற்றிய படம் என்றாலும் டிரெயிலரில் அது தொடர்பான காட்சிகளைப் பார்க்கும்போதே படப்படப்பை ஏற்படுத்துகிறதே என்று என்று டைரக்டர் அஹமத்திடம் கேட்டப்போது, “முழுப் படத்தையும் பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு படப்படப்பு உணர்வு மட்டுமே இருக்காது. ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வுதான் இருக்கும். டிரெயிலரை பார்த்த எல்லோருமே சார் இது உங்க படமா..?என்று என்னிடம் கேட்கிறார்கள். ஒரே மாதிரியான படங்களை தொடர்ந்து எடுக்க முடியாது. வேற, வேற ஜானர்லதான் படங்களை இயக்கணும்ன்னு நினைச்சிருக்கேன். அந்த வகையில்தான் என்னுடைய அடுத்தப் படமான இந்த ‘இறைவன்’ திரைப்படம் சைக்கோ க்ரைம் சப்ஜெக்ட்டில் உருவாகியுள்ளது. இந்த வகையான படங்களை இப்படித்தான் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான ரசிகர்களுக்கு படம் பிடிக்கும். ரசிகர்களை நான் எந்த வகையிலும் ஏமாற்ற விரும்பவில்லை. சைக்கோ ஜானர் படத்தை எடுக்கிறேன் என்றால் அந்த ஜானரிலேயே என் படம்தான் பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் அது தொடர்பான தீவிரமான காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறேன். இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு, டிரைலரில் வேறு சில காட்சிகளை வைத்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இதுதான் என் படம்.. இது இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதற்காகத்தான் டிரைலரிலேயே அனைத்து வகையான மர்டர் காட்சிகளையும் காட்டியுள்ளேன். மறுபடியும் சொல்கிறேன் அதற்காக படம் முழுவதும் இப்படிப்பட்ட காட்சிகள்தான் இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம். இதில் ஒரு அழகான காதல் கதையும் இருக்கிறது. ஜெயம் ரவி – நயன்தாரா ஜோடி வெள்ளித் திரையில் வெற்றி ஜோடி என்பதால், படத்தில் வரும் அவர்களின் காதல் கதை, நிச்சயமாக ரசிகர்களை கவரக் கூடியதாக இருக்க வேண்டும். அதே சமயம் படத்தின் தன்மையை விட்டும் விலகக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்~ என்றார்.
இப்படி ஒரு கதை எழுத உங்களுக்கு தூண்டுதலாக இருந்தது எது? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் அஹமத், “அப்படி எதுவும் இல்லை, நான் ஜெயம் ரவியுடன் இரண்டு படங்கள் செய்கிறேன், அதில் ஒன்று தான் ‘இறைவன்’. ஜெயம் ரவி போலீஸ் வேடத்தில் பல படங்களில் நடித்து விட்டார், ஏன் விண்வெளிக்கு கூட அவர் சென்றுவிட்டார். அப்படி ஒரு நடிகரை வைத்து நான் படம் பண்ணும் போது, அந்த கதை வித்தியாசமானதாக இருக்க வேண்டும், அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்க கூடிய படமாக இருக்க வேண்டும், அப்போது தான் அவருக்கும் என்னுடன் தொடர்ந்து பணியாற்ற ஆர்வம் ஏற்படும். அதனால் தான் இந்த ஜானர் கதையை எழுதினேன், அவருக்கு மட்டும் அல்ல, நயன்தாராவுக்கும் இந்த கதை பிடித்ததால் தான் அவரும் நடிக்க சம்மதித்தார்.இந்த படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக முயற்சித்திருக்கிறேன், நடிகர்களின் நடிப்பை முன்னிலைப்படுத்தி தான் திரைக்கதை பயணிக்கும். அதனால் தான் இந்த படத்தில் நடித்த ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்ட அனைவருக்கும் இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும் படம் என்று சொல்கிறேன்.” என்றார்.
இந்தப் படத்தை வரும் செப்டம்பர் இறுதி வாரத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் இறுதி வாரத்தில் மிலாடி நபி விடுமுறையுடன் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அந்த விடுமுறை தினத்தை பயன்படுத்திக்கொள்ள ’இறைவன்’ படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதே செப்டம்பர் இறுதி வாரத்தில்தான் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பிரபாஸ் நடித்த ’சலார்’ படமும் வெளியாகவுள்ளது. அந்தப் படத்துடன் `இறைவன்’ படம் மோத வாய்ப்புள்ளது. தற்போது படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஹரி கே.வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.